(மேலும், சந்திரனுக்கு நாம் பல தங்குமிடங்களை/வட்டப்பாதைகளை) நிர்ணயித்துள்ளோம்....) எனும் குர்ஆனிய வசனத்துக்கான அர்த்தம்.

1

கேள்வி 1084

நான் இஸ்லாமிய மார்க்கத்தின் பால் ஈர்க்கப்பட்டவன், 1994-ஆம் ஆண்டின் தொடக்கத்திலிருந்தே திருக்குர்ஆனையும், அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் நபிமொழிகளையும் வாசிக்கத் தொடங்கினேன். நான் இஸ்லாத்தில் மாபெரும் ஆன்மீகத் திருப்தியைக் கண்டடைந்துள்ளேன். நான் இஸ்லாமிய மார்க்கத்தை ஏற்பதற்குத் திட்டமிட்டுள்ளதால், அதற்கான சில பாடங்களைக் கற்றுக்கொள்ள இருக்கிறேன். சூரா யாசீனில் உள்ள ஒரு இறைவசனத்தின் (வசனம் எண்: 39) அர்த்தத்தை என்னால் சரியாகப் புரிந்து கொள்ள முடியவில்லை, அதற்கு நீங்கள் எனக்கு உதவுவீர்கள் என நம்புகிறேன். அது அல்லாஹ்வின் இந்தக் கூற்றாகும்: (மேலும், சந்திரனுக்கு நாம் பல மனாஸில்களை நிர்ணயித்துள்ளோம்… இறுதி வரை). உங்களது உதவிக்கு நான் மிகவும் நன்றியுடையவளாக இருப்பேன். உலகெங்கிலும் உள்ள எண்ணற்ற மக்களுக்கு உங்களது பதில்களின் மூலம் நீங்கள் வழங்கி வரும் இந்த உதவிக்காக, அல்லாஹ் உங்களுக்கு நேர்வழி காட்டவும், உங்களைப் பாதுகாக்கவும், உங்களுக்கு பரக்கத் செய்யவும் நான் அவனிடம் பிரார்த்திக்கிறேன்.

பதில்

அல்லாஹ்வுக்கே புகழும், இறைவனின் தூதர் மீது பிரார்த்தனையும் சாந்தியும் உண்டாகட்டும்,

"முதலாவதாக, கேள்வி கேட்ட பெண்மணியே! இஸ்லாமிய மார்க்கமே உண்மையானது என்றும், அது மட்டுமே மனித உள்ளத்தின் தேவைகளை நிறைவு செய்து அதற்கு அமைதியையும் மகிழ்ச்சியையும் தரக்கூடிய ஒரே மார்க்கம் என்றும், உங்களிடமுள்ள இந்தத் தெளிவிற்காக உங்களுக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். நீங்கள் இஸ்லாத்தைப் பற்றி வாசித்த விஷயங்களின் தெளிவான தாக்கம் உங்களது கேள்வியின் வார்த்தைகளிலேயே வெளிப்படையாகத் தெரிகிறது. நீங்கள் ஒரு இந்து என்று எங்களிடம் கூறாமல் இருந்திருந்தால், உங்களது கேள்வியில் நீங்கள் கையாண்ட அழகிய முறையைக் கண்டு நீங்கள் ஒரு முஸ்லிம் பெண்மணி என்றுதான் நாங்கள் நினைத்திருப்போம்.

இங்கு நான் உங்களுக்கு வழங்க விரும்பும் மிக முக்கிய அத்தியாவசிய அறிவுரை என்னவென்றால், நீங்கள் சிறிதும் தாமதிக்காமல் விரைவாக இஸ்லாமிய மார்க்கத்திற்குள் நுழைய வேண்டும் என்பதாகும்; இதனை காலம் தாழ்த்தாமல் உடனே செய்ய வேண்டும். அனைத்து உண்மைகளும் ஒரு மனிதருக்குத் தெளிவாகத் தெரிந்த பிறகு, அவர் இஸ்லாத்திற்குள் நுழைவதற்கு ஏன் காலம் தாழ்த்த வேண்டும்?

இங்கு சுட்டிக்காட்ட வேண்டிய மற்றொரு முக்கியமான விடயமும் உள்ளது: அதாவது, இஸ்லாத்திற்குள் நுழைய விரும்பும் சிலர், தொழுகை போன்ற மார்க்கக் கடமைகளை ஓரளவிற்குக் கற்றுக்கொள்ளும் வரை தங்களது இஸ்லாமிய ஏற்பைக் காலம் தாழ்த்துகிறார்கள். மார்க்கத்தைக் கற்றறிவதில் ஒரு குறிப்பிட்ட தூரத்தைக் கடந்த பிறகுதான் இஸ்லாத்திற்குள் நுழைய வேண்டும் என்று அவர்கள் தவறாக எண்ணுவதே இதற்குரிய காரணமாக இருக்கலாம். ஆனால், இது முற்றிலும் தவறான புரிதலாகும்! ஒரு மனிதருக்கு உண்மை எதுவென்று தெளிவாகத் தெரிந்துவிட்டால், அவர் உடனடியாக அதனைப் பின்பற்றி உடனே இஸ்லாத்திற்குள் நுழைவது அவசியக் கடமையாகும். அதன் பிறகு, அவர் திருக்குர்ஆனையும் சுன்னாவையும் கற்றுக்கொள்ளலாம், மார்க்க அறிவைப் பெறலாம், மேலும் தனது சக்திக்கும் தகுதிக்கும் ஏற்ப கல்வியிலும் நற்செயல்களிலும் படிப்படியாக உயர்ந்து செல்லலாம். ஏனெனில், ஒரு மனிதருக்கு எப்போது மரணம் வரும் என்று அவருக்குத் தெரியாது. அவர் இஸ்லாத்தை ஏற்காத நிலையில் அல்லாஹ்வைச் சந்தித்தால், அவர் மறுமையில் முற்றிலும் அழிந்துபோனவர்களில் ஒருவராகிவிடுவார். அதுமட்டுமன்றி, ஒரு மனிதர் இஸ்லாத்திற்குள் நுழைந்த பிறகுதான் அவர் செய்யும் நற்செயல்களுக்குரிய கூலிகளும் நன்மைகளும் எழுதப்படும். எனவே, அவர் தனது இஸ்லாமிய ஏற்பைக் காலம் தாழ்த்தும்போது, தமக்குக் கிடைக்க வேண்டிய ஏராளமான நன்மைகளையும் பாக்கியங்களையும் அவர் இழந்துவிடுகிறார்; கடந்துபோன உன்னதமான ஆயுட்காலம் ஒருபோதும் மீண்டும் திரும்பி வராது."

" இறைவனின் பேரருளால் உண்மையை உணரும் நற்பாக்கியம் பெற்ற, பகுத்தறிவு மிக்க மதிப்பிற்குரிய சகோதரியே! உங்களது கேள்விக்கான விளக்கத்தை இப்போது பார்ப்போம்!, இனி,  சூரா யாசீனின் முப்பத்தொன்பதாவது இறைவசனத்தின் அர்த்தம் குறித்த உங்களது கேள்விக்கு நாம் வருவோம்.

இவ்விறைவசனத்தில் அல்லாஹுதஆலா கூறுகிறான்: '{மேலும், சந்திரனுக்கு நாம் பல தங்குமிடங்களை/வட்டப்பாதைகளை நிர்ணயித்துள்ளோம்} அதாவது, சூரியனைக் கொண்டு இரவும் பகலும் அறியப்படுவதைப் போல, மாதங்கள் கடந்து செல்வதைக் கணக்கிட்டுக் கொள்வதற்காக சந்திரனுக்கு நாம் மற்றொரு தனித்துவமான இயக்கத்தை ஏற்படுத்தியுள்ளோம். இதனை அல்லாஹுதஆலா மற்றொரு வசனத்தில் கூறுகிறான்: {(நபியே!) அவர்கள் உங்களிடம் பிறைகளைப் பற்றிக் கேட்கிறார்கள்; நீர் கூறுவீராக: அவை மனிதர்களுக்கும் ஹஜ்ஜுக்கும் உரிய காலக் காட்டிகளாகும்} (சூரா அல்-பகரா: 189). மேலும் அல்லாஹுதஆலா கூறுகிறான்: {அவன்தான் சூரியனை ஒளி வீசக்கூடியதாகவும், சந்திரனைப் பிரகாசிக்கக் கூடியதாகவும் ஆக்கினான்; மேலும் நீங்கள் ஆண்டுகளின் எண்ணிக்கையையும் கணக்கையும் அறிந்து கொள்வதற்காக அதற்குப் பல வட்டப்பாதைகளை நிர்ணயித்தான்} (சூரா யூனுஸ்: 5).

இவ்வாறு அல்லாஹுதஆலா சூரியனுக்கு அதற்குரிய தனித்துவமான ஒளியையும், சந்திரனுக்கு அதற்குரிய தனித்துவமான பிரகாசத்தையும் ஏற்படுத்தி, இவ்விரண்டின் இயக்கங்களுக்கு இடையிலும் மாறுபாடுகளை அமைத்துள்ளான். சூரியன் ஒவ்வொரு நாளும் உதித்து, அந்நாளின் இறுதியில் ஒரே சீரான ஒளியோடு மறைகிறது; ஆனால், கோடைகாலத்திலும் குளிர்காலத்திலும் அதன் உதிக்கும் மற்றும் மறையும் திசைகள் மாறுபடுவதன் காரணமாக, பகல் பொழுது நீண்டதாகவும் இரவு குறுகியதாகவும், பின்னர் இரவு நீண்டதாகவும் பகல் குறுகியதாகவும் மாறுகிறது. மேலும், சூரியனின் ஆதிக்கத்தைப் பகல் பொழுதில் அமைத்தான், எனவே அது பகலுக்குரிய கோளாகும். ஆனால் சந்திரனையோ, அதற்குப் பல வட்டப்பாதைத் தூரங்களை நிர்ணயித்துள்ளான்; அது ஹிஜ்ரி மாதத்தின் முதல் இரவில் மிக மெல்லியதாக, குறைந்த ஒளியோடு தோன்றும். பின்னர் இரண்டாவது இரவில் அதன் ஒளியும் தகுதியும் உயர்ந்து கொண்டே செல்லும். அது விண்ணில் உயர உயர - அதன் ஒளி சூரியனிடமிருந்து பெறப்பட்டதாக இருந்தாலும் - அதன் பிரகாசம் அதிகரித்துக் கொண்டே சென்று, பதினான்காம் இரவில் அதன் ஒளி முழுமைபெறும். அதன் பிறகு, மாதத்தின் இறுதி வரை அது தேய்ந்து கொண்டே சென்று, இறுதியில் 'அல்-உர்ஜூனுல் கதீம்' (உலர்ந்த பழைய பேரீச்சங்கிளை) போல மாறிவிடும்.

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்: 'இது பேரீச்சங்குலையின் அடிப்பகுதியாகும்.' இமாம் முஜாஹித் அவர்கள் கூறும்போது: 'அல்-உர்ஜூனுல் கதீம் என்பது காய்ந்துபோன கிளையாகும்' என்றனர். அதாவது, பேரீச்சம்பழங்கள் நிறைந்த அந்தக் குலையின் அடிப்பகுதியானது நீண்ட காலம் கடந்து பழமையாகும் போது, அது உலர்ந்து, வறண்டு, வளைந்துவிடுவதைக் குறிப்பதாக இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் விளக்கியுள்ளார்கள். (ஆதாரம்: தஃப்சீர் இப்னு கஸீர்).

மாதத்தின் இறுதியில் சந்திரன் அடையும் நிலையை இந்த 'உர்ஜூன்' என்ற கிளைக்கு உவமை காட்டி இவ்வசனத்தில் கூறப்பட்டிருப்பது, அரபு இலக்கிய நயத்தின் உச்சக்கட்ட அழகும், தன்னைச் சுற்றியுள்ள இயற்கைச் சூழலிலிருந்து ஒரு பொருளை எடுத்து உவமையாக ஒப்பிட்டுக் காட்டியுள்ள மிக உன்னதமான வடிவமும் ஆகும். அல்லாஹ்வே மிக அறிந்தவன்."

மூலநூட்கள்

அல்குர்ஆன் விளக்கம்
பிறை பார்த்தல்

மூலம்: 

அஷ்ஷெய்க் முஹம்மத் ஸாலிஹ் அல்முனஜ்ஜித்

at email

செய்திமடல்

தள செய்திகள் மற்றும் அவ்வப்போது புதுப்பிப்புகளைப் பெற அஞ்சல் பட்டியலில் இணையவும்

phone

இஸ்லாம் கேள்வி பதில் செயலி

உள்ளடக்கத்தை விரைவாக அணுகவும் ஆஃப்லைன் உலாவலுக்கும்

download iosdownload android