உங்களை இந்த இஸ்லாமிய நேர்வழியின் பால் செலுத்தி, அவனுக்குக் கட்டுப்பட்டு நடப்பதில் உங்களுக்கு ஒரு தனி இன்பத்தைத் தந்து, வழிபாடுகளிலேயே மிக உன்னதமான, சிறந்த வழிபாடான நோன்பை நோற்று மகிழும் பாக்கியத்தை உங்களுக்கு அருளிய அல்லாஹ்வின் மாபெரும் அருட்கொடைக்காக உங்களுக்கு எனது வாழ்த்துகள்! நோன்பின் சிறப்புகள் குறித்த சில விபரங்கள் கீழே தரப்பட்டுள்ளன:
நோன்பு நோற்பதற்கு மிகப் பெரிய சிறப்புகள் உண்டு; அது குறித்து வந்துள்ள ஆதாரப்பூர்வமான நபிமொழிகளில் சில: நிச்சயமாக அல்லாஹ் நோன்பைத் தனக்கே உரியதாகத் தனித்துவப்படுத்திக் கொண்டான்; அதற்கு அவனே கூலி வழங்குவான், மேலும் அதன் நற்கூலியை அதன் கணக்கின்றி பல மடங்காக அதிகரிப்பான்; இதனைத்தான் பின்வரும் நபி மொழி சுட்டிக்காட்டுகிறது [நோன்பைத் தவிர (மற்றவை மனிதனுக்காக அமையும்); நிச்சயமாக நோன்பு எனக்குரியது, அதற்கு நானே கூலி வழங்குவேன்.] (ஸஹீஹுல்புகாரி: 1904). மேலும், [நோன்பிற்கு நிகரானது எதுவும் இல்லை.] (நஸாயீ: 4/165). மேலும், [நோன்பாளியின் பிரார்த்தனை (துஆ) நிராகரிக்கப்பட மாட்டாது.] (பைஹகீ: 3/345). மேலும், [நோன்பாளிக்கு இரண்டு மகிழ்ச்சிகள் உள்ளன; ஒன்று அவர் நோன்பு துறக்கும் போது ஏற்படும் மகிழ்ச்சி, மற்றொன்று அவர் தன் இறைவனைச் சந்திக்கும் போது அவரது நோன்பின் காரணமாகக் கிடைக்கும் மகிழ்ச்சி.] (ஸஹீஹுல்முஸ்லிம்: 2/807).
மேலும், [மறுமை நாளில் நோன்பானது அடியானுக்காகப் பரிந்துரை செய்து, “என் இறைவனே! பகல் பொழுதில் இவரை நான் உணவிலிருந்தும் இச்சைகளிலிருந்தும் தடுத்திருந்தேன்; எனவே இவருக்காக எனது பரிந்துரையை ஏற்றுக்கொள்வாயாக!” எனக் கூறும்.] (அஹ்மத்: 2/174). மேலும், 'நோன்பாளியின் வாயிலிருந்து வீசும் வாடை அல்லாஹ்விடம் கஸ்தூரியின் நறுமணத்தை விடச் சிறந்ததாகும்.' (முஸ்லிம்: 2/807). மேலும், [நோன்பு என்பது (பாவங்களிலிருந்து காக்கும்) ஒரு கேடயமாகும், மேலும் நரக நெருப்பிலிருந்து பாதுகாக்கும் உறுதியான கோட்டையாகும்] (முஸ்னத் அஹ்மத்: 2/402). மேலும், [அல்லாஹ்வின் பாதையில் எவர் ஒரு நாள் நோன்பு நோற்கிறாரோ, அந்த ஒரு நாளின் காரணமாக அல்லாஹ் அவரது முகத்தை நரக நெருப்பை விட்டும் எழுபது ஆண்டுகள் தொலைவிற்குப் தூரமாக்குகிறான்.] (ஸஹீஹுல்முஸ்லிம்: 2/808). மேலும், [எவர் அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை. நாடி ஒரு நாள் நோன்பு நோற்று, அதுவே அவரது வாழ்வின் இறுதிச் செயலாக அமைந்தால் அவர் சுவனத்தில் நுழைவார்.] (முஸ்னத் அஹ்மத்: 5/391). மேலும், [சுவனத்தில் ரய்யான் என்று அழைக்கப்படும் ஒரு வாசல் உள்ளது; அதன் வழியாக நோன்பாளிகள் மட்டுமே நுழைவார்கள், அவர்களைத் தவிர வேறு எவரும் அதன் வழியே நுழைய மாட்டார்கள். அவர்கள் நுழைந்தவுடன் அவ்வாசல் அடைக்கப்பட்டுவிடும்] (ஸஹீஹுல் புகாரி: 1797).
உபரியான (தன்னார்வ) நோன்புகள் என்பவை கடமையான நோன்புகளில் ஏற்படக்கூடிய குறைகளை நிவர்த்தி செய்கின்றன. அதற்கு உதாரணங்களாக: ஆஷூரா நோன்பு, அரஃபா நோன்பு, அய்யாமுல் பீழ் நோன்புகள், திங்கள் மற்றும் வியாழன் நோன்புகள், ஷவ்வாலின் ஆறு நோன்புகள் மற்றும் முஹர்ரம், ஷஃபான் மாதங்களில் அதிகமாக நோன்பு நோற்பது ஆகியவற்றைக் குறிப்பிடலாம்.
'அய்யாமுல் பீழ்' (வெள்ளை நாட்கள்) என்பதன் நோக்கம் ஒவ்வொரு சந்திர மாதத்தின் (ஹிஜிரி மாதம்) பதின்மூன்று, பதினான்கு மற்றும் பதினைந்தாம் நாட்களாகும். அல்லாஹ் தஆலா கூறுகிறான்: {(நபியே!) அவர்கள் உங்களிடம் பிறைகளைப் பற்றிக் கேட்கிறார்கள்; நீர் கூறுவீராக: அவை மனிதர்களுக்கும் ஹஜ்ஜுக்கும் உரிய காலக் காட்டிகளாகும்.} எனவே, இஸ்லாமிய வழிபாடுகள் மற்றும் (இத்தா போன்ற) காலக் கணக்கீடுகள் யாவும் முற்றிலும் சந்திர மாதங்களின் அடிப்படையிலானவையே தவிர, சூரிய நாட்காட்டியின் அடிப்படையிலானவை அல்ல.
நீங்கள் சூரிய நாட்காட்டியின் (ஆங்கிலத் தேதிகளின்) அடிப்படையில் நோற்ற நோன்புகள் பெரும்பாலும் சந்திர நாட்காட்டியின் தேதிகளோடு ஒத்துப்போகாது. இருப்பினும், நீங்கள் அல்லாஹ்விற்காக அதனை ஓர் உபரி நோன்பாக நோற்ற காரணத்தினால், நீங்கள் நோற்ற அந்த நாட்களுக்கான பொதுவான நற்கூலி உங்களுக்கு அல்லாஹ்வின் நாட்டம் இருந்தால் கண்டிப்பாகக் கிடைக்கும்.
ஆனால், அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் பிரத்தியேகமாக வலியுறுத்திய அந்த 'அய்யாமுல் பீழ்' நோன்பின் தனித்துவமான சிறப்புக் கூலியை நீங்கள் பெற விரும்பினால், நீங்கள் இஸ்லாமிய சந்திர நாட்காட்டியைக் (ஹிஜிரி தேதிகளை) கற்றுக்கொண்டு, அதன் அடிப்படையில் உங்களது நோன்புகளை அமைத்துக் கொள்ள வேண்டும். அல்லாஹ் உங்களது நற்செயல்களை அதிகப்படுத்தவும், உங்களைத் தன் மார்க்கத்தில் உறுதியாக வைத்திருக்கவும், அவனுக்கு உகந்த நற்செயல்களைச் செய்ய உங்களுக்குத் தௌஃபீக் அளிக்கவும், உமக்கான நற்கூலிகளை வாரி வழங்கவும் அவனிடம் பிரார்த்திக்கிறோம்; நிச்சயமாக அவன் பிராத்தனைகளைச் செவியேற்பவனாகவும், பதிலளிப்பவனாகவும் இருக்கிறான். எனது அருமைச் சகோதரரே! உங்களது நோன்பின் பிரார்த்தனைகளில் எங்களையும் மறந்துவிடாதீர்கள். அல்லாஹ் நமது நபி முஹம்மத் அவர்கள் மீது தன் அருளைப் பொழிவானாக.