இமாம் இப்னு ஹஜர் அல்-அஸ்கலானி அவர்கள் மீலாது விழா கொண்டாடுவதை அனுமதித்துள்ளார்களா.

கேள்வி 216480

உண்மையிலேயே இமாம் இப்னு ஹஜர் அல்-அஸ்கலானி அவர்கள் மீலாது விழா கொண்டாடுவதை அனுமதித்துள்ளார்களா? ஏனெனில், எங்களது அல்ஜீரியா நாட்டில் உள்ள பல மார்க்க அறிஞர்கள், மீலாது விழா கொண்டாடலாம் என்பதற்கு இப்னு ஹஜர் அல்-அஸ்கலானி அவர்களின் அனுமதியைத் தான் ஆதாரமாகக் காட்டுகிறார்கள்.

பதில்

அல்லாஹ்வுக்கே புகழும், இறைவனின் தூதர் மீது பிரார்த்தனையும் சாந்தியும் உண்டாகட்டும்,

முதலாவதாக: மீலாதுன் நபி கொண்டாடுவது என்பது மார்க்கத்தில் புதிதாகத் தோற்றுவிக்கப்பட்ட ஒரு புதுமையாகும் (பித்அத்). இதனை உருவாக்கியவர்கள் வழிகெட்ட இஸ்லாமிய மார்க்கத்தை வெட்டும் வெளியேறிய பாதிமிய்யூன்கள் உபைதிய்யூன்கள் என்ற பிரிவினரைச் சேர்ந்த ஆட்சியாளர்களே. சிறப்பிக்கப்பட்ட முதல் மூன்று நூற்றாண்டுகளைச் சேர்ந்த எந்த ஒரு அறிஞரும் இதனை அனுமதித்ததாகவோ அல்லது அதனைக் கொண்டாடியதாகவோ எங்கும் காண முடியாது.

கூடுதல் விபரங்கள் மற்றும் மார்க்க விளக்கங்களுக்குக் கேள்வி எண்: (148053) மற்றும் கேள்வி எண்: (128530) ஆகியவற்றுக்கான பதில்களைப் பார்வையிடவும்.

இரண்டாவதாக: மார்க்கச் சட்டங்களை இயற்றுவதில் குர்ஆனும் சுன்னாவுமே அடிப்படை மூலாதாரங்களாகும். மார்க்க அறிஞர்கள் நபிமார்களின் வாரிசுகள் ஆவர்; அவர்களே மார்க்க அறிவு எனும் கொடியை தாங்கி நிற்பவர்கள், நிச்சயமாக அல்லாஹ், மார்க்க அறிஞர்களுக்கு மார்க்க விளக்கத்தை வழங்கியுள்ளான். அவர்களில் ஒவ்வொருவரும் அல்லாஹுதஆலா அவர்களுக்கு இலகுவாக்கிய அளவு புரிந்து கொள்வார்கள். எனவே, ஒவ்வொரு அறிஞரும் கூறும் அனைத்துமே அவசியம் சரியாக இருக்கும் என எதிர்பார்க்க முடியாது. ஒரு மார்க்க அறிஞர் என்பவர் ஆதாரங்கள் அடிப்படையில் சுய ஆய்வு செய்து முடிவு செய்யக்கூடியவரே. அவர் அவ்வாறு ஆய்வு செய்து அது சரியாக இருந்தால் அவருக்கு ஆய்வுக்கான ஒரு கூலி மற்றும் அதன் சரியான பெறுபேரை அடைந்ததற்கான இன்னொரு கூலி என இரண்டு கூலிகள் கிடைக்கும். அவ்வாறின்றி அவரின் ஆய்வு முடிவு பிழைத்துவிட்டால் அவரின் ஆய்வுக்காக ஒரு கூலி கொடுக்கப்படும் அவரின் தவறு மன்னிக்கப்படும்.

ஷேஃக் இப்னு பாஸ் (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்கள்:

மார்க்க அறிஞர்களுள் சுய ஆய்வு செய்யக்கூடிய விஷயத்தில் இஸ்லாமிய மார்க்கத்தின் அடிப்படையான விதி இதுவேயாகும்: சத்தியத்தைத் தேடுவதிலும் அதன் ஆதாரங்களை ஆராய்வதிலும் எவர் ஒருவர் சுய ஆய்வு செய்கிறாரோ அவர் சரியான முடிவை அடைந்தால் அவருக்கு இரண்டு நற்கூலிகள் உண்டு. ஒருவேளை அவர் சரியான முடிவை அடையத் தவறிவிட்டால், அவருடைய அந்தச் சுய ஆய்விற்காக அவருக்கு ஒரு நற்கூலி உண்டு. (நூல்: மஜ்மூஃ ஃபதாவா இப்னு பாஸ், பாகம்:6, பக்கம்:89).

இமாம் அஸ்-ஸுயூத்தி (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்கள்:

அக்காலகட்டத்தின் தலைசிறந்த ஹதீஸ் கலை அறிஞரும், ஷைகுல் இஸ்லாமுமான அபுல்ஃபழ்ல் இப்னு ஹஜர் அவர்களிடம் மீலாது விழா கொண்டாடுவதன் மார்க்கச் சட்டம் குறித்துக் கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள் பின்வருமாறு பதிலளித்தார்கள்:

“அடிப்படையில் மீலாது விழா என்பது ஒரு மார்க்கப் புதுமையே ஆகும். சிறந்த மூன்று நூற்றாண்டுகளைச் சேர்ந்த நேர்மையான முன்னோர்களில் யாரும் இத்தகையதொரு செயல் செய்ததாக பதியப்படவில்லை. எனினும், இந்த விழாவானது நன்மையான காரியங்களையும், அதற்கு முரணான (தீமையான) காரியங்களையும் உள்ளடக்கியதாக அமைந்துள்ளது. எனவே, எவரொருவர் இந்த விழாவை நடத்தும் போது அதில் உள்ள நன்மையான காரியங்களை மட்டும் நாடி, தீமையான காரியங்களை முற்றிலுமாகத் தவிர்த்துக் கொள்கிறாரோ, அவருக்கு அது ஓர் "அழகிய புதுமையாக" (பித்அத் ஹஸனா) மாறும். அவ்வாறில்லையெனில், அது “பித்ஆ ஹஸனா” என்ற அழகிய புதுமையாக கருதப்படமாட்டாது”

தொடர்ந்து கூறுகிறார்: “ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்ட ஒரு மார்க்க அடிப்படையைக் கொண்டு, இந்த(நல்ல விடயங்களை மாத்திரம் உள்ளடக்கிய) மீலாது விழாவை ஒரு சரிகாணுவதற்கு காரணத்தைக் கண்டறிவது எனக்குச் சாத்தியமாகத் தோன்றியது. அதாவது, நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் மதீனாவிற்கு வந்த போது, யூதர்கள் ஆஷூரா நாளில் நோன்பு நோற்பதைக் கண்டார்கள். அது குறித்து நபியவர்கள் அவர்களிடம் கேட்ட போது, அவர்கள்: "இது அல்லாஹ் ஃபிர்அவ்னை மூழ்கடித்து, நபி மூஸா (அலைஹிஸ்ஸலாம்) அவர்களைப் பாதுகாத்த நாளாகும்; எனவே, அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தும் பொருட்டு நாங்கள் இந்நாளில் நோன்பு நோற்கிறோம்" என்றனர். இவ்விடயம் புகாரி, முஸ்லிம் ஆகிய இரு நூல்களிலும் பதியப்பட்டுள்ளது.

இதிலிருந்து நாம் விளங்குவது என்னவென்றால்: ஒரு குறிப்பிட்ட நாளில் அல்லாஹ் நமக்கு வழங்கிய ஒரு பேரருளுக்காகவோ அல்லது அவன் தடுத்த ஒரு பெரும் தீமைக்காகவோ, அவனுக்கு நன்றி செலுத்துவது என்பது மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்ட ஒன்றாகும். மேலும், ஒவ்வொரு வருடமும் அதே நாள் வரும் போது அந்த நன்றிநவிலலை நாம் மீண்டும் புதுப்பிக்கலாம் என்பதும் இதிலிருந்து தெளிவாகிறது.

"அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்துவது என்பது அல்லாஹ்வுக்கு சிரம் பணிதல்(ஸஜ்தா), நோன்பு நோற்றல், தர்மம் செய்தல் மற்றும் குர்ஆன் ஓதுதல் போன்ற பல்வேறு வகையான வழிபாடுகளின் மூலமாக நிறைவேற்றப்படுகிறது. இந்த குறிப்பிட்ட நாளில் அருள் நிறைந்த நபியவர்களின் வருகையை  விட என்ன பெரிய ஒரு அருள் இந்த உலகத்தில் இருந்துவிடப்போகிறது!!??

இதன் அடிப்படையில், ஆஷுரா நாளன்று நிகழ்ந்த மூஸா (அலை) அவர்களின் வரலாற்று நிகழ்வோடு ஒத்துப்போகும் வகையில், அந்த குறிப்பிட்ட நாளைத் துல்லியமாகக் கணித்துத் தேர்ந்தெடுப்பது அவசியமாகும். யார் இதனை கவனத்தில் கொள்ளவில்லையோ, அவர் (ரபியுல் அவ்வல்) மாதத்தின் எந்த நாளில் கொண்டாடினாலும் அதை பொருட்படுத்தமாட்டார். மாறாக சிலர் இதில் வரம்பு மீறிச் சென்று, அதனை வருடத்தின் ஏதோவொரு நாளுக்கு மாற்றிவிட்டனர்; இதிலும் பல விவாதங்களும், விமர்சனங்களும் உள்ளன.

மீலாது விழா கொண்டாட்டம் பற்றிய அடிப்படை இதுவேயாகும்.

அந்நாளில் செய்ய வேண்டிய அமல்களைப் பொறுத்தவரை: குர்ஆன் ஓதுதல், உணவளித்தல் மற்றும் தர்மம் செய்தல் போன்ற முன்னரே குறிப்பிடப்பட்ட நற்செயல்கள் மூலமாகவும், நன்மைகள் செய்வதற்கும் மறுமைக்காக உழைப்பதற்கும் இதயங்களைத் தூண்டக்கூடிய வகையிலான நபிபுகழ் பாடல்கள் மற்றும் உலகப் பற்றற்ற கவிதைகளைப் பாடுவதன் மூலமாகவும், அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்துவதை வெளிப்படுத்தும் காரியங்களுடன் மட்டுமே அதைச் சுருக்கிக் கொள்ள வேண்டும்.

அந்நாளில் நிகழும் (பாடல்) கேட்டல், கேளிக்கை கூத்துகள் மற்றும் இதர விஷயங்களைப் பொறுத்தவரை: அவற்றில் மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்ட, அந்நாளின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தக்கூடிய காரியங்களை அதனுடன் இணைத்துக் கொள்வதில் தவறில்லை. ஆனால், எவை மார்க்கத்தில் விலக்கப்பட்டதாக(ஹராம்) அல்லது வெறுக்கத்தக்கதாக(மக்ரூஹ்) இருக்கிறதோ, அவை கண்டிப்பாகத் தடுக்கப்பட வேண்டும்; அதேபோன்று, தவிர்ப்பது தான் ஏற்றமானது என கருதப்படும் காரியங்களும் அவ்வாறே தடுக்கப்பட வேண்டும்.” (அல்-ஹாவி லில்ஃபதாவி: 1/229).

இங்கு பின்வரக்கூடிய விடயங்கள் கூறப்பட வேண்டும்:

மேலே பதிவு செய்யப்பட்ட இமாம் இப்னு ஹஜர் அவர்களின் கருத்தை போன்று கோணங்களில் பார்க்கலாம்:

முதலாவது:  மீலாது விழா கொண்டாடுவது என்பது ‘ஸலஃபுஸ் ஸாலிஹீன்கள்’ எனப்படும் நன்மக்களிடம் இருக்கவில்லை வாசகம் மிகத்தெளிவாக உறுதிப்படுத்துகின்றது; எனவே, இது ஒரு புதிய அனாச்சாரமாகும். இப்னு ஹஜர் அவர்கள் தனது ஃபத்வாவின் ஆரம்பத்தில் குறிப்பிட்ட இந்த முக்கியமான கருத்தை நாம் அலட்சியப்படுத்தக் கூடாது.

இரண்டாவது: அந்நாளில் செய்ய வேண்டிய அமல்களைப் பொறுத்தவரை: குர்ஆன் ஓதுதல், உணவளித்தல் மற்றும் தர்மம் செய்தல் போன்ற முன்னரே குறிப்பிடப்பட்ட நற்செயல்கள் மூலமாகவும், நன்மைகள் செய்வதற்கும் மறுமைக்காக உழைப்பதற்கும் இதயங்களைத் தூண்டக்கூடிய வகையிலான நபிபுகழ் பாடல்கள் மற்றும் உலகப் பற்றற்ற கவிதைகளைப் பாடுவதன் மூலமாகவும், அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்துவதை வெளிப்படுத்தும் காரியங்களுடன் மட்டுமே அதைச் சுருக்கிக் கொள்ள வேண்டும் என்று  இப்னு ஹஜர் கூறியுள்ளார்கள்.

ஆனால், இன்றைய காலகட்டத்தில் மீலாது விழா மற்றும் புதிதாகத் தோற்றுவிக்கப்பட்ட ஏனைய கொண்டாட்டங்களில் மக்களின் நிலைப்பாடு, இமாம் ஹாஃபிழ் இப்னு ஹஜர் அவர்கள் விதித்த வரம்புகளுக்கு முற்றிலும் முரணாகவே உள்ளது. இன்று பெரும்பாலான மக்கள் செய்யும் விடயங்களை அறிந்த அனைவரும், இந்த மீலாது விழாக்களில் அரங்கேறும் யாவும் பித்அத்களாகவும் மார்க்கத்திற்கு எதிரான காரியங்களாகவுமே மாறியுள்ளதை கண்டுகொள்வர்; இன்னும் சொல்லப்போனால், அல்லாஹ் மட்டுமே அறிந்த பல மாபெரும் பாவங்களும் மார்க்க வரம்புமீறல்களும் அவற்றில் நிறைந்துள்ளன!!.

ஆஇஷா (ரழியல்லாஹு அன்ஹா) அவர்கள் அறிவிக்கிறார்கள்: இன்று இந்த பெண்கள் செய்யும் அனாச்சாரங்களை நபியோர்கள் கண்டிருந்தால், பனூஇஸ்ராஈல் சமூகத்து பெண்கள் தொழுகைக்கு செல்வது தடை செய்யப்பட்டிருந்தது போன்று இவர்களையும் தொழுகைக்கு செல்வதை விட்டும் தடை செய்திருப்பார்கள்](நூட்கள்:ஸஹீஹுல்புகாரி:869, ஸஹீஹுல் முஸ்லிம்: 445).

மார்க்கத்தில் எவ்வித கருத்து வேறுபாடும் இன்றி அனுமதிக்கப்பட்ட  ஒரு விடயத்திலேயே, மக்களின் நிலை மாறியபோது விசுவாசிகளின் அன்னை ஆயிஷா (ரழி) அவர்கள் இவ்வாறு கடுமையாகக் கூறியுள்ளார்கள் என்றால்; அடிப்படையிலேயே மார்க்கத்தில் புதிதாகத் தோற்றுவிக்கப்பட்ட இந்த மீலாது விழாவின் நிலை என்னவாக இருக்கும்?! அதுமட்டுமன்றி, காலப்போக்கில் அதில் புகுந்துவிட்ட, இன்று கண்கூடாகக் காணக்கூடிய அனாச்சாரங்களும் (பித்அத்களும்) மார்க்கத்திற்கு எதிரான (ஹராமான) காரியங்களும் அதில் மலிந்து கிடக்கும்போது, அதன் நிலை இன்னும் எவ்வளவு கடுமையானதாக இருக்கும்?!.

அறிவுடையோர் அனைவரும் இவ்விடயத்தில், இமாம் ஷாதிபீ (ரஹ்மதுல்லாஹி அலைஹி) அவர்களின் பின்வரும் கருத்தை ஆழமாகச் சிந்தித்துப் பார்க்க வேண்டும்:

மார்க்கக் கடமைகள் சுமத்தப்பட்ட  ஒரு முஸ்லிம், தான் முகங்கொடுக்கும் ஒவ்வொரு மார்க்கப் விவகாரங்களிலும் தனக்குச் சாதகமான சலுகைகளையும், தன் மனோஇச்சைக்கு இணங்கக்கூடிய கருத்துக்களையும் மட்டுமே தேடிப் பின்பற்றத் தொடங்கிவிட்டால்; அவர் தன் கழுத்திலிருந்து இறையச்சம்(தக்வா) எனும் கயிற்றைக் கழற்றி எறிந்துவிட்டார் என்றும், தன் மனோஇச்சையைப் பின்பற்றுவதில் வரம்பு மீறிச் சென்றுவிட்டார் என்றுமே அர்த்தமாகும். மேலும், அல்லாஹ்வும் அவனது தூதரும் எதனை மார்க்கமாக எதனை முடிவு செய்து விட்டனரோ அதனை அவர் முறித்துவிட்டவராகவும்; எதனை முதன்மைப்படுத்தினார்களோ அதனை அவர் பிற்படுத்திவிட்டாவராகவே கருதப்படுவார்” (அல்-முவாஃபகாத்: 3/123).

அல்லாஹ்வே மிக அறிந்தவன்.

மூலநூட்கள்

சட்டவாக்க மூலாதாரங்கள்
சிறப்புகள்
பித்ஆ

மூலம்

இஸ்லாம் கேள்வி பதில் இணையதளம்

at email

செய்திமடல்

தள செய்திகள் மற்றும் அவ்வப்போது புதுப்பிப்புகளைப் பெற அஞ்சல் பட்டியலில் இணையவும்

phone

இஸ்லாம் கேள்வி பதில் செயலி

உள்ளடக்கத்தை விரைவாக அணுகவும் ஆஃப்லைன் உலாவலுக்கும்

download iosdownload android