அல்லாஹ்வின் அழகிய பண்புகள் விவகாரத்தில் நான்கு இமாம்களின் தூய வழிமுறையும், அவை குறித்து பார்க்க வேண்டிய மூல நூட்களும்.

கேள்வி 301643

"எனது அருமைச் சகோதரருக்கு அகீதா விவகாரத்தில், குறிப்பாக அல்லாஹ்வின் திருநாமங்கள் மற்றும் அவனது பண்புகள் தொடர்பான விடயத்தில் அல்லாஹ்வின் தூதர் மற்றும் ஸலஃபுகளின்  தூய வழிமுறையை அடைவதற்கு நான் அறிவுரை கூற விரும்புகிறேன். துரதிர்ஷ்டவசமாக, அவர் தற்காலத்தில் இமாம்கள் அனைவரும் அஷ்அரிய்யா கொள்கையைப் பின்பற்றுபவர்கள் என்று நம்புகிறார் என நினைக்கிறேன்; ஏனெனில் அவர் அல்லாஹ்வின் கை (யத்) என்பதன் நேரடிப் பொருளை ஏற்றுக்கொள்வதற்குப் பதிலாக, அதற்கு 'ஆற்றல்' அல்லது 'வலிமை' என்று விளக்கம் அளிக்கிறார்.

எனவே நான் பின்வருமாறு கேட்கிறேன்: பின்வரும் இமாம்களின் தூய கொள்கைகளை குறிப்பாக அல்லாஹ்வின் திருநாமங்கள் மற்றும் பண்புகள் தொடர்பான அவர்களின் உறுதியான நிலைப்பாட்டைத் தெளிவாக வெளிப்படுத்தக்கூடிய ஆதாரப்பூர்வமான மூல நூட்கள் எவை? இமாம் அபூ ஹனீஃபா, இமாம் மாலிக் பின் அனஸ்,இமாம் அஷ்-ஷாஃபிஈ,இமாம் அஹ்மத் பின் ஹன்பல்,இமாம் அல்-கஸ்ஸாலி, இமாம் அந்-நவவீ, இமாம் இப்னு கஸீர், இமாம் இப்னு அபீ ஸைத் அல்-கைரவானி, இமாம் அபுல் ஹஸன் அல்-அஷ்அரீ.

பதில்

அல்லாஹ்வுக்கே புகழும், இறைவனின் தூதர் மீது பிரார்த்தனையும் சாந்தியும் உண்டாகட்டும்,

முதலாவதாக:
இவ்விடயத்தில் நபித்தோழர்கள் மற்றும் அவர்களை பின்துயர்ந்தவர்கள்(தாபிஊன்கள்) (ரலியல்லாஹு அன்ஹும்) உள்ளிட்ட ஸலஃபுஸ் ஸாலிஹீன்களின் தூய கொள்கையாவது: அல்லாஹ்வே அவனைப் பற்றி எவ்வாறெல்லாம் சொல்லியிருக்கிறானோ அல்லது அவனது தூதர் அவனைப் பற்றி எவ்வாறு வர்ணித்துள்ளார்களோ, அந்த அழகிய பண்புகளை எவ்வித ஒப்பிடுதலோ, உருவகப்படுத்துதலோ, மாற்று விளக்கங்களோ மற்றும் அடியோடு மறுத்தலோ இன்றி அப்படியே ஏற்றுக்கொள்வதாகும். இது குறித்து அவர்களிடமிருந்து வெண்ணிலடங்காத சான்றுகள் வந்துள்ளன.

பின்வரும் புகழ்பெற்ற மூல நூட்களின் வாயிலாக இந்த உன்னத ஆதாரங்களை நேரடியாகப் படித்துத் தெரிந்து கொள்ள முடியும்:

  • இமாம் அப்துல்லாஹ் பின் அஹ்மத் பின் ஹன்பல் எழுதிய "அஸ்-ஸுன்னா".
  • இமாம் இப்னு குஸைமா எழுதிய "அத்-தவ்ஹீத்".
  • இமாம் அல்-லாலகாயீ எழுதிய "ஷரஹ் உஸூல் இஃதிகாத் அஹ்லிஸ் ஸுன்னா".
  • இமாம் அஸ்-ஸாபூனி எழுதிய "அகீததுஸ் ஸலஃப் வ அஸ்ஹாபில் ஹதீஸ்".
  • இமாம் அல்-ஆஜுர்ரி எழுதிய "அஷ்-ஷரீஆ".
  • இமாம் அல்-அஸ்பஹானி எழுதிய "அல்-ஹுஜ்ஜா ஃபீ பயானில் மஹஜ்ஜா" மற்றும் இதர நூல்கள்.

இரண்டாவதாக:
அல்லாஹ்வின் 'கை' என்ற பண்பிற்கு 'ஆற்றல்' அல்லது 'வலிமை' என்று மாற்று விளக்கம் அளிப்பது என்பது ஜஹ்மியாக்கள் மற்றும் முஃதஸிலாக்களின் வழிகெட்ட கொள்கையாகும்; பிற்கால அஷ்அரிய்யாக்களும் இத்தகைய வாதத்தையே கையாண்டுள்ளனர்.

உண்மையில், 'அல்லாஹ்வின் கை' என்பது அவனது உன்னதப் பெருமைக்கும் முழுமைக்கும் தகுதியான அவனது தூய பண்புகளில் ஒன்றாகும். அது படைப்பினங்களின் கைகளுக்கு எவ்விதத்திலும் ஒப்பாகாது. மாறாக, வர்ணிக்கப்படும் ஒவ்வொரு பொருளுக்கும் அதற்கேற்ற தகுதியான பண்பு இருப்பது யதார்த்ததான விதியாகும்.

மார்க்க இமாம்கள் பலர் இந்த உண்மையை மிகத் தெளிவாகப் சொல்லியுள்ளனர்; அவர்களுள் இமாம் அபூ ஹனீஃபா (ரஹிமஹுல்லாஹ்), இமாம் அத்-திர்மிதி (ரஹிமஹுல்லாஹ்) மற்றும் இமாம் அபுல் ஹஸன் அல்-அஷ்அரி (ரஹிமஹுல்லாஹ்) ஆகியோர் முதன்மையானவர்களாவர்.

இமாம் அபூ ஹனீஃபா (ரஹிமஹுல்லாஹ்) தங்களின் "அல்-ஃபிக்ஹுல் அக்பர்" நூலில் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளதாவது:

"அல்லாஹ் தன் திருவேதமான குர்ஆனில் விவரித்துள்ளது போல அவனுக்குக் கையும், முகமும், நஃப்ஸும் இருக்கின்றன. குர்ஆனில் அல்லாஹ் விவரித்துள்ள முகம், கை, நஃப்ஸ் ஆகிய யாவும் அவனது யதார்த்தப் பண்புகளாகும்; அவற்றின் வடிவம் நமக்கு தெரியாது. 'அவனது கை என்பது அவனது ஆற்றல் அல்லது அவனது அருட்கொடை' என்று ஒருபோதும் கூறக் கூடாது; ஏனெனில் அவ்வாறு கூறுவது அவனது எதார்த்தப் பண்பையே அடியோடு பாழாக்குவதாகும். இதுவே வழிகெட்ட கதரிய்யாக்கள் மற்றும் முஃதஸிலாக்களின் வாதமாகும். மாறாக, அவனது கை என்பது வடிவம் கற்பிக்கக்க முடியாத அவனது எதார்த்தப் பண்பாகும்; அவனது கோபமும் அவனது உவப்பும் (திருப்தியும்) வடிவம் நிர்ணயிக்க முடியாத அவனது உன்னதப் பண்புகளேயாகும்."
(நூல்: முல்லா அலி அல்காரியின் விளக்கவுரையுடன் கூடிய 'அல்-ஃபிக்ஹுல் அக்பர்' - பக்கம்: 58).

இமாம் அத்-திர்மிதி (ரஹிமஹுல்லாஹ்) தங்களின் 'ஸுனன் திர்மிதி' நூலில் (ஹதீஸ் எண்: 662 - 'நிச்சயமாக அல்லாஹ் தர்மங்களை ஏற்றுத் தங்களின் வலக்கரத்தால் வாங்குகிறான்... என்ற ஹதீஸைப் பதிவு செய்ததற்குப் பிறகு) குறிப்பிட்டுள்ளதாவது:

"இந்த ஹதீஸ் மற்றும் பண்புகள் குறித்து வந்துள்ள இது போன்ற இதர அறிவிப்புகள் மற்றும் ஒவ்வொரு இரவிலும் இறைவன் கீழ்வானத்திற்கு இறங்கி வருதல் ஆகிய விவகாரங்களில் மார்க்க அறிஞர்கள் பலர் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளனர்: 'நிச்சயமாக இந்த அறிவிப்புகள் யாவும் ஆதாரப்பூர்வமாக நிருபிக்கப்பட்டவை; இவற்றின் மீது முழுமையாக ஈமான் கொள்ள வேண்டும்; படைப்புகளோடு ஒப்பிட்டு எவ்விதக் கற்பனையும் செய்யக் கூடாது; மேலும் இதன் வடிவம் எப்படி என்று கேட்கக் கூடாது.'

இமாம் மாலிக், ஸுஃப்யான் இப்னு உயைனா மற்றும் அப்துல்லாஹ் இப்னுல் முபாரக் ஆகிய இமாம்கள் இந்த ஹதீஸ்கள் குறித்துப் பேசியுள்ளனர்: 'இவற்றை எவ்வித வடிவ நிர்ணயமும் இன்றி வந்தபடியே விட்டுவிடுங்கள்.' இதுவே அஹ்லுஸ் சுன்னா வல் ஜமாஅத்தைச் சார்ந்த மார்க்க அறிஞர்களின் உறுதியான கொள்கையாகும். ஆனால் ஜஹ்மியாக்களோ இந்த அறிவிப்புகளை அடியோடு மறுத்ததுடன், 'இது (அல்லாஹ்வைப் படைப்போடு ஒப்பிடும்) தஷ்பீஹ் ஆகும்' என்றும் வாதாடினர்."

"மேலும், அல்லாஹுதஆலா தனது குர்ஆனில் பல்வேறு இடங்களில் கை, செவிமடுத்தல் மற்றும் பார்த்தல் ஆகிய பண்புகளைக் குறிப்பிட்டுள்ளான். ஆனால் ஜஹ்மியாக்களோ இவ்வசனங்களுக்குத் தவறான மாற்று விளக்கங்களை அளித்து, மார்க்க அறிஞர்கள் வழங்கிய விளக்கங்களுக்கு முற்றிலும் முரணான முறையில் அவற்றுக்கு விளக்கம் எழுதினர்; 'அல்லாஹ் ஆதமைத் தன் கையால் படைக்கவில்லை' என்றும், 'இந்த இடங்களில் கை என்பதன் பொருள் ஆற்றல்  மட்டுமே' என்றும் அவர்கள் வாதாடினர்.

பேரறிஞர் இஸ்ஹாக் இப்னு இப்ராஹீம் அவர்கள் (இது குறித்துப் பிரகடனப்படுத்தி) கூறினார்கள்: 'ஒருவர் (அல்லாஹ்வின் கையை வர்ணிக்கும்போது) படைப்பின் கையைப் போன்ற கை, அல்லது கையைப் போன்ற வடிவமுடைய கை, அல்லது படைப்பின் செவியைப் போன்ற செவி, அல்லது செவியைப் போன்ற வடிவமுடைய செவி என்று கூறினால் மட்டுமே அது அல்லாஹ்வைப் படைப்போடு ஒப்பிடும் ‘உருவகப்படுத்துதல்’ ஆகும். ஆனால், அல்லாஹ் தனது குர்ஆனில் விவரித்துள்ளபடி கை, செவிமடுத்தல், பார்த்தல் ஆகிய பண்புகளை அப்படியே உறுதிப்படுத்தி ஏற்றுக்கொண்டு, அதன் வடிவம் எப்படி என்று கேட்காமலும், படைப்பின் செவியைப் போன்றது என்றோ அல்லது செவிக்கு நிகரானது என்றோ ஒப்பிடாமல் இருந்தால், அது ஒருபோதும் ‘உருவகப்படுத்துதல்’ ஆகாது. இது அல்லாஹ் தன் குர்ஆனில்: {அவனைப் போன்று எப்பொருளும் இல்லை; அவன் யாவற்றையும் செவியேற்பவன், பார்ப்பவன்} என்று குறிப்பிட்டிருப்பதைப் போன்றதாகும்.' (முற்றிற்று.)

மூன்றாவதாக:

கேள்வியில் குறிப்பிடப்பட்ட மார்க்க இமாம்களின் அகீதாவை அவர்களின் சொந்தப் படைப்புகளிலிருந்தோ அல்லது பிற நம்பகமான தொகுப்புகளிலிருந்தோ பின்வரும் மூல நூட்களின் வாயிலாகத் தெளிவாகத் தெரிந்து கொள்ள முடியும்:

  • இமாம் அபூ ஹனீஃபா (ரஹிமஹுல்லாஹ்) எழுதிய "அல்-ஃபிக்ஹுல் அக்பர்".
  • இமாம் அபுல் ஹஸன் அல்-அஷ்அரி (ரஹிமஹுல்லாஹ்) எழுதிய "அல்-இபானா".
  • இமாம் அல்-லாலகாயீ எழுதிய "ஷரஹ் உஸூல் அஹ்லிஸ் ஸுன்னா வல் ஜமாஅத்".
  • இமாம் அல்-ஆஜுர்ரி எழுதிய "அஷ்-ஷரீஆ".
  • இமாம் இப்னு பத்தா அல்-ஹன்பலி எழுதிய "அல்-இபானா".
  • இமாம் இப்னு கஸீர் (ரஹிமஹுல்லாஹ்) எழுதிய உலகப் புகழ்பெற்ற "தஃப்சீர் இப்னு கஸீர்".
  • இமாம் அத்-தஹபீ எழுதிய "அல்-உலூவ்", "அல்-அர்ஷ்" மற்றும் "அல்-அர்பஊன் ஃபீ ஸிஃபாதி ரப்பில் ஆலமீன்" ஆகிய மூன்று நூட்கள்.
  • ஷைகுல் இஸ்லாம் இப்னு தைமிய்யா எழுதிய "அல்-ஃபத்வா அல்-ஹமவிய்யா அல்-குப்ரா".
  • இமாம் இப்னுல் கய்யிம் எழுதிய "இஜ்திமாஉல் ஜுயூஷில் இஸ்லாமிய்யா".

மேலும், நாம் முதலாவதாகக் குறிப்பிட்டிருந்த அகீதா நூட்களின் வாயிலாகவும் இமாம் மாலிக், இமாம் அஷ்-ஷாஃபிஈ மற்றும் இமாம் அஹ்மத் ஆகியோரின் நேரடிப் கூற்றுக்களையும் அறிந்து கொள்ள முடியும். அத்துடன் பின்வரும் ஆய்வு நூலையும் நாங்கள் உங்களுக்குப் பரிந்துரைக்கிறோம்:

  • டாக்டர் முஹம்மத் பின் அப்துர் ரஹ்மான் அல்-கமீஸ் எழுதிய "உஸூலுத்தீன் இன்தல் இமாம் அபீ ஹனீஃபா" (வெளியீடு: தார் அஸ்-ஸுமையீ, ரியாத்)."
  • டாக்டர் முஹம்மத் பின் அப்துர் ரஹ்மான் அல்-கமீஸ் எழுதிய "இஃதிகாத் அல்-அஇம்மதி அல்-அர்பஆ" (நான்கு இமாம்களின் மார்க்கக் கொள்கை), வெளியீடு: தார் அல்-ஆஸிமா, ரியாத்.
  • டாக்டர் அப்துல்லாஹ் பின் ஸல்மான் பின் ஸாலிம் அல்-அஹ்மதி எழுதிய "அல்-மஸாயில் வர்-ரஸாயில் அல்-மர்விய்யா அனில் இமாம் அஹ்மத் ஃபில் அகீதா" (அகீதா விவகாரத்தில் இமாம் அஹ்மத் அவர்களிடமிருந்து அறிவிக்கப்பட்ட மார்க்கக் கேள்விகள் மற்றும் மடல்களின் தொகுப்பு), வெளியீடு: தார் தைபா, ரியாத்.

மேலே குறிப்பிடப்பட்ட அனைத்து மூல நூல்களும் இணையதளத்தில் உள்ள 'அல்-மக்தபா அல்-ஷாமிலா' மின்-நூலகத்தில் எளிதாகப் பெற்றுக்கொள்ளக் கூடியதாகக் கிடைக்கின்றன.

அல்லாஹ்வே மிக அறிந்தவன்.

மூலநூட்கள்

அல்லாஹ்வின் திருநாமங்களும் பண்புகளும்

மூலம்

இஸ்லாம் கேள்வி-பதில் இணையதளம்

at email

செய்திமடல்

தள செய்திகள் மற்றும் அவ்வப்போது புதுப்பிப்புகளைப் பெற அஞ்சல் பட்டியலில் இணையவும்

phone

இஸ்லாம் கேள்வி பதில் செயலி

உள்ளடக்கத்தை விரைவாக அணுகவும் ஆஃப்லைன் உலாவலுக்கும்

download iosdownload android