இமாம் இப்னு தைமிய்யா (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள், மீலாது விழா ஒரு மார்க்கப் புதுமை (பித்அத்) என்று கூறியுள்ள அதேவேளையில், அறியாமையினால் கொண்டாடுபவர்களின் நல்ல நோக்கத்திற்காக அவர்களுக்கு நற்கூலி கிடைக்கும் என்று கருதுகிறார்களா?

கேள்வி 357400

"இமாம் இப்னு தைமிய்யா அவர்கள் தங்களது 'இக்திழாஉஸ் ஸிராதில் முஸ்தகீம்' என்ற நூலில் மீலாது விழா குறித்து எழுதியுள்ள விபரங்களை, மார்க்கப் புதுமைகளைப் புகுத்தும் வழிகேடர்கள் தங்களது மீலாது விழா கொண்டாட்டங்களுக்கும் மற்றும் இதர பித்அத்களைச் செய்வதற்கும் சாதகமாகப் பயன்படுத்தி ஆதாரமாகக் காட்டுகிறார்கள். அவர்கள், 'நாங்கள் மீலாது விழா கொண்டாடுவதற்கும் இதர பித்அத்களைச் செய்வதற்கும் கண்டிப்பாக நற்கூலி பெறுவோம் என்று இப்னு தைமிய்யா அவர்களே கூறியுள்ளார்; நபியவர்கள் மீதான அன்பு மற்றும் கண்ணியத்தின் காரணமாகவே நாங்கள் இந்த பித்அத்களைச் செய்கிறோம், எனவே எங்களுக்கு இதற்கான நற்கூலி கண்டிப்பாகக் கிடைக்கும்' என்று வாதாடுகிறார்கள்.

மறுபுறம், வேறு சிலர் இப்னு தைமிய்யா அவர்கள் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்து, 'ஒருவர் பித்அத்தைச் செய்வதன் மூலமாக அல்லாஹ்விடமிருந்து நற்கூலியைப் பெற முடியும் என்று இப்னு தைமிய்யா கூறியுள்ளார்' என அவர்கள் மீது அப்பட்டமான அவதூறைச் சுமத்துகிறார்கள். இந்த இரு தரப்பினரின் வாதங்கள் குறித்தும், இப்புரிதலில் ஏற்பட்டுள்ள குழப்பங்கள் குறித்தும் எனக்கு மார்க்க ரீதியான தெளிவான விளக்கத்தை அளிக்க முடியுமா?.

பதில்

அல்லாஹ்வுக்கே புகழும், இறைவனின் தூதர் மீது பிரார்த்தனையும் சாந்தியும் உண்டாகட்டும்,

முதலாவதாக: மீலாது விழா கொண்டாடுவது மார்க்கத்தில் எவ்வித அடிப்படை ஆதாரமும் இல்லாத ஒரு புதுமையாகும் (பித்அத்). நபியவர்கள் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) பின்வருமாறு எச்சரித்துள்ளார்கள்: [நம்முடைய இந்த (மார்க்க) விவகாரத்தில் அதில் இல்லாத ஒன்றை யாராவது புதிதாக உண்டாக்கினால், அது நிராகரிக்கப்படும்] (நூட்கள்: ஸஹீஹுல் புகாரி 2697, ஸஹீஹ் முஸ்லிம் 1718). மேலும், நபியவர்கள் கூறினார்கள்: எவர் ஒருவர், நம்முடைய கட்டளையில் (மாரக்கத்தில்) இல்லாத ஒரு செயலைச் செய்கிறாரோ அது நிராகரிக்கப்பட்டதாகவே கருதப்படும்] (ஸஹீஹ் முஸ்லிம் 1718).

மேலும் நபியவர்கள் கூறினார்கள்: [உங்களில் எனக்குப் பின் வரக்கூடியவர்கள்  பல கருத்து வேறுபாடுகளைக் சந்திப்பார். எனவே, என்னுடைய வழிமுறையையும் (சுன்னாவையும்), நேர்வழி பெற்ற கலீஃபாக்களின் வழிமுறையையும் நீங்கள் உறுதியாகப் பற்றிக் கொள்ளுங்கள்; அதனை உங்களுடைய கடைவாய் பற்களால் கடித்துக் கெட்டியாகப் பிடித்துக் கொள்ளுங்கள். மார்க்கத்தில் புதிதாக உண்டாக்கப்படும் (புதுமையான) காரியங்களை விட்டும் உங்களை நான் எச்சரிக்கிறேன். ஏனெனில், புதிதாக உண்டாக்கப்படும் ஒவ்வொரு காரியமும் ஒரு மார்க்கப் புதுமையே (பித்அத்தே) ஆகும்; ஒவ்வொரு மார்க்கப் புதுமையும் வழிகேடே ஆகும்] (நூட்கள்: ஸுனன் அபூ தாவூத் 4607, ஜாமிஃ அத்-திர்மிதீ 2676, ஸுனன் இப்னு மாஜா 42).

இந்தக் கொண்டாட்டம் மார்க்கத்தில் புதிதாகத் தோற்றுவிக்கப்பட்ட ஒரு பித்அத் என்பதைக் குறித்து பல மார்க்க அறிஞர்கள் மிகத் தெளிவாக எச்சரித்துள்ளனர்.

இமாம் இப்னுல் ஹாஜ் அல்-மாலிகி (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் தங்களது 'அல்-மத்கல்' (பாகம்: 2, பக்கம்: 2) என்ற நூலில் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்கள்: மக்கள் இதனை மிக முக்கிய வழிபாடுகளில் ஒன்றாகக் கருதி, மார்க்கச் அடையாளங்களை வெளிப்படுத்துவதாக எண்ணிக் கொண்டு உருவாக்கியுள்ள மார்க்கப் புதுமைகளில் (பித்அத்களில்) ஒன்றுதான், ரபியுல் அவ்வல் மாதத்தில் அவர்கள் செய்யக்கூடிய இந்த மீலாது விழா ஆகும். நிச்சயமாக இது பல மார்க்கப் புதுமைகளையும், மார்க்கத்தால் விலக்கப்பட்ட ஹராமான காரியங்களையும் தன்னுள் உள்ளடக்கியுள்ளது”.

இமாம் அபூ ஷாமா (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் தங்களது 'அல்-பாஇஸ் அலா இன்காரில் பிதஃ வல் ஹவாதிஸ்' (பக்கம்: 23) என்ற நூலில் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்கள்: நமது காலத்தில் புதிதாக உண்டாக்கப்பட்ட இத்தகைய காரியங்களில்... இர்பில் (Erbil) நகரில் - அல்லாஹ் அந்நகரைப் பாதுகாப்பானாக  - ஒவ்வொரு வருடமும் நபியவர்களின் பிறந்தநாளாக கருதப்படும் நாளில் தர்மங்கள் செய்தல், நற்காரியங்கள் புரிதல், அலங்காரங்களை வெளிப்படுத்துதல் மற்றும் மகிழ்ச்சியைக் கொண்டாடுதல் போன்றவற்றின் மூலம் செய்யப்படக்கூடிய அந்தச் செயல்பாடுகளும் அடங்கும்.

 இரண்டாவதாக:

"ஷைகுல் இஸ்லாம் இப்னு தைமிய்யா (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் தங்களது நூல்களின் பல்வேறு இடங்களிலும் - குறிப்பாகத் தங்களது 'இக்திழாவுஸ் ஸிராதில் முஸ்தகீம்' என்ற புத்தகத்திலும் - மீலாது விழா என்பது மார்க்கத்தில் புதிதாக உண்டாக்கப்பட்ட ஒரு பித்அத் என்பதையும், அதேபோன்று மார்க்கத்தில் புகுத்தப்படும் ஒவ்வொரு புதுமையும் வழிகேடே என்பதையும் மிகத் திட்டவட்டமாக உறுதிப்படுத்துகிறார்கள்.

அவர்கள் தங்களது வாதத்தில் கூற வரும் கருத்தின் சுருக்கம் என்னவென்றால்: சுன்னாவைப் பற்றிய விழிப்புணர்வு இல்லாத ஒரு பொதுமகன், தனது அறியாமையினால் இந்த பித்அத்தைச் செய்யும்போது, அவனது உள்ளத்தில் உள்ள நல்ல நோக்கத்திற்காக (நிய்யத்திற்காக) அல்லாஹ் அவனுக்கு நற்கூலி வழங்கக்கூடும்; மேலும், அவனது அறியாமையின் காரணமாக அவனது அந்த பித்அத்தான செயலுக்காக அவன் தண்டிக்கப்பட மாட்டான் என்பது மட்டுமே ஆகும்.

இதனை ஷைக் அவர்கள் மீலாது விழா என்ற இந்த ஒரு பித்அத்திற்கு மட்டுமல்ல, மாறாக இதர அனைத்து வகையான பித்அத்களுக்கும் இதே விதியைத்தான் கூறுகிறார்கள். ஏன், ஒரு மனிதன் அறியாமையினால் இறைவனுக்கு இணைவைக்கும் (ஷிர்க்கான) காரியத்தைச் செய்யும்போது கூட அவனது அறியாமையை முன்னிட்டு இதே விதியைத்தான் அவர்கள் குறிப்பிடுகிறார்கள்! நிலைமை அவ்வாறிருக்க, 'இறைவனுக்கு இணைவைக்கும் ஒரு காரியத்தை அறியாமையினால் செய்பவருக்கு அவரது நல்ல நோக்கத்திற்காக நற்கூலி கிடைக்கக்கூடும்' என்று இப்னு தைமிய்யா கூறியதற்காக 'இப்னு தைமிய்யா அவர்கள் ஷிர்க் செய்வதை அனுமதித்துள்ளார்' என்று அறிவுடைய எந்தவொரு புத்திசாலியாவது கூறுவாரா?! (கண்டிப்பாகக் கூற மாட்டார். எனவே மீலாது விழாவை அவர் அனுமதித்தார் என்பதும் இத்தகைய அறியாமை வாதமே ஆகும்).

மீலாது விழா ஒரு பித்அத் என்பதை உறுதிப்படுத்தி ஷைக் அவர்கள் தங்களது 'மஜ்மூஃ ஃபதாவா' (பாகம்: 25, பக்கம்: 298) நூலில் பின்வருமாறு கூறுகிறார்கள்: மார்க்கம் காட்டித் தந்துள்ள பருவ கால வழிபாட்டுத் தினங்களைத் தவிர்த்து, வேறு புதிய நாட்களைத் தேர்ந்தெடுப்பது - உதாரணத்திற்கு, ரபியுல் அவ்வல் மாதத்தின் சில இரவுகளைத் தேர்ந்தெடுத்து இதுதான் மீலாது இரவுக் கொண்டாட்டம் என்று கூறுவது, அல்லது ரஜப் மாதத்தின் சில இரவுகள், துல்ஹஜ் மாதம் 18 ஆம் நாள், ரஜப் மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமை, அல்லது அறியாமைமிக்க பாமர மக்கள் 'நல்லோர்களின் பெருநாள்' (ஈதுல் அப்ரார்) என்று அழைக்கக்கூடிய ஷவ்வால் மாதத்தின் எட்டாம் நாள் போன்ற நாட்களைத் தேர்ந்தெடுப்பது மார்க்கத்தில் முந்தைய முன்னோர்கள் (ஸலஃபுகள்) எவராலும் விரும்பத்தக்கதாகக் கருதப்படாத மற்றும் அவர்களால் செய்யப்படாத மார்க்கப் புதுமைகளுள் (பித்அத்களுள்) அடங்கும்.

இக்கொண்டாட்டத்தை ஏற்பாடு செய்பவர்களுக்கு அவர்களது நல்ல நோக்கத்திற்காக (நிய்யத்திற்காக) நற்கூலி கிடைக்குமே தவிர, அவர்கள் செய்யும் அந்த பித்அத்திற்காக அல்ல என்பதைத் தெளிவாக உறுதிப்படுத்தும் வகையில், ஷைக் அவர்கள் (ரஹிமஹுல்லாஹ்) பின்வருமாறு கூறுகிறார்கள்:

'நம்முடைய உண்மையான நோக்கம் என்னவென்றால்: இந்த நாளை ஒரு பெருநாளாக மாற்றுவது என்பது மார்க்கத்தில் எவ்வித அடிப்படை ஆதாரமும் இல்லாத, புதிதாகத் தோற்றுவிக்கப்பட்ட ஒரு காரியமே (பித்அத்தே) ஆகும். நபியவர்களின் குடும்பத்தினரான அஹ்லுல் பைத் ஆக இருந்தாலும் சரி அல்லது அவர்கள் அல்லாத வேறு எவராக இருந்தாலும் சரி முந்தைய சான்றோர்களான ஸலஃபுகள் எவருமே இந்த நாளை ஒரு பெருநாளாகக் கருதி, அதில் புதிய சடங்குகளை உருவாக்கியதில்லை. ஏனெனில், பெருநாட்கள் என்பது இஸ்லாமிய மார்க்கத்தின் ஒரு பகுதியாகும்; எனவே, அதில் மார்க்க வழிமுறையைப் பின்பற்றி நடக்க வேண்டுமே தவிர, புதிய புதுமைகளைப் புகுத்தக் கூடாது.

நபியவர்கள் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) தங்களது வாழ்நாளில் பத்ருப் போர், ஹுனைன் போர், அகழ்ப் போர், மக்கா வெற்றி, அவர்கள் ஹிஜ்ரத் செய்த தருணம், அவர்கள் மதீனாவிற்குள் நுழைந்த நேரம் போன்ற பல்வேறு முக்கிய நாட்களில் பல உன்னதமான உரைகளையும், உடன்படிக்கைகளையும், வரலாற்று நிகழ்வுகளையும் நிகழ்த்தியுள்ளார்கள். மேலும், மார்க்கத்தின் அடிப்படைக் கோட்பாடுகளை விவரிக்கும் ஏராளமான உரைகளையும் அவர்கள் ஆற்றியுள்ளார்கள். இருந்தபோதிலும், அவை போன்ற நாட்களை எல்லாம் வருடாந்திரப் பெருநாட்களாக மாற்ற வேண்டும் என்று மார்க்கம் நமக்குக் கட்டளையிடவில்லை. இத்தகைய காரியங்களை கிறிஸ்தவர்கள்தான் ஈஸா (அலை) அவர்களின் வரலாற்று நிகழ்வுகள் நடந்த நாட்களைப் பெருநாட்களாக மாற்றிச் செய்கிறார்கள்; அல்லது யூதர்கள் இவ்வாறு செய்கிறார்கள் (நாம் அவர்களைப் பின்பற்றக் கூடாது).

நிச்சயமாக, பெருநாள் என்பது அல்லாஹ்வினால் நிர்ணயிக்கப்பட்ட ஒரு மார்க்கச் சட்டமாகும். எனவே, அல்லாஹ் எதை மார்க்கமாக ஆக்கியுள்ளானோ அதையே நாம் பின்பற்ற வேண்டும்; அதைவிடுத்து, இந்த மார்க்கத்தில் இல்லாத எதையும் நாம் புதிதாக உண்டாக்கக் கூடாது.

அதேபோன்று, கிறிஸ்தவர்கள் ஈஸா (அலை) அவர்களின் பிறந்தநாளைக் கொண்டாடுவதைப் போல அவர்களுக்கு இணையாகச் செய்வதற்காகவோ, அல்லது நபியவர்கள் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) மீது கொண்ட அன்பு மற்றும் கண்ணியத்தின் காரணமாகவோ மக்களில் சிலர் புதிய சடங்குகளை உருவாக்குகிறார்கள்.(அவைகளும் தவிர்க்கப்பட வேண்டியவைகளே).

நபியவர்களின் பிறந்த தேதியைக் குறிப்பிடுவதில் வரலாற்று ரீதியாகப் பல கருத்து வேறுபாடுகள் இருக்கும் நிலையிலும், அதனை ஒரு பெருநாளாக மாற்றி மீலாது விழா கொண்டாடும் இவர்களது அந்த அன்பிற்கும் முயற்சிக்கும் அல்லாஹ் நற்கூலி  வழங்குவானே  தவிர, அவர்கள் செய்யக்கூடிய அந்த பித்அத்களுக்காக அல்ல "நிச்சயமாக இச்செயல் ஒரு நன்மையான காரியமாக இருந்திருந்தால், இதனைச் செய்வதற்கான சூழ்நிலைகளும் காரணங்களும்  அன்றைய காலத்திலும் இருந்தன; அத்துடன் இதனைத் தடுப்பதற்கான எவ்வித தடைகளும் அன்று இருக்கவில்லை. (இருந்தும்) முந்தைய சான்றோர்களான ஸலஃபுகள் எவருமே இதனைச் செய்யவில்லை (எனும் போதே இது மார்க்கத்தில் தடுக்கப்பட்ட பித்அத் என்பது தெளிவாகிறது).

மேலும், இது முற்றிலும் தூய்மையான நற்செயலாக இருந்திருந்தால், இதனைச் செய்வதற்கு நம்மை விட அந்த ஸலஃபுகளுக்கே மிக அதிகத் தகுதியும் உரிமையும் இருந்திருக்கும். ஏனெனில், அவர்கள் நம்மை விட அல்லாஹ்வின் தூதர் மீது மிக அதீத அன்பும், உன்னதமான கண்ணியமும் கொண்டவர்களாகத் திகழ்ந்தார்கள்; நற்காரியங்களைச் செய்வதிலும் நம்மை விட மிக அதீத ஆர்வம் உடையவர்களாக இருந்தார்கள்.

இறைத்தூதர் மீதான உண்மையான நேசம் என்பது அவர்களின் வழிமுறைகளைப் பின்பற்றுவதிலும், மார்க்கத்தைப் பரப்புவதிலும், உள்ளத்தாலும் செயலாலும் அவைகளை உயிர்ப்பிப்பதிலும் தான் உள்ளது. நிச்சயமாக இதுவே முஹாஜிர்கள், அன்சாரிகள் மற்றும் அவர்களை அழகிய முறையில் பின்பற்றிய முந்திய மார்க்கச் சான்றோர்களின் (ஸலஃபுகளின்) வழிமுறையாக இருந்தது.

இத்தகைய மார்க்கப் புதுமைகளை (பித்அத்களை) சிரத்தையெடுத்து செய்யும் இவர்களில் பெரும்பாலானவர்களை நீங்கள் கவனித்துப் பார்த்தால், அவர்களது அந்த நல்ல நோக்கத்திற்காகவும்  - முயற்சிக்காகவும் அவர்களுக்கு நன்மை கிடைக்கும் என்று வைத்துக்கொண்டாலும் - அல்லாஹ்வின் தூதர் எதனை மிகத் தீவிரமாகச் செய்யுமாறு கட்டளையிட்டாரோ, அந்த அத்தியாவசியமான மார்க்கக் கடமைகளைச் செய்வதில் அவர்கள் மிகவும் சோம்பேறிகளாகவும் பொடுபோக்கானவர்களாகவும் இருப்பதை நீங்கள் கண்டுகொள்வீர்கள். இவர்களின் நிலை எப்படி என்றால் வெறுமனே குர்ஆனின் வெளிரங்கத்தை அலங்கரித்து விட்டு அதனை ஓதாமல் இருப்பவர்கள் அல்லது அதனை ஓதினாலும் அதன்படி செயலாற்றாதவர்களைப் போன்றதாகும். (நூல்: 'இக்திழாவுஸ் ஸிராதில் முஸ்தகீம்: 2/123).

எனவே, ஷைக் அவர்கள் எவ்விதக் குழப்பமுமின்றி மிக வெளிப்படையாகவும் தெளிவாகவும் உறுதிப்படுத்தியுள்ள இந்த விதியை நீங்கள் சற்றுச் சிந்தித்துப் பாருங்கள்: அவர்களுக்குக் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படும் அந்த நற்கூலியும், சன்மானமும், அவர்கள் செய்த அந்தப் பித்அத்தான செயலுக்காகவோ, அல்லது அதனை மார்க்கம் என்று அவர்கள் நம்பியதற்காகவோ அல்லது அதனைச் செயல்படுத்தியதற்காகவோ அல்ல. மாறாக, அவர்கள் தங்களது உள்ளத்தில் கொண்டுள்ள நபியின் மீதான நேசத்திற்கும் அதனை அடைந்து கொள்ள அவர்கள் செய்த முயற்சிக்குமே. அல்லாஹ் இவர்களது இந்த அன்பிற்கும் முயற்சிக்கும் நற்கூலி வழங்குவானே தவிர, அவர்கள் செய்யக்கூடிய அந்த பித்அத்களுக்காக அல்ல. நிச்சயமாக, (நபியவர்கள் மீது அன்பு வைப்பது என்பது) மார்க்கத்தின் மிகப் முக்கியமான வழிபாடுகளில் ஒன்றாகும் என்பதில் எவ்விதக் கருத்து வேறுபாடும் இல்லை; மேலும், இதற்கும் அவர்கள் செய்யக்கூடிய அந்தப் பித்அத்தான செயலுக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை.

(இமாம் இப்னு தைமியா) மேலும் கூறினார்கள்; மீலாது விழாவைக் கண்ணியப்படுத்துவதும், அதனை ஒரு பருவகால வழிபாட்டு நாளாக மாற்றுவதும் சில மனிதர்களால் செய்யப்படுகிறது. அவர்களது நல்ல நோக்கத்திற்காகவும் , அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் மீது அவர்கள் வைத்துள்ள அதீத கண்ணியத்திற்காகவும் அவர்களுக்கு இதில் மிகப் பெரும் நற்கூலி கிடைக்கக்கூடும். நேர்வழி பெற்ற, சுன்னாவின் மீது உறுதியாக இருக்கும் ஒரு முஃமினுக்குப் பொருத்தமற்றதாகக் கருதப்படும் ஒரு காரியம், சில சாதாரண மனிதர்களின் அறியாமையின் காரணமாக அவர்களிடமிருந்து வெளிப்படும் போது அது (அவர்களது நல்ல நோக்கத்திற்காக) நன்மையாகக் கருதப்படும் என்று நான் ஏற்கனவே உங்களுக்கு விளக்கியுள்ளேன்.

எனவே தான், திருக்குர்ஆன் பிரதிகளை ஆடம்பரமாக அலங்கரிப்பது வெறுக்கத்தக்கது(மக்ரூஹ்) என்பதே இமாம் அஹ்மதின் சொந்த சட்ட நிலைப்பாடாக இருந்தபோதிலும், ஒருமுறை அவர்களிடம் திருக்குர்ஆனை அலங்கரிக்க ஆயிரம் தீனார்கள் அல்லது அதைப்போன்ற ஒரு பெருந்தொகை செலவிட்ட அமீர் ஒருவரை பற்றி சொல்லப்பட்டபொழுது, “விடுங்கள் பரவாயில்லை, தங்கம் செலவிடப்படக்கூடிய வழிகளில் மிகச் சிறந்த வழி என கூறினார். (நூல்: இக்திழாவுஸ் ஸிராத்தல் முஸ்தகீம்' (2/123).

ஒருவர் அறியாமையினால் ஒரு காரியத்தை மார்க்கம் என்று தவறாக விளங்கி, நல்ல எண்ணத்தோடு செய்யும்போது அவர் இறைவனுக்கு இணைவைக்கும் காரியத்தையே செய்திருந்தாலும் கூட அவருக்குக் கிடைக்கக்கூடிய தீர்ப்பு குறித்து இமாம் அவர்கள் (ரஹிமஹுல்லாஹ்) பின்வருமாறு விவரிக்கிறார்கள்:

  • மார்க்கக் வழிகாட்டல் இல்லாத ஒவ்வொரு வழிபாடும் (இபாதத்தும்) நிச்சயமாகத் தடுக்கப்பட வேண்டியதே ஆகும்.
  • பின்னர், அது தடுக்கப்பட்ட ஒரு காரியம் என்பதைத் தெளிவாக அறிந்திருந்தும் ஒருவன் அதனைச் செய்தால், அவன் தண்டனைக்குரியவன் ஆவான்.
  • ஒருவேளை அவன் அதனை அறியாமல் செய்திருந்தால், அவன் எவ்விதத் தண்டனைக்கும் தகுதியானவன் அல்ல.
  • அது மார்க்கத்தால் கட்டளையிடப்பட்ட ஒன்று என்று அவன் நம்பி, அச்செயல் அடிப்படையில் அனுமதிக்கப்பட்ட வணக்கங்களின் வகையைச் சேர்ந்ததாக இருந்தால், அவனுக்கு அதற்கான நற்கூலி வழங்கப்படும்.
  • மாறாக, அச்செயல் இணைவைப்பின் (ஷிர்க்கின்) வகையைச் சேர்ந்ததாக இருந்தால், இந்த இணைவைப்பு விவகாரத்தில் மார்க்கம் கட்டளையிட்ட நல்ல காரியம் என்று எதுவுமே இல்லை. இருப்பினும், மக்களில் சிலர் அதன் சில வடிவங்களை மார்க்கம் கட்டளையிட்ட ஒரு நல்ல காரியம் என்று தவறாகக் கணக்கிட்டு நம்பிவிடக்கூடும். அவ்வாறானவர் உண்மையான மார்க்க ஆய்வாளர் (முஜ்தஹித்) ஆகக் கருதப்பட மாட்டார். ஏனெனில், ஒரு முஜ்தஹித் என்பவர் கண்டிப்பாக ஏதேனும் ஒரு மார்க்க ஆதாரத்தைப் பின்பற்ற வேண்டும்; ஆனால், இத்தகைய இணைவைப்புக் காரியங்களுக்கு எவ்வித மார்க்க ஆதாரமும் இருக்காது. எனினும், அவர் தனக்குத் தெரிந்த வழியில் அதாவது தனக்கு முன் சென்ற அறிஞர்கள் மற்றும் சான்றோர்கள் செய்ததை அப்படியே குருட்டுத்தனமாகப் பின்பற்றி செய்திருக்கலாம். அப்படி அவருக்கு முன்னால் இதைச் செய்தவர்கள், அது தங்களுக்குப் பயனளிப்பதாகக் கண்டதாலோ அல்லது தாங்கள் கேள்விப்பட்ட ஏதேனும் ஒரு பொய்யான ஹதீஸின் காரணமாகவோ செய்திருக்கலாம். ஆகவே, இத்தகையவர்களுக்கு இது மார்க்கத்தில் தடுக்கப்பட்ட ஒன்று என்பதற்கான தெளிவான ஆதாரம் நிலைநாட்டப்படாத வரையில், அவர்கள் தண்டிக்கப்பட மாட்டார்கள். அவர்களுக்கான நற்கூலியைப் பொறுத்தவரை: அவர்களைச் சார்ந்தவர்களில் சிலரை விடச் சிறந்தவர்களாகக் கருதப்படுவதே அவர்களுக்குக் கிடைக்கும் பிரதிபலனாக இருக்கலாம்.
  • ஆனால், இதனைப் போன்ற இணைவைப்புக் காரியங்களின் மூலம் அல்லாஹ்வின் நெருக்கத்தைப் பெறுவதற்கான ஆன்மீக நற்கூலி என்பது இத்தகைய செயல்பாடுகளுக்கு ஒருபோதும் கிடைக்காது. (நூல்: மஜ்மூஉல்ஃபதாவா'  பாகம்: 20, பக்கம்: 32).

"எனவே, ஷைகுல் இஸ்லாம் (ரஹிமஹுல்லாஹ்) அவர்களின் இந்த மார்க்கத் தீர்ப்பு அனைத்து இடங்களுக்கும் ஒரே சீராகப் பொருந்தக்கூடிய ஒரு விதியாகும். ஒரு மனிதன் அவனின் அறியாமையினால், அவன் செய்த அந்த பித்அத்திற்காக அவன் தண்டிக்கப்பட மாட்டான்; மாறாக, அவனது முயற்சி, அவனது (நபியின் மீதான)அன்பு மற்றும் அவனைப் போன்ற இதர மனிதர்களை விட நன்மைகளின் பால் அவன் கொண்டுள்ள அதீத ஆர்வம் ஆகியவற்றிற்காக அவனுக்கு நற்கூலி வழங்கப்பட முற்றிலும் சாத்தியமுண்டு. இவை அனைத்தும் நன்மையான காரியங்களாகும்; இதற்காக அவனுக்கு நற்கூலி வழங்கப்படுமே தவிர, அவன் செய்த அந்த பித்அத்தான செயலுக்காகவோ, அல்லது அதனை மார்க்கம் என்று அவன் நம்பியதற்காகவோ அல்லது அதனைச் செயல்படுத்தியதற்காகவோ அல்ல. நிலைமை இவ்வளவு தெளிவாக இருக்க, மீலாது விழா கொண்டாடுவதை அவர் அனுமதித்துள்ளார் என்று அவரது வாசகங்களிலிருந்து எவ்வாறு தவறாகப் பொருள் கொள்ள முடியும்?!.

ஷைக் அப்துல் அஸீஸ் பின் பாஸ் (ரஹிமஹுல்லாஹ்) அவர்களிடம் பின்வருமாறு ஒரு கேள்வி கேட்கப்பட்டது: 'மார்க்க அறிஞர்களில் ஒருவர், “இமாம் இப்னு தைமிய்யா (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் நபியவர்களின் பிறந்தநாளைக் கொண்டாடுவதை நல்ல காரியமாகக் கருதினார்கள்” என்று குறிப்பிட்டுள்ளார். கௌரவத்திற்குரிய ஷைக் அவர்களே இக்கூற்று உண்மையானதுதானா?'

அதற்கவர் பின்வருமாறு பதிலளித்தார்: மீலாது விழா கொண்டாடுவது மார்க்க அறிஞர்களின் இரு பெரும் கருத்துக்களில் மிகவும் சரியான ஆதாரப்பூர்வமான முடிவின்படி, அனுமதிக்கப்படாத ஒரு மார்க்கப் புதுமையே (பித்அத்தே) ஆகும். ஏனெனில், நபியவர்கள் தங்களது வாழ்நாளில் இதனைச் செய்யவில்லை; அதேபோன்று, நேர்வழி பெற்ற அவர்களது கலீஃபாக்களோ, அவர்களது ஒட்டுமொத்தத் தோழர்களான ஸஹாபாக்களோ (ரலியல்லாஹு அன்ஹும்) இதனைச் செய்யவில்லை. மேலும், நபியவர்களால் சான்றளிக்கப்பட்ட முதல் மூன்று உன்னதமான நூற்றாண்டுகளில் வாழ்ந்த மார்க்க அறிஞர்களோ அல்லது அக்காலத்து ஆட்சியாளர்களோ இக்கொண்டாட்டத்தை நிகழ்த்தவில்லை. உண்மையில், இந்த விழாவானது அதற்குப் பின்னரே ஷியாக்களாலும் மற்றும் அவர்களை அப்படியே குருட்டுத்தனமாகப் பின்பற்றியவர்களாலும் முதன்முதலில் உருவாக்கப்பட்டது. எனவே, இத்தகைய காரியங்களைச் செயல்படுத்துவதோ அல்லது அதைச் செய்பவர்களைப் பார்த்து நாமும் அப்படியே பின்பற்றுவதோ மார்க்க ரீதியாக எவ்விதத்திலும் அனுமதிக்கப்பட மாட்டாது.'

மேலும், ஷைக் தகியுத்தீன் அஹ்மத் இப்னு தைமிய்யா (ரஹிமஹுல்லாஹ்) அவர்களும் கூட இந்தக் கொண்டாட்டத்தை நிராகரித்து, இது ஒரு மார்க்கப் புதுமையே (பித்அத்) என்றே தீர்ப்பளித்துள்ளார்கள்.

இருப்பினும், அவர்கள் தங்களது (இக்திழாவுஸ் ஸிராதில் முஸ்தகீம் முஃகாலஃபது அஸ்ஹாபில் ஜஹீம்) என்ற நூலில், விபரங்களை அறியாமல் முற்றிலும் அறியாமையினால் இதனைச் செய்த பாமர மக்களுக்குரிய சலுகையைக் குறித்து மட்டுமே விவரித்துள்ளார்கள். எனவே, முஹம்மது அலவி மாலிகி போன்றவர்களோ அல்லது அவர்கள் அல்லாத வேறு எவரோ இந்த விழாவைத் தாங்கள் செய்த காரணத்தினாலோ, அல்லது இச்செயலை நல்லதென்று பாராட்டியதாலோ அல்லது இதன் பக்கம் மக்களை அழைத்ததாலோ—அவர்களைப் பார்த்து யாரும் ஏமாந்துவிடக்  கூடாது. ஏனெனில், மார்க்கத்தில் இறுதி ஆதாரம் சாதாரண மனிதர்களின் சொந்தக் கூற்றுகளில் இல்லை; மாறாக, மார்க்க ஆதாரம் என்பது தூய்மையான அல்லாஹ் தன் திருக்குர்ஆனில் கூறியவற்றிலும், அவனுடைய தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் தங்களது சுன்னாவில் காட்டித் தந்தவற்றிலும் மற்றும் இந்த உம்மத்தின் நேர்மையான முன்னோர்கள் (ஸலஃபுகள்) ஏகோபித்த விதிகளிலும் மாத்திரமே உள்ளது.

(நூல்: மஜ்மூஃ ஃபதாவா இப்னு பாஸ்; பாகம்: 9, பக்கம்: 211)

மேற்குறிப்பிட்ட விடயங்களின் சுருக்கம்: மீலாது விழா கொண்டாடுவது என்பது மார்க்கத்தில் ஆதாரமில்லாத ஒரு புதுமை (பித்அத்) என்று தீர்ப்பளிப்பதானது சுன்னாவைப் பற்றிய விழிப்புணர்வு இல்லாத ஒரு பாமரன், அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் மீது கொண்டுள்ள அன்பு மற்றும் நல்ல நோக்கத்தின் காரணமாகச் செய்யும் அந்தச் செயலுக்கு அவனுக்கு நற்கூலி கிடைக்கக்கூடும் என்ற மார்க்க விதிக்கு எவ்விதத்திலும் முரணாகாது.

மேலும், இங்கு அவனுக்குக் கிடைக்கக்கூடிய அந்த நற்கூலி என்பது, அல்லாஹ்வின் தூதர் மீது அவன் வைத்துள்ள அந்த உன்னதமான 'அன்பிற்கும் கண்ணியத்திற்கும்' மட்டுமே உரியதே தவிர, அவன் செய்த அந்த பித்அத்தான செயலுக்காக அல்ல.

மாறாக, இக்கொண்டாட்டம் மார்க்கத்தில் தடுக்கப்பட்ட ஒரு பித்அத் என்பதைத் தெளிவாகத் தெரிந்திருந்தும் ஒருவன் அதனைச் செய்தால், அவன் நிச்சயமாகத் தண்டனைக்குரிய குற்றவாளியாவான், மேலும், அவனது விவகாரத்தில் அவனுக்கு எவ்வித மார்க்கச் சலுகைகளும் கிடையாது; அத்துடன் அவனது அந்த நல்ல நோக்கம் அவனுக்கு எவ்விதப் பயனையும் அளிக்காது.

அல்லாஹ்வே மிக அறிந்தவன்.

மூலநூட்கள்

பித்ஆ

மூலம்

இஸ்லாம் கேள்வி-பதில் இணையதளம்

at email

செய்திமடல்

தள செய்திகள் மற்றும் அவ்வப்போது புதுப்பிப்புகளைப் பெற அஞ்சல் பட்டியலில் இணையவும்

phone

இஸ்லாம் கேள்வி பதில் செயலி

உள்ளடக்கத்தை விரைவாக அணுகவும் ஆஃப்லைன் உலாவலுக்கும்

download iosdownload android