ஷைகுல் இஸ்லாம் இப்னு தைமிய்யா அவர்களின் அகீதா (கொள்கை), இமாம்கள் அவர் மீது புரிந்த புகழுரைகள் மற்றும் அவர் குறித்த இப்னு ஹஜர் அவர்களின் நிலைப்பாடு:

கேள்வி 96323

ஷேக் இப்னு தைமிய்யா அவர்களின் அகீதா (கொள்கை) குறித்த எனது கேள்விக்குப் பதிலளிக்குமாறு வேண்டுகிறேன். அவர் சரியான கொள்கையிலிருந்து வழிதவறிவிட்டாரென்றும், அல்லாஹ்வை மனிதர்களின் பண்புகளைக் கொண்டு (உருவகப்படுத்தி) வர்ணித்தார் என்றும் நான் படித்துள்ளேன். மேலும், இமாம் இப்னு ஹஜர் அல்-அஸ்கலானி போன்ற பேரறிஞர்கள் அவரை மதிப்பதில்லை என்றும் படித்துள்ளேன். இந்த விவகாரத்தை எனக்குத் தெளிவுபடுத்த முடியுமா?

பதில்

அல்லாஹ்வுக்கே புகழும், இறைவனின் தூதர் மீது பிரார்த்தனையும் சாந்தியும் உண்டாகட்டும்,

முதலாவதாக: ஷைகுல் இஸ்லாம் அஹ்மத் பின் அப்துல் ஹலீம் பின் தைமிய்யா அவர்கள் இஸ்லாத்தின் மிக முதன்மையான மார்க்கச் சீர்திருத்தவாதிகளுள் ஒருவராகக் கருதப்படுகிறார். அவர்கள் ஹிஜ்ரி 661 ஆம் ஆண்டு பிறந்து, ஹிஜ்ரி 728 ஆம் ஆண்டு மரணித்தார்கள். பொதுவாக ஒரு சீர்திருத்தவாதியின் தாக்கம் அவர் வாழும் காலத்திலும் அவரது நூற்றாண்டிலும் மட்டுமே இருக்கும்; ஆனால், ஷைகுல் இஸ்லாம் அவர்களின் தாக்கமோ அவரது காலத்தில் தொடங்கி, இன்றுவரை வாழும் மார்க்க அறிஞர்கள், மாணவர்கள் மற்றும் நபிவழியை பின்பற்றும் இஸ்லாமிய அமைப்புகள் என அனைவரிடமும் தொடர்ந்து நீடித்துக் கொண்டே இருக்கிறது. மார்க்கத்தின் எதிரிகளான யூதர்கள், கிறிஸ்தவர்கள் ஆகியோருக்குப் பதிலடி கொடுப்பதிலும், இஸ்லாத்தின் பெயரால் இயங்கும் ராஃபிழாக்கள் (ஷியாக்கள்), ஹுலூலியாக்கள், ஜஹ்மியாக்கள் போன்ற வழிகெட்ட பிரிவினர்களுக்கும், அஷ்அரியாக்கள், முர்ஜிஆக்கள் போன்ற வழிகெட்ட பிரிவினர்களுக்கும் மறுப்புரை வழங்குவதிலும் மார்க்க அறிஞர்கள் இன்றும் அவரது அவரது கல்வி ஊற்றிலிருந்து அறிவைப் பெற்றுக் கொள்கிறார்கள்.

மேலும், மார்க்க சட்டக் கலை (ஃபிக்ஹ்), ஹதீஸ் கலை, குர்ஆன் விரிவுரை மற்றும் நற்பண்புகள் ஆகிய விவகாரங்களில் அவரின் துல்லியமான மார்க்க ஆய்வுகள், உதாரணங்கள் குறிப்பிட்டு விவரிக்க வேண்டிய அவசியமில்லாத அளவிற்குப் பிரசித்தி பெற்றவை ஆகும்; அவர் எழுதிய நூட்களின் தொகுப்புகளே அதற்குப் போதிய சான்றுகளாக விளங்குகின்றன. அவர்கள் எங்களைப் போன்றவர்களுடைய நற்சான்றிதழுக்கு எவ்விதத் தேவையுமற்றவர்; மாறாக, அவரது மார்க்க அறிவும் ஒரு அறிவீனர் அல்லது பிடிவாதத்திற்காக உண்மையை நிராகரிப்பவர் போன்றோரைத் தவிர வேறு எவராலும் மறுக்க முடியாத யதார்த்தமான சான்றாக அன்றும் இன்றும் விளங்கி வருகிறது.

இரண்டாவதாக:
அவரது காலத்திலும், அவருக்குப் பின்னரும் வாழ்ந்த மார்க்க இமாம்கள் வழங்கியுள்ள சாட்சியங்கள், நேர்மையாளராக இருக்கும் ஒருவருக்கு இந்த இமாமிற்கு எதிராக மார்க்கத்தின் எதிரிகளும் சுன்னாவின் எதிரிகளும் இட்டுக்கட்டிய அவதூறுகள் அனைத்தும் முற்றிலும் பொய்யானவை என்பதைத் தெளிவாக நிரூபித்துக் காட்டும். இந்த நற்சான்றுகளுக்கு மத்தியில் மாபெரும் இந்த இமாமின் கல்வி, மார்க்க ஞானம் மற்றும் அவரது வலுவான ஆதாரங்கள் ஆகியவை தெளிவாக விவரிக்கப்பட்டுள்ளன. இதன் மூலமாகவே, இறை நிராகரிப்பாளர்கள் மற்றும் பித்அத்வாதிகள் எதற்காக இவரை எதிர்த்துப் போராடினார்கள் என்ற காரணமும் அறியப்படுகிறது; அதாவது, "அவர்களுடைய வழிகெட்ட கொள்கைகளின் அடித்தளத்தையே அவர் தகர்த்தெறிந்ததால், அவர்களின் போலி வாதங்கள் அனைத்தும் தரைமட்டமாகிப் போயின. இந்தச் சாட்சியங்களுள் சிலவற்றை விவரிப்பதன் மூலம், ஷைகுல் இஸ்லாம் இப்னு தைமிய்யா அவர்களின் கொள்கையின் தூய்மை, அவர் சுன்னாவிற்கு ஆற்றிய ஆதரவு மற்றும் பித்அத்வாதிகளுக்கும் கட்டுக்கதைகளுக்கும் அவர் வழங்கிய மறுப்புரைகள் ஆகியவை தெளிவாகும்.

இந்த இமாமிற்காக வழங்கப்பட்ட நற்சான்றுகளும் சாட்சியங்களும் அவரது மாணவர்களிடமிருந்தும் அவரது தோழர்களிடமிருந்தும் மட்டுமே வந்தவை அல்ல; மாறாக, அவருக்கு மாறுபட்ட மார்க்கக் கருத்துக்களைக் கொண்டிருந்த எதிர்த்தரப்பினர் கூட அவர் ஒரு மாபெரும் இமாம் என்பதையும், கல்வி மற்றும் ஃபிக்ஹ் ஞானத்தில் அவர் முன்னணியில் இருந்தார் என்பதையும், அவரது வலுவான ஆதாரங்களையும் ஒருமனதாக ஒப்புக்கொண்டு சாட்சியமளித்துள்ளனர். அதுமட்டுமன்றி, அவரது வீரம், வாரி வழங்கும் கொடைத்தன்மை மற்றும் இஸ்லாத்திற்கு ஆதரவாக அல்லாஹ்வின் பாதையில் அவர் புரிந்த தியாகங்கள் ஆகியவற்றிற்கும் அவர்கள் சாட்சியமளித்துள்ளனர். அத்தகைய சில சாட்சியங்களும் நற்சான்றுகளும் பின்வருமாறு:

  1. இமாம் அத்-தஹபீ (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் தங்களின் "முஃஜமு ஷுயூஹ்" எனும் நூலில் குறிப்பிட்டுள்ளதாவது:
    அவர் (இப்னு தைமியா)நமது ஆசானும், இஸ்லாத்தின் மாபெரும் அறிஞர்களில் ஒருவருமாவார்(ஷைகுல் இஸ்லாம்); கல்வி, மார்க்க ஞானம், வீரம், விவேகம், இறைவழிகாட்டுதலின் பேரொளி, வாரி வழங்கும் கொடைத்தன்மை, இந்த உம்மத்தின் மீதான விசுவாசம், நன்மையை ஏவித் தீமையைத் தடுத்தல் ஆகியவற்றில் இக்காலத்தின் தனித்தன்மையுடைய பேரறிஞர் ஆவார். அவர் ஹதீஸ்களைச் செவியேற்றார்; சுய முயற்சியினால் அவற்றை அதிகமாகத் தேடிப் பெற்றுக் குறிப்பெடுத்துக் கொண்டார். ஹதீஸ் கலை சார்ந்த அறிவிப்பாளர்கள், அவர்களின் காலகட்டங்கள் குறித்து ஆழமாக ஆராய்ந்து, வேறு எவராலும் திரட்ட முடியாத அளவிற்கு அரிய மார்க்கத் தகவல்களைத் திரட்டித் தந்தார்.

அவர் திருக்குர்ஆனின் விரிவுரையில் பெரும் நிபுணத்துவம் பெற்று விளங்கினார்; தங்குதடையற்ற தங்களின் இயற்கை ஆற்றலினாலும், சிக்கலான விவகாரங்களின் ஆணிவேரைக் கண்டறியும் கூர்ந்த சிந்தனையினாலும் குர்ஆனின் மிக நுட்பமான ஆழமான அர்த்தங்களுக்குள் மூழ்கி, அதற்கு முன் எவரும் கண்டிராத பல மார்க்க நுணுக்கங்களை அதிலிருந்து வெளிக்கொணர்ந்தார். அவர் ஹதீஸ் கலையிலும் சிறந்து விளங்கி, அதனை மனனமிட்டுப் பாதுகாத்தார்; அவர் மனனம் செய்திருந்த அளவிற்கு ஹதீஸ்களை அதன் மூல ஆதாரங்களோடும், அறிவித்த நபித்தோழர்களின் விபரங்களோடும் மனனம் செய்திருந்தவர்கள் மிகக் குறைவேயாவர். ஒரு விவகாரத்திற்கு ஆதாரம் சமர்ப்பிக்கும் நேரத்தில், அந்த ஹதீஸ்களைத் தங்களின் நினைவாற்றலிலிருந்து உடனடியாக ஒப்புவிக்கும் பேராற்றல் அவரிடம் இருந்தது.

மார்க்கச் சட்டக் கலை ஞானத்திலும், மத்ஹபுகளின் கருத்து வேறுபாடுகளிலும், நபித்தோழர்கள் மற்றும் தாபியீன்களின் மார்க்கத் தீர்ப்புகளிலும் அவர் ஏனையவர்களை விட மிக மேலோங்கித் திகழ்ந்தார். எந்தவொரு விவகாரத்திலும் அவர் மார்க்கத்தீர்ப்பு கொடுக்கும் போது, ஒரு குறிப்பிட்ட மத்ஹபை மட்டும் பற்றிக் கொண்டிருக்காமல், தன்னிடம் எந்தவொரு விஷயத்திற்கு வலுவான மார்க்க ஆதாரம் இருக்கிறதோ அதன் அடிப்படையிலேயே தீர்ப்பு வழங்கினார். அவர் அரபு மொழியின் இலக்கண நெறிமுறைகளையும், அதன் கிளைகளையும், அதன் காரணப் பெயர்களையும், மொழி வேறுபாடுகளையும் மிகத் துல்லியமாகக் கற்றுத் தேர்ந்திருந்தார். அத்துடன், அவர் தத்துவ அறிவியலையும் ஆழமாகக் கற்று,  தர்க்கவாதிகளின் வாதங்களை நன்கு அறிந்து, அவர்களுக்கு மார்க்க ரீதியாகப் பதிலடி கொடுத்து, அவர்களின் பிழைகளைச் சுட்டிக்காட்டி எச்சரித்தார்.

வியக்கத்தக்க மிகத் தெளிவான சான்றுகளின் மூலம் சுன்னாவை நிலைநிறுத்த உதவி செய்தார். மார்க்கக் கொள்கையில் மாறுபட்டவர்களால் அல்லாஹ்வின் பாதையில் அவர் பல இன்னல்களுக்கு ஆளாக்கப்பட்டார்; தூய்மையான சுன்னாவிற்கு அவர் ஆதரவு வழங்கியபோது அச்சுறுத்தப்பட்டார். இறுதியாக, அல்லாஹ் அவரது புகழை மேலோங்கச் செய்தான்; இறையச்சமுடைய நல்லடியார்களின் உள்ளங்களை அவர் மீது அன்புகொள்ளச் செய்து, அவருக்காகப் பிரார்த்திக்க வைத்தான். மேலும், அவரது எதிரிகளை அல்லாஹ் இழிவுபடுத்தினான். அவரது வழிகாட்டுதலின் மூலம் பல்வேறு மார்க்கப் பிரிவுகளைச் சார்ந்த மனிதர்களுக்கு அல்லாஹ் நேர்வழி காட்டினான். மேலும், மன்னர்கள் மற்றும் ஆட்சியாளர்களின் உள்ளங்களை பெரும்பாலும் அவருக்குக் கட்டுப்பட்டு நடக்குமாறு அல்லாஹ் திருப்பினான்.

தாத்தாரியப் மங்கோலியப் படைகளும் அக்கிரமக்காரர்களும் தங்களின் அகம்பாவத்துடன் குதிரைகளில் திரண்டு வந்து, முஸ்லிம்கள் மத்தியில் அல்லாஹ்வைக் குறித்துப் பல்வேறு எண்ணங்கள் தோன்றி, நம்பிக்கையாளர்கள் உலுக்கப்பட்டு, நயவஞ்சகம் தலைதூக்கிய அந்தப் பேராபத்தான காலகட்டத்தில், ஆட்சியாளர்களை நல்வழியில் உறுதிப்படுத்தியதன் மூலம் அவர் ஷாம் (சிரியா) தேசத்திற்கும், ஏன் ஒட்டுமொத்த இஸ்லாத்திற்கும் மறுவாழ்வு தந்தார்.

அவரது நற்பண்புகள் மிக அதிகமானவை; என்னைப்போன்ற ஒருவர் அவரது வாழ்க்கை வரலாற்றைச் சுட்டிக்காட்டி விளக்குவதை விடவும் அவர் மாபெரும் அந்தஸ்து பெற்றவர் ஆவார். (கஃபாவின்) ருக்னுக்கும் மகாமிற்கும் இடையில் நின்று நான் சத்தியம் செய்வதாக இருந்தால், கண்டிப்பாக இவ்வாறு சத்தியம் செய்வேன்: 'நான் எனது கண்களால் அவரைப் போன்ற ஒருவரைப் பார்த்ததே இல்லை; அவரும் தன்னைப்போன்ற ஒருவரைத் தன் வாழ்நாளில் கண்டதில்லை.'

(பார்க்க: இப்னு ரஜப் அல்-ஹன்பலி எழுதிய "தைல் தபகாத் அல்-ஹனாபிலா" - பாகம்: 4, பக்கம்: 390).

  1. ஹாஃபிழ் இமாத் உத்தீன் அல்-வாஸிதி (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் குறிப்பிட்டுள்ளதாவது:
    அல்லாஹ்வின் மீது ஆணையாக! மீண்டும் அல்லாஹ்வின் மீது ஆணையாகச் சொல்கிறேன்; இந்த உலகத்தில் உங்களது ஆசான் இப்னு தைமிய்யாவைப் போன்ற ஒருவரை கல்வி ஞானத்திலோ, அதனைச் செயல்படுத்துவதிலோ, ஆன்மீகத்திலோ, நற்பண்புகளிலோ, சுன்னாவைப் பின்பற்றுவதிலோ, வாரி வழங்கும் கொடையிலோ, சகிப்புத்தன்மையிலோ மற்றும் அல்லாஹ்வின் வரம்புகள் மீறப்படும்போது அவனுக்காக எழுந்து நிற்பதிலோ இந்த உலகம் கண்டதில்லை. அவர் கொள்கையில் மிகவும் உண்மையானவர்; கல்வி ஞானத்திலும், மன உறுதியிலும் மிகச்சரியானவர். சத்தியத்திற்கு ஆதரவாக நிற்பதிலும், அதனை நிலைநிறுத்துவதிலும் மிக உயர்ந்த லட்சியமும் ஆற்றலும் கொண்டவர். வாரி வழங்குவதில் அள்ளிக்கொடுக்கும் கரங்களுக்குச் சொந்தக்காரர்; முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் சுன்னாவைப் பின்பற்றுவதில் மிக முழுமையானவர். முஹம்மதிய தூத்துவத்தையும் அதன் சுன்னத்துகளையும் தங்களின் சொல்லாலும் செயலாலும் அப்பட்டமாக வெளிப்படுத்தக்கூடிய இவரைத் தவிர ஒருவரை நமது காலத்தில் நாம் கண்டதில்லை. 'நிச்சயமாக இதுவே சுன்னாவைப் பின்பற்றுவதன் உண்மையான இலக்கணமாகும். என்பதை நேர்மையான தூய உள்ளம் கொண்ட எவரும் சாட்சியமளிப்பர்:

(நூல்: அல்-உகூதுத்துர்ரிய்யா - பக்கம்: 311).

  1. ஹாஃபிழ் ஜலாலுத்தீன் அஸ்-ஸுயூத்தி (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் தங்களின் "தபகாதுல் ஹுஃப்பாழ்" நூலில் குறிப்பிட்டுள்ளதாவது:
    இப்னு தைமிய்யா அவர்கள் மார்க்க ஆசானும், பேரறிஞரும், ஹதீஸ் ஆய்வாளரும், விமர்சகரும், சட்ட வல்லுனரும், முஜ்தஹிதும் (சுய ஆய்வுத் தகுதி பெற்றவர்), திருக்குர்ஆனின் மிகச் சிறந்த விரிவுரையாளரும், ஷைகுல் இஸ்லாமும் ஆவார். அவர் உலகப் பற்றற்ற துறவிகளின் அடையாளமாகவும், இக்காலத்தின் அரிய மேதையாகவும் திகழ்ந்தார். அவர் தக்கியுத்தீன் அபூ அல்-அப்பாஸ் அஹ்மத் ஆவார். அவர் முஃப்தி ஷிஹாபுத்தீன் அப்துல் ஹலீமின் மகனும், முஜ்தஹிதான இமாமும் ஷைகுல் இஸ்லாமுமான மஜ்துத்தீன் அப்துஸ் ஸலாம் பின் அப்தில்லாஹ் பின் அபில் காசிம் அல்-ஹர்ரானி அவர்களின் பேரனும் ஆவார்.

அவர் இஸ்லாமிய வரலாற்றின் மாபெரும் தலைவர்களுள் ஒருவராவார். ஹிஜ்ரி 661 ஆம் ஆண்டு ரபியுல் அவ்வல் மாதத்தில் பிறந்தார். அவர் இப்னு அபில் யுஸ்ர், இப்னு அப்தில் தாயிம் உள்ளிட்ட பல மார்க்க அறிஞர்களிடமிருந்து ஹதீஸ்களைச் செவியுற்றார்.

அவர் ஹதீஸ் கலையில் மிகத் தீவிரமான கவனம் செலுத்தினார்; ஹதீஸ்களைத் தொகுத்து, அவற்றில் மிகத் துல்லியமானவற்றைத் தேர்ந்தெடுத்தார். ஹதீஸ் அறிவிப்பாளர்கள் பற்றிய விபரங்களிலும், ஹதீஸ்களின் நுட்பமான குறைபாடுகளைக் கண்டறிவதிலும், அதன் சட்டப் புரிதலிலும் பெரும் நிபுணத்துவம் பெற்று விளங்கினார். அத்துடன் இஸ்லாமிய அறிவியல் மற்றும் தத்துவ இயல் உள்ளிட்ட பல்வேறு கல்வித் துறைகளிலும் சிறந்து விளங்கினார்.

அவர் கல்வி ஞானத்தின் மகாசமுத்திரமாகத் திகழ்ந்தார்; மனித வரலாற்றில் விரல் விட்டு எண்ணக்கூடிய பேரறிஞர்களுள் ஒருவராகவும், உலகப் பற்றற்ற தனித்துவமிக்க மனிதராகவும் இருந்தார். அவர் முன்னூற்றுக்கும் மேற்பட்ட பாகங்களை (நூல்களை) எழுதினார். மார்க்கக் கொள்கைக்காக அவர் பலமுறை சோதிக்கப்பட்டு, இன்னல்களுக்கு ஆளாக்கப்பட்டார்.

அவர் ஹிஜ்ரி 728 ஆம் ஆண்டு துல் கஃதா மாதம் இருபதாம் நாளில் மரணித்தார்.

(நூல்: தபகாதுல் ஹுஃப்பாழ்- பக்கங்கள்: 516, 517).

"ஷாஃபிஃபி மத்ஹபின் முன்னணிச் சட்ட வல்லுநர்களுள் ஒருவரான இப்னு ஹஜர் அல்-ஹைதமி [இவர் ஹிஜிரி 974-ல் மரணித்தவர்; 'ஃபத்ஹுல் பாரி' நூலின் ஆசிரியரும் ஹிஜிரி 852-ல் மரணித்தவருமான இமாம் இப்னு ஹஜர் அல்-அஸ்கலானிக்கு முற்றிலும் வேறுபட்ட வேறொரு நபராவார்] ஷைகுல் இஸ்லாம் இப்னு தைமிய்யா மற்றும் அவரது மாணவர் இமாம் இப்னுல் கய்யிம் ஆகிய இருவர் மீதும் பல கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். அவர்கள் இருவரையும் அல்லாஹ்வுக்கு உருவம் கற்பித்தல் மற்றும் மோசமான கொள்கைகளைக் கொண்டிருப்பதாக அவர் குற்றஞ்சாட்டினார்.

இருப்பினும், பிற்காலத்தில் வாழ்ந்த பல மார்க்க அறிஞர்கள் இப்னு ஹஜர் அல்-ஹைதமியின் வாதங்களுக்கு மிக விரிவான மறுப்புரைகளை வழங்கி, அவரது குற்றச்சாட்டுகளின் போலித்தன்மையை அப்பட்டமாக நிரூபித்துள்ளனர். அத்துடன், திருக்குர்ஆன் மற்றும் சுன்னாவின் தூய கொள்கைகளுக்கு முரணான அனைத்து வழிகெட்ட நம்பிக்கைகளை விட்டும் இவ்விரு மாபெரும் இமாம்களும் முற்றிலும் நிரபராதிகள் (தூய்மையானவர்கள்) என்பதை அவர்கள் ஆதாரப்பூர்வமாக வெளிப்படுத்தியுள்ளனர்."

அவ்வாறு மறுப்பளித்த அறிஞர்களுள் பின்வருபவரும் அடங்குவர்:

  1. முல்லா அலி அல்காரி (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் குறிப்பிட்டுள்ளதாவது:
    (இவ்விரு இமாம்களின் கொள்கைகள் மீது இப்னு ஹஜர் அல்-ஹைதமி சுமத்திய குற்றச்சாட்டுகளையும் விமர்சனங்களையும் குறிப்பிட்டதற்குப் பிறகு அவர் கூறுகிறார்):

"நான் கூறுகிறேன்: அல்லாஹ் இவ்விருவரையும்—அதாவது இமாம் இப்னுல் கய்யிம் மற்றும் அவரது ஆசான் இப்னு தைமிய்யா ஆகியோரை—இந்த மிக மோசமான அவதூறை விட்டும், கொடூரமான குற்றச்சாட்டுகளை விட்டும் பாதுகாப்பானாக! சூஃபியாக்களின் மிக முதன்மையான மார்க்க ஆசானாகக் கருதப்படும் ஷைகுல் இஸ்லாம் அப்துல்லாஹ் அல்-அன்சாரி அவர்களின் 'மனாஸிலுஸ் ஸாஇரீன்' என்ற நூலுக்கு (இவ்விரு இமாம்களும்) எழுதியுள்ள விளக்கவுரைகளை எவர் நடுநிலையோடு விரிவாகப் படிக்கிறாரோ, அவருக்கு ஒரு விஷயம் மிகத் தெளிவாக விளங்கும்: நிச்சயமாக அவர்கள் இருவரும் அஹ்லுஸ் சுன்னா வல் ஜமாஅத்தின் தூய கொள்கை வழியிலான மார்க்க இமாம்களாகவும், ஏன் இந்த உம்மத்தின் இறை நேசர்களாவும் திகழ்ந்தவர்கள் ஆவர். அந்த விளக்கவுரையில் தெளிவாகப் பதிவு செய்யப்பட்டுள்ளவற்றின் நேரடி உரை வடிவம் பின்வருமாறு:

“ஷைகுல் இஸ்லாம் இப்னு தைமிய்யாவின் இந்த வார்த்தைகள் சுன்னாவின் மீதான அவரது மார்க்க அந்தஸ்தையும், கல்வியில் அவரிடமிருந்த பேராற்றலையும் மிகத் தெளிவாக நிரூபிக்கின்றன. மேலும், அவரது எதிரிகளான ஜஹ்மியாக்கள் அவர் மீது சுமத்திய 'தம்ஸீல்' மற்றும் 'தஷ்பீஹ்' (அல்லாஹ்வை மனிதப் பண்புகளோடு ஒப்பிடுதல்) போன்ற அபாண்டமான குற்றச்சாட்டுகளை விட்டும் அவர் முற்றிலும் தூய்மையானவர் என்பதும் இதன் மூலம் தெளிவாகிறது. ஹதீஸ் கலை அறிஞர்கள் மீதும் சுன்னாவைப் பின்பற்றுபவர்கள் மீதும் இத்தகைய போலிப் பட்டங்களைச் சுமத்துவது வழிகெட்ட பிரிவினரின் நீண்டகாலப் பழக்கமாகும்; ராஃபிழாக்கள் (ஷியாக்கள்) சுன்னத்துல் ஜமாஅத் அறிஞர்களை 'நவாஸிபுகள்' (அஹ்லுல் பைத் எதிர்ப்பாளர்கள்) என்று அழைப்பதும், நவாஸிபுகள் இவர்களை 'ரவாஃபிழுகள்' என்று அழைப்பதும், முஃதஸிலாக்கள் இவர்களை 'ஹஷவிய்யாக்கள்' என்று இழித்துப் பேசுவதும் இதற்கு உதாரணங்களாகும்.

இத்தகைய செயல்பாடானது, முற்காலத்தில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களையும், அவர்தம் உன்னதத் தோழர்களையும் 'சபஆக்கள்' (தங்களின் பூர்வீக மார்க்கத்தை விட்டுப் பிரிந்து புதிய மார்க்கத்தைப் புகுத்தியவர்கள்) என்று அன்றைய சத்திய மறுப்பாளர்கள் இழித்துப் பேசி இட்டுக்கட்டிய அவதூறுகளின் நேரடி வாரிசுரிமையே ஆகும். அதேபோல, அசத்தியவாதிகள் தூய்மையான மார்க்க அறிஞர்களுக்கு இத்தகைய மோசமான பட்டப் பெயர்களைச் சூட்டி மகிழ்வது என்பது, ஹதீஸ் மற்றும் சுன்னாவின் காவலர்களுக்குத் தங்களின் நபியிடமிருந்து வழிவழியாகக் கிடைத்த உன்னதமானதொரு சோதனையின் வாரிசுரிமை (மீராஸ்) ஆகும்."

"அல்லாஹ் இமாம் ஷாஃபிஈ அவர்களின் ஆன்மாவைப் பரிசுத்தமாக்குவானாக! அவர் மீது 'ரஃப்ழ்' (அஹ்லுல் பைத் தவிர்ந்த ஏனைய ஸஹாபாக்களை எதிர்த்தல்) என்ற குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட போது அவர் பின்வருமாறு கவி பாடினார்:
'முஹம்மதுடைய குடும்பத்தாரை நேசிப்பதுதான் ரஃப்ழ் (வழிகேடு) என்றால், நிச்சயமாக நான் ஒரு ராஃபிழியே என்று மனிதர்களும் ஜின்களும் சாட்சி சொல்லட்டும்!'

மேலும், நமது ஆசான் அபுஅப்பாஸ் இப்னு தைமிய்யா அவர்களை மீ அல்லாஹ் பொருந்திக்கொள்வானாக! அவர் பாடியதாவது:
'முஹம்மதுடைய குடும்பத்தாரை நேசிப்பதுதான் நஸ்ப் (அஹ்லுல் பைத் எதிர்ப்பு) என்றால், நிச்சயமாக நான் ஒரு நாஸிபியே என்று மனிதர்களும் ஜின்களும் சாட்சி சொல்லட்டும்!'

மூன்றாவதாக: இமாம் இப்னுல் கய்யிம் அவர்களுக்கு அல்லாஹ் மன்னிப்பு வழங்குவானாக! அவர் தங்களின் கவிவரியில் பாடியதாவது:
'அல்லாஹ்வின் (உன்னதப்) பண்புகளைத் திருக்குர்ஆனில் உள்ளபடி உறுதிப்படுத்துவதும், அவற்றைப் பொய்யான மாற்று விளக்கங்களை விட்டும் தூய்மைப்படுத்துவதும்தான் உருவம் கற்பிப்பது(தஜ்ஸீம்) என்றால், எனது இறைவனைப் போற்றிப் புகழ்ந்தவனாகக் கூறுகிறேன்; நான் ஒரு முஜஸ்ஸிமே! சாட்சிகளே, நீங்கள் திரண்டு வாருங்கள், உங்களது பதிவேடுகள் அனைத்தையும் நிரப்பிக் கொள்ளுங்கள்!

(நூல்: முல்லா அலி அல்காரி எழுதிய 'மிர்காத்துல் மஃபாதீஹ்' - பாகம்: 8, பக்கங்கள்: 146, 147).

குறிப்பு: மேற்கோள் குறிகளுக்குள் (“”) இருக்கும் இந்த உரைப்பகுதியை, முல்லா அலி அல்காரி அவர்கள் இமாம் இப்னுல் கய்யிம் அவர்களின் 'மதாரிஜுஸ் ஸாலிக்ஸீன் பைன மனாஸிலி இய்யாக நஃபுது வ இய்யாக நஸ்தஈன்' (பாகம்: 2, பக்கங்கள்: 87, 88) என்ற நூலிலிருந்து மூல உரைப்படியே எடுத்துப் பதிவு செய்துள்ளார்.”

சவூதி அரேபியாவின் ஆராய்ச்சி மற்றும் மார்க்க தீர்ப்புகளுக்கான நிரந்தரக் குழுவின் பேரறிஞர்களிடம் பின்வரும் கேள்வி கேட்கப்பட்டது:

கேள்வி:

"இப்னு தைமிய்யா அவர்கள் அஹ்லுஸ் சுன்னா வல் ஜமாஅத்தைச் சார்ந்தவர் அல்லர் என்றும், அவர் நேர்வழி தவறியவர், பிறரை வழிகெடுப்பவர் என்றும் மக்கள் கூறுகிறார்கள். இமாம் இப்னு ஹஜர் உள்ளிட்ட ஏனைய அறிஞர்களும் இத்தகைய கருத்தையே கொண்டுள்ளதாகவும் கூறுகிறார்கள். இவர்களின் இந்த வாதம் உண்மையானதா இல்லையா?"

அதற்கு அவர்கள் அளித்த பதில்:

"நிச்சயமாக ஷேக் அஹ்மத் பின் அப்துல் ஹலீம் பின் தைமிய்யா அவர்கள் அஹ்லுஸ் சுன்னா வல் ஜமாஅத்தின் மாபெரும் இமாம்களுள் ஒருவராவார். அவர் சத்தியத்தின் பக்கமும், நேரான மார்க்க வழியின் பக்கமுமே மக்களை அழைத்தார். அவர் மூலமாக அல்லாஹ் சுன்னாவிற்கு மாபெரும் ஆதரவை வழங்கி, பித்அத்வாதிகளையும் வழிகெட்டவர்களையும் அடக்கி ஒடுக்கினான்.

எனவே, அவருக்கு எதிராக இதற்கு மாறாகத் தீர்ப்பு வழங்குபவரே உண்மையான பித்அத்வாதியும், நேர்வழி தவறியவரும், பிறரை வழிகெடுப்பவரும் ஆவார். அத்தகையவர்களின் அகக்கண்கள் குருடாகிவிட்டதன் காரணமாகவே அவர்கள் சத்தியத்தை அசத்தியமாகவும், அசத்தியத்தைச் சத்தியமாகவும் எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். எவருடைய உள்ளத்திற்கு அல்லாஹ் நேர்வழியின் ஒளியை வழங்கியுள்ளானோ அவரும், இப்னு தைமிய்யாவின் நூல்களையும் அவருக்கு மாறுபட்ட எதிர்த்தரப்பினரின் நூல்களையும் நடுநிலையோடு படித்து, அவரது வாழ்க்கை வரலாற்றையும் அவர்களின் வரலாற்றையும் ஒப்பிட்டுப் பார்ப்பவரும் இந்த எதார்த்தத்தை மிகத் தெளிவாக அறிந்து கொள்வார். இவ்விரு தரப்பினருக்கும் இடையே உள்ள உண்மை நிலையைப் பிரித்தறிவதற்கு இதுவே மிகச் சிறந்த சான்றாகவும் தீர்ப்பாகவும் அமையும்."

மார்க்க அறிஞர்கள் குழு:

  • ஷேக் அப்துல் அஸீஸ் பின் பாஸ்
  • ஷேக் அப்துர் ரஸ்ஸாக் அஃபீஃபி
  • ஷேக் அப்துல்லாஹ் பின் கதையான்
  • ஷேக் அப்துல்லாஹ் பின் கவூத்

(மூலம்: ஃபதாவா அல்-லஜனதுத் தாயிமா - பாகம்: 2, பக்கங்கள்: 451, 452).

மூன்றாவதாக:
ஷைகுல் இஸ்லாம் இப்னு தைமிய்யா அவர்கள் குறித்து, ஷாஃபிஈ மத்ஹபின் ஹதீஸ் கலைப் பேரறிஞரான ஹாஃபிழ் இப்னு ஹஜர் அல்-அஸ்கலானி (ரஹிமஹுல்லாஹ்) அவர்களின் கூற்றுகள்:

ஹாஃபிழ் இப்னு ஹஜர் அல்-அஸ்கலானி அவர்கள் ஹிஜ்ரி 852-ல் மரணித்த உலகப் புகழ்பெற்ற இமாம் ஆவார். அவர் இஸ்லாமிய உம்மத்திற்கு மாபெரும் பயன் தரக்கூடிய 'ஃபத்ஹுல் பாரி ஷரஹ் ஸஹீஹ் அல்-புகாரி', 'அத்-தல்கீஸ் அல்-ஹபீர்', 'தஹ்தீபுத் தஹ்தீப்' உள்ளிட்ட எண்ணற்ற நூல்களின் ஆசிரியராவார். ஹாஃபிழ் இப்னு ஹஜர் அவர்கள் ஷைகுல் இஸ்லாம் இப்னு தைமிய்யா அவர்களின் கல்வி ஞானம், மார்க்க அந்தஸ்து மற்றும் சுன்னாவைப் பாதுகாக்க அவர் ஆற்றிய தியாகங்கள் குறித்துப் பல்வேறு இடங்களில் போற்றிப் புகழ்ந்து சாட்சியமளித்துள்ளார்.

இப்னு தைமிய்யா அவர்கள் மீது ஹாஃபிழ் இப்னு ஹஜர் முன்வைத்துள்ள சில விமர்சனங்கள் மறுப்புக்குரியவையாகும்; ஏன், ஹாஃபிழ் இப்னு ஹஜர் அவர்களே கூட சில அகீதா விவகாரங்களில் பிற்கால அறிஞர்களால் மறுப்பிற்குள்ளான ஒருவர்தான். எவ்வாறாயினும், அந்த ஆய்வுகளுக்குள் நாம் இப்போது செல்ல வேண்டிய அவசியமில்லை. ஹாஃபிழ் இப்னு ஹஜர் அவர்கள் இப்னு தைமிய்யாவை மதிக்கவில்லை என்று கூறுபவர்களின் அறியாமையைத் தெளிவுபடுத்துவதற்காக, அவர் இப்னு தைமிய்யாவைப் புகழ்ந்துரைத்த உன்னத வார்த்தைகளை மட்டும் இங்குப் பதிவு செய்வது அவசியமாகிறது.

ஹாஃபிழ் இப்னு ஹஜர் அவர்கள் ஷைகுல் இஸ்லாம் இப்னு தைமிய்யா குறித்துப் பதிவு செய்துள்ள சில சான்றுகள் வருமாறு:

  1. ஹனஃபி மத்ஹபின் மீது பிடிவாத குணம் கொண்ட ஒருவர், 'இப்னு தைமிய்யாவை ஷைகுல் இஸ்லாம் என்று அழைப்பவர் காஃபிர் (மார்க்கத்தை விட்டு வெளியேறியவர்) ஆவார்' என்று அபாண்டமாக வாதாடினார். அதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில், இமாம் இப்னு நாஸிருத்தீன் அத்-திமஷ்கி அவர்கள் "அர்-ரத்துல் வாஃபிர்" என்றொரு நூலை எழுதினார். அந்த நூலில், இப்னு தைமிய்யாவை 'ஷைகுல் இஸ்லாம்' என்று போற்றிய 85 முன்னணி இஸ்லாமிய இமாம்களின் பெயர்களையும், அவர்களின் நூல்களிலிருந்து அவர்களின் கூற்றுகளையும் ஆதாரப்பூர்வமாகத் தொகுத்து நிரூபித்திருந்தார்.

இந்த "அர்-ரத்துல் வாஃபிர்" நூலை முழுமையாகப் படித்த ஹாஃபிழ் இப்னு ஹஜர் அல்-அஸ்கலானி அவர்கள், அந்நூலைப் பாராட்டித் தங்களின் அதிகாரப்பூர்வ அணிந்துரையை எழுதினார்கள்; அதன் நேரடி உரை வடிவம் பின்வருமாறு:

"அல்லாஹ்வின் திருநாமத்தால்... அவன் தேர்ந்தெடுத்த அவனது அடியார்களுக்குச் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக!

பெரும் பயன் தரக்கூடிய இத்தனித்துவமான நூலை நான் முழுமையாகப் பார்வையிட்டேன். இதன் ஆசிரியர் எத்தகைய உன்னத நோக்கத்திற்காக இதனைத் தொகுத்தாரோ, அந்த நோக்கத்தை இந்நூல் முழுமையாக நிறைவு செய்துள்ளது. இதன் மூலம் இந்த இமாமின் பரந்த மார்க்க அறிவையும், பயனுள்ள கல்விகளில் அவருக்கிருந்த பேராற்றலையும் நான் நன்கு உணர்ந்துகொண்டேன்; இது அறிஞர்கள் மத்தியில் அவரது அந்தஸ்தை இன்னும் உயர்த்திக் கண்ணியப்படுத்துகிறது.

நிச்சயமாக, இமாம் தக்கியுத்தீன் இப்னு தைமிய்யா அவர்களின் தலைமைத்துவத்தின் புகழானது சூரியனை விட மிக வெளிப்படையானதாகும். அவரது காலத்திலிருந்தே அவரைச் 'ஷைகுல் இஸ்லாம்' என்று அழைக்கும் வழக்கம் தூய்மையான நாவுகளில் இன்றுவரை நிலைபெற்றுள்ளது; நேற்றைய தினத்தைப் போலவே நாளையும் அது தொடரும். அவரது உன்னதமான மார்க்க அளவை அறியாத அறிவிலிகள் அல்லது நேர்மையற்ற பிடிவாதக்காரர்கள் தவிர வேறு எவரும் இதனை மறுக்க மாட்டார்கள். இத்தகைய வழிகெட்ட வாதத்தைக் கையில் எடுத்தவரின் அறியாமை எவ்வளவு மாபெரும் தவறாகும்! அவனது வீழ்ச்சி எவ்வளவு கொடூரமானது!

புகழ்பெற்ற ஹதீஸ் கலை அறிஞர் அலமுத்தீன் அல்-பிர்ஸாலி அவர்கள் தங்களின் வரலாற்று நூலில் சுட்டிக்காட்டியுள்ள ஒரேயொரு சான்று மட்டுமே இம்மாமனிதரின் தலைமைத்துவத்திற்குப் போதுமான யதார்த்தமான ஆதாரமாகும்; அதாவது: 'இஸ்லாமிய வரலாற்றில் இமாம் தக்கியுத்தீன் இப்னு தைமிய்யா மரணித்த போது அவரது ஜனாஸா (இறுதி ஊர்வலம்) தொழுகையில் திரண்டதைப் போன்றதொரு மாபெரும் மக்கள் கூட்டத்தை இந்த சமூகம் அதுவரை கண்டதில்லை.'

முற்காலத்தில் இமாம் அஹ்மத் இப்னு ஹன்பல் அவர்களின் ஜனாஸா தொழுகையில் லட்சக்கணக்கான மக்கள் திரண்டது உண்மைதான். ஆனால், அன்று பக்தாத் நகரில் இருந்த மக்கள் தொகையைப் போன்றோ அல்லது அதைவிடப் பல மடங்கு அதிகமான மக்கள் தொகையோ அன்று திமஷ்கில் (டமாஸ்கஸில்) இருந்திருக்குமேயானால், திமஷ்கில் வாழ்ந்தவர்களில் ஒருவர்கூட இப்னு தைமிய்யாவின் ஜனாஸாவில் கலந்துகொள்வதைத் தவிர்த்திருக்க மாட்டார்கள்.

மேலும், அன்று பக்தாத் நகரில் வாழ்ந்தவர்களில் மிகச் சிலரைத் தவிர மற்ற அனைவரும் இமாம் அஹ்மதின் தலைமைத்துவத்தை முழுமையாக ஏற்றிருந்தனர்; அன்றைய பக்தாத்தின் ஆட்சியாளரும் இமாம் அஹ்மத் மீது அளவற்ற அன்பும் கண்ணியமும் வைத்திருந்தனர். ஆனால், இப்னு தைமிய்யாவின் நிலைமையோ இதற்கு முற்றிலும் நேர்மாறானது! அவர் மரணிக்கும் போது அந்த நாட்டின் ஆட்சியாளர் அங்கு இல்லை. அதுமட்டுமன்றி, அந்நகரிலிருந்த பெரும்பாலான சட்ட வல்லுனர்கள் இப்னு தைமிய்யாவிற்கு எதிராக கடுமையான மார்க்கப் பிரிவினைகளைக் கையாண்டு, அவரைப் பலவாறாக அச்சுறுத்தியதன் காரணமாகவே அவர் சிறையிலேயே மரணிக்க நேர்ந்தது.

இத்தகையதொரு கடுமையான அரசியல் அச்சுறுத்தலான சூழல் இருந்தபோதிலும், அந்த ஊரில் வாழ்ந்தவர்களில் வெறும் மூன்று நபர்களைத் தவிர வேறு எவருமே அவரது ஜனாஸா தொழுகையில் கலந்துகொள்வதையோ, அவருக்காகப் பாவமன்னிப்புத் தேடுவதையோ அல்லது அவரது மறைவிற்காகக் கவலைப்படுவதையோ தவிர்த்துப் பின்வாங்கவில்லை; அந்த மூன்று நபர்களும் பொதுமக்கள் தங்களைத் தாக்கிவிடுவார்கள் என்ற அச்சத்தின் காரணமாகவே வரவில்லை.

எந்தவொரு அரசின் கட்டாயமும் இன்றி, இத்தகையதொரு மாபெரும் மக்கள் கூட்டம் அங்கு தானாகத் திரண்டதற்குக் காரணம்: மக்கள் அவரது மார்க்கத் தலைமைத்துவத்தின் மீதும், அவரது பரக்கத்தின் மீதும் கொண்டிருந்த ஆழமான நம்பிக்கையே அன்றி வேறில்லை. நிச்சயமாக, அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறிய பொன்மொழி ஆதாரப்பூர்வமாக நிருபிக்கப்பட்டுள்ளது: 'நீங்கள் பூமியில் அல்லாஹ்வின் சாட்சிகளாவீர்கள்'

(நூல்: புகாரி, முஸ்லிம்)."

"அடிப்படை கொள்கைகள் மற்றும் கிளைச் சட்டங்கள் ஆகிய விவகாரங்களில் இமாம் தகியுத்தீன் இப்னு தைமிய்யா அவர்கள் வழங்கிய சில தீர்ப்புகளை அன்றிருந்த மார்க்க அறிஞர்கள் சிலர் எதிர்த்ததன் காரணமாக, கெய்ரோவிலும் டமாஸ்கஸிலும் அவருக்கு எதிராகப் பலமுறை மார்க்கக் கூட்டங்கள் கூட்டப்பட்டன.

அவ்வாறு அவருக்கு எதிராகக் கடுமையான மார்க்கப் பிரிவினைகளைக் கையாண்டவர்களும், அன்றைய ஆட்சியதிகாரத்தில் இருந்தவர்களும் அவர் மீது உச்சக்கட்ட விரோதத்தைக் காட்டிய போதிலும், அவற்றுள் எவருமே அவர் ஒரு 'ஸின்தீக்' (மார்க்கத்தை விட்டு வெளியேறிய நயவஞ்சகர்) என்று ஃபத்வா கொடுத்ததாகவோ, அல்லதுஅவரைக் கொலை செய்யலாம் என்று தீர்ப்பு வழங்கியதாகவோ எவ்வித வரலாற்றுப் பதிவும் இல்லை. இதன் காரணமாகவே அவர் கெய்ரோவிலும், பின்னர் இஸ்கந்தரியாவிலும் சிறை வைக்கப்பட நேர்ந்தது. இத்தகைய கடுமையான சூழலிலும், அவரது எதிர்த்தரப்பினர் அனைவரும் அவரது பரந்த மார்க்க அறிவு, உன்னதமான பேணுதல் தன்மை, உலகப் பற்றற்ற தன்மை, வாரி வழங்கும் கொடைத்தன்மை மற்றும் வீரம் ஆகியவற்றை ஏகமனதாக ஒப்புக்கொண்டனர். அதுமட்டுமன்றி, இஸ்லாத்தை பாதுகாப்பதற்காக அவர் ஆற்றிய தியாகங்களையும், இரகசியமாகவும் பகிரங்கமாகவும் அவர் புரிந்த மார்க்க அழைப்புப் பணியையும் அவர்கள் போற்றினர்.

நிலைமை இவ்வாறு இருக்க, அவர் ஒரு இறைமறுப்பாளர் என்று கூறுபவரின் வாதம் எவ்வளவு பெரிய தவறாகும்! அதைவிடக் கொடுமையாக, இப்னு தைமிய்யாவை 'ஷைகுல் இஸ்லாம்' என்று அழைப்பவரே காஃபிர் என்று வாதாடுபவரின் கூற்றை எவ்வாறு மறுக்காமல் இருக்க முடியும்? அவரை இப்பெயரிட்டு (ஷைகுல் இஸ்லாம்) அழைப்பதில் எவ்வித மார்க்கத் தவறும் இல்லை; ஏனெனில் அவர் எவ்விதச் சந்தேகமுமின்றி இஸ்லாத்தின் மாபெரும் வழிகாட்டியாக விளங்கியவர் ஆவார்.

அவர் மீது தவறு என்று சுட்டிக்காட்டப்பட்ட மார்க்க விவகாரங்கள் எதனையும் அவர் தனது சுய இச்சையினாலோ அல்லது மனோ இச்சையினாலோ கூறவில்லை. அத்துடன், ஒரு விஷயத்திற்குத் தெளிவான ஆதாரப்பூர்வமான சான்றுகள் சமர்ப்பிக்கப்பட்ட பிறகும், அவர் பிடிவாத குணத்தோடு தங்களின் பழைய வாதத்தில் ஒருபோதும் நீடித்திருக்கவில்லை. (அல்லாஹ்வின் பண்புகளை) உருவகப்படுத்தும் கொள்கையைக் கொண்டிருப்பவர்களைக் கடுமையாக நிராகரிப்பதிலும், அக்கொள்கையை விட்டும் தன்னை முழுமையாக விடுவித்துக் கொள்வதிலும் அவரது நூட்களும் படைப்புகளும் அப்பட்டமான சான்றுகளாகத் திகழ்கின்றன.

இவையனைத்திற்கும் மத்தியில், அவரும் ஒரு மனிதரே; அவரிடமிருந்தும் தவறுகளும் சரியானவைகளும் நிகழ சாத்தியமுண்டு. அவர் சரியாகக் கணித்த மார்க்க விவகாரங்கள் - அவைதான் மிக அதிகமானவை - அவற்றிலிருந்து நாம் முழுமையாகப் பயன் பெறுவதுடன், அதற்காக அவருக்கு இறை அருளை வேண்டிப் பிரார்த்திக்கவும் வேண்டும். ஆனால், அவர் தவறிழைத்த விவகாரங்களில் அவரை நாம் குருட்டுத்தனமாகப் பின்பற்றக் கூடாது. எனினும், அந்தத் தவறுகளுக்காக அவர் மார்க்க ரீதியாகக் குற்றமற்றவர் ஆவார்; ஏனெனில் அவர் ஒரு முஜ்தஹிதிற்குரிய (சுய ஆய்வு செய்வதற்குரிய) அனைத்துத் தகுதிகளையும் முழுமையாகப் பெற்றிருந்தார் என்பதை அவரது காலத்து இமாம்கள் அனைவரும் ஏகோபித்துச் சான்றளித்துள்ளனர்.

எந்தளவுக்கென்றால், அவருக்கு எதிராக மிகத் தீவிரமான மார்க்கப் பிரிவினைகளைக் கையாண்டு, அவருக்குப் பல இன்னல்களை விளைவிக்க முன்னின்ற முன்னணி அறிஞரான ஷேக் கமாலுத்தீன் அஸ்-ஸமல்கானி அவர்களே இப்னு தைமிய்யாவிற்கு இத்தகுதியை உறுதி செய்து சாட்சியமளித்துள்ளார். அதேபோல, இப்னு தைமிய்யாவுடன் மார்க்க விவாதங்களில் நேருக்கு நேர் நின்று விவாதிக்க முடிந்த ஒரேயொரு அறிஞராகத் திகழ்ந்த ஷேக் ஸத்ருத்தீன் இப்னுல் வகீல் அவர்களும் இப்னு தைமிய்யாவின் இந்த உன்னதத் தகுதியை முழுமையாக ஒப்புக்கொண்டுள்ளார்."

"மிகவும் ஆச்சரியப்படத்தக்க விஷயம் என்னவென்றால், இம்மாமனிதர் (இப்னு தைமிய்யா) தான் வழிகெட்ட பிரிவினர்களான ராஃபிழாக்கள் (ஷியாக்கள்), ஹுலூலியாக்கள் மற்றும் இத்திஹாதியாக்கள் (அனைத்தும் இறைவனே என்ற கொள்கையுடையோர்) ஆகியோருக்கு எதிராக மிக ஆக்ரோஷமாக களத்தில் நின்று எதிர்த்தவர்களில் முதன்மையானவர் ஆவார். இவர்களுக்கு மறுப்புரை வழங்கி அவர் எழுதியுள்ள நூட்கள் உலகப் பிரசித்தி பெற்றவை; இவர் வழங்கியுள்ள மார்க்கத் தீர்ப்புகள் கணக்கிலடங்காதவை.

அப்படியிருக்க, இப்னு தைமிய்யா ஒரு இறைமறுப்பாளர் என்று கூறப்படும் அவதூறைக் கேட்கும்போது அந்த வழிகெட்ட பிரிவினர்களின் கண்கள் எவ்வளவு குளிர்ச்சி அடையும்! அவரைப் போன்ற ஒருவரை இறைமறுப்பாளர் என்று வாதாடுபவனைக் காணும்போது அவர்கள் எவ்வளவு மகிழ்ச்சி அடைவார்கள்!

எனவே, மார்க்கக் கல்வியைக் கற்றுக் கொண்டு சற்றேனும் பகுத்தறிவு உள்ள ஒரு மனிதனின் மீதான கடமை என்னவென்றால், அவர் இந்த இமாமின் புகழ்பெற்ற மூல நூட்களை நேரடியாகப் படித்து அவரது வார்த்தைகளை ஆழமாக ஆராய வேண்டும்; அல்லது நம்பகமான மார்க்க அறிஞர்களின் வாயிலாக அவரது கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும். அவ்வாறு ஆராயும்போது, உண்மையில் மார்க்க வரம்புகளுக்கு முரணான எதையேனும் அவர் கண்டால், நன்னோக்கத்துடன் மக்களை அதிலிருந்து எச்சரிக்க வேண்டும்; அதேநேரம், அவர் சரியாக கணித்த ஏனைய மார்க்க விவகாரங்களுக்காக அவரது நற்பண்புகளைப் போற்றிப் புகழ வேண்டும். இதுவே ஏனைய இஸ்லாமிய அறிஞர்களின் விவகாரத்திலும் காலம் காலமாகப் பின்பற்றப்பட்டு வரும் நடுநிலையான மார்க்க நெறிமுறையாகும்.

இமாம் தகியுத்தீன் இப்னு தைமிய்யா அவர்களின் மார்க்கப் பங்களிப்புகளுக்குச் சான்றாக, அவருக்கு மாறுபட்டவர்களும் உடன்பட்டவர்களும் ஒருசேரப் படித்துப் பயன்பெறக்கூடிய எண்ணற்ற பயனுள்ள நூட்களின் ஆசிரியரான அவரது புகழ்பெற்ற மாணவர் ஷேக் ஷம்ஸுத்தீன் இப்னுல் கய்யிம் அல்-ஜவ்ஸிய்யா மட்டுமே இருந்திருந்தால் கூட, அதுவே இப்னு தைமிய்யா அவர்களின் உன்னத மார்க்க அந்தஸ்திற்கு மிக உன்னதமானதொரு யதார்த்தமான சான்றாக அமைந்திருக்கும். நிலைமை இவ்வாறிருக்க, ஹன்பலி மத்ஹப் அறிஞர்களைத் தாண்டி, அவரது காலத்து ஷாஃபிஈ மத்ஹப் உள்ளிட்ட ஏனைய மத்ஹபுகளின் முன்னணி இமாம்கள் அனைவரும் அவர் கல்வி ஞானத்தில் மேலோங்கி நின்றார் என்றும், குர்ஆன்-ஹதீஸின் வெளிப்படையான மற்றும் மறைமுகமான நுட்பமான அர்த்தங்களைப் புரிந்துகொள்வதில் தனித்துவம் பெற்றுத் திகழ்ந்தார் என்றும் ஏகமனதாகச் சாட்சியமளித்துள்ளனர்.

ஆகவே, இத்தகைய மாபெரும் சிறப்புகளைக் கொண்ட ஒருவரை எவர் காஃபிர் என்று வர்ணிக்கிறாரோ அல்லது அவரை 'ஷைகுல் இஸ்லாம்' என்று அழைப்பவரைக் காஃபிர் என்று கூறுகிறாரோ, அவனது வார்த்தைகளுக்கு மார்க்கத்தில் எவ்வித மதிப்பும் இல்லை; இத்தகைய உயரிய விவகாரத்தில் அவனது கூற்றை எவரும் சற்றும் பொருட்படுத்தக் கூடாது. மாறாக, அவன் சத்தியத்தின் பக்கம் திரும்பி, நேர்வழிக்குக் கட்டுப்படும் வரை அவனது இந்த வழிகெட்ட போக்கை கடுமையாகக் கண்டித்துத் தடுத்து நிறுத்துவது கடமையாகும். நிச்சயமாக அல்லாஹ் சத்தியத்தையே கூறுகிறான்; அவன் நேரான வழியைக் காட்டக்கூடியவன் ஆவான். அல்லாஹ்வே நமக்கு போதுமானவன்; அவன் சிறந்த பொறுப்பாளன் ஆவான்."

ஹாஃபிழ் இப்னு ஹஜர் அவர்களின் சொந்தக் கையெழுத்தின் விபரம் (அல்லாஹ் அவரது வாழ்நாளை நீடிப்பாக்குவானாக):

இதனைத் எழுதியவர்: அஹ்மத் பின் அலி பின் முஹம்மத் பின் ஹஜர் அல்-ஷாஃபிஈ (அல்லாஹ் அவரை மன்னிப்பானாக). இது ஹிஜ்ரி 835 ஆம் ஆண்டு, ரபியுல் அவ்வல் மாதம் ஒன்பதாம் நாள், வெள்ளிக்கிழமை எழுதப்பட்டது. அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்தவனாகவும், அவனது தூதர் முஹம்மத் மற்றும் அவர்தம் குடும்பத்தினர் மீது ஸலவாத்தும் ஸலாமும் பொழிந்தவனாகவும் (இதனை எழுதியுள்ளேன்).

இமாம் இப்னு நாஸிருத்தீன் அத்-திமஷ்கி எழுதிய "அர்-ரத்துல் வாஃபிர்" - பக்கங்கள்: 145, 146.

ஹாஃபிழ் இப்னு ஹஜர் அவர்களின் நேரடி மாணவரான ஹாஃபிழ் அஸ்-ஸகாவி தங்களின் "அல்-ஜவாஹிர் வத்-துரர்" என்ற நூலிலும் தங்களது ஆசிரியரின் இந்த உன்னத உரையை அப்படியே பதிவு செய்துள்ளார் (பாகம்: 2, பக்கங்கள்: 734 – 736).

  1. ஹாஃபிழ் இமாம் இப்னு ஹஜர் அல்-அஸ்கலானி அவர்கள், (இருவர் மீதும் இறை அருள் உண்டாவதாக) தங்களது "அத்துரருல்காமினா" என்ற நூலில் ஷைகுல் இஸ்லாம் இப்னு தைமிய்யா அவர்களின் வாழ்க்கை வரலாற்றை மிக விரிவாகப் பதிவு செய்துள்ளார். அதன் தொடக்கத்தில் அவர் குறிப்பிட்டிருப்பதாவது:

"அவரது தந்தை ஹிஜ்ரி 667 ஆம் ஆண்டு அவரை ஹர்ரான் நகரிலிருந்து அழைத்துக்கொண்டு இடம்பெயர்ந்தார். அங்கு அவர் இப்னு அப்தித்தாஇம், அல்-காசிம் அல்-அர்பிலி, அல்-முஸ்லிம் இப்னு அல்லான், இப்னு அபீ உமர் மற்றும் அல்-ஃபக்ர் உள்ளிட்ட பல மார்க்க அறிஞர்களிடமிருந்து ஹதீஸ்களைச் செவியுற்றார். அவர் சுய முயற்சியினால் அதிகமாகப் படித்து, ஸுனன் அபூதாவூத் நூலைத் தம்கையால் பிரதியெடுத்துக் கொண்டார். பல அரிய ஹதீஸ் தொகுப்புகளைத் திரட்டிய அவர், ஹதீஸ் அறிவிப்பாளர்கள் மற்றும் அதன் நுட்பமான குறைபாடுகள் (இலல்) குறித்து ஆழமாக ஆராய்ந்தார்.

அவர் மார்க்கச் சட்டக் கலையைக் கற்று அதில் பெரும் நிபுணத்துவம் பெற்றார்; தனித்துவத்துடன் முன்னணியில் திகழ்ந்து, எண்ணற்ற நூட்களை இயற்றி, மாணவர்களுக்குக் கற்பித்து, மார்க்கத் தீர்ப்புகளையும் வழங்கினார். தம்காலத்து அறிஞர்களை விட அவர் மிக மேலோங்கித் திகழ்ந்தார். ஒரு விவகாரத்திற்குரிய ஆதாரங்களை நினைவாற்றலிலிருந்து உடனடியாக வெளிக்கொணர்வதிலும், அஞ்சா நெஞ்சுறுதியிலும், குர்ஆன்-ஹதீஸ் ஆதாரங்கள் மற்றும் தர்க்க ரீதியான பகுத்தறிவு ஆகியவற்றில் பரந்த அறிவு பெற்றிருந்ததிலும், ஸலஃபுகள் மற்றும் பிற்கால அறிஞர்களின் மத்ஹபுகளை மிக ஆழமாக விவரிப்பதிலும் அவர் ஒரு பெரும் ஆச்சரியமாகத் திகழ்ந்தார்..." முற்றிற்று.

(நூல்: அல்-துரர் அல்-காமினா ஃபீ அயானில் மிஆதித் தாமினா - பாகம்: 1, பக்கம்: 168).

இவ்வரலாற்றுப் பதிவில், ஷைகுல் இஸ்லாம் (ரஹிமஹுல்லாஹ்) அவர்களின் உன்னத மார்க்க அந்தஸ்தைப் போற்றியும், பகுத்தறிவு மற்றும் குர்ஆன்-ஹதீஸ் சார்ந்த கலைகளில் அவரது தலைமைத்துவத்தை ஏற்றுக்கொண்டும் ஏனைய மாபெரும் இமாம்கள் வழங்கியுள்ள எண்ணற்ற புகழுரைகளை இமாம் இப்னு ஹஜர் அவர்கள் பதிவு செய்துள்ளார். அவற்றுள் பின்வரும் கூற்றும் அடங்கும்:

ஹதீஸ் கலைப் பேரறிஞர் ஹாஃபிழ் ஸலாஹுத்தீன் அல்-அலாயீ அவர்களின் சொந்தக் கையெழுத்தில் எழுதப்பட்ட ஒரு பதிவை நான் படித்தேன். நமது ஆசான்களின் ஆசானான ஹாஃபிழ் பஹாஉத்தீன் அப்தில்லாஹ் பின் முஹம்மத் பின் கலீல் அவர்களின் கல்விச் சான்றிதழில் அதன் நேரடி உரை வடிவம் பின்வருமாறு பதிவு செய்யப்பட்டிருந்தது:

'குறிப்பிடப்பட்ட பஹாஉத்தீன் அவர்கள், நமக்கும் அல்லாஹ் தஆலாவிற்கும் மத்தியில் (நாளை மறுமையில்) சான்றாகத் திகழக்கூடிய நமது ஆசானும், நமது தலைவரும், நமது இமாமுமாகிய மார்க்கப் பேரறிஞரிடம் ஹதீஸ்களைச் செவியுற்றார். அவர் துல்லியமான மார்க்க நிரூபணங்களின் தலைவர்; தங்களைப் பின்பற்றுபவர்களை மிக நேர்த்தியான வழியில் நடத்திச் செல்பவர்; கணக்கிலடங்காத நற்பண்புகளையும், எவராலும் மறுக்க முடியாத வலுவான ஆதாரங்களையும் கொண்டவர். அவரது அந்த உன்னதச் சிறப்புகளை முழுமையாக வரையறுக்க மனிதர்களின் ஆற்றல் போதாது என்பதை உலக நாடுகள் யாவும் ஒருமனதாக ஒப்புக்கொண்டுள்ளன. அல்லாஹ் அவரது உன்னதமான கல்வி ஞானத்தின் மூலம் நம்மைத் தொடர்ந்து பயனடையச் செய்வானாக; மேலும் இம்மையிலும் மறுமையிலும் அவரது மூலமாக நமக்கு நற்பலன்களை வழங்குவானாக!

அவர்தான் இமாமும், இறைஞானம் பெற்ற பேரறிஞரும், கல்விக்கடலும், ஆன்மீகப் பேரொளியும், இமாம்களின் இமாமும், இந்த உம்மத்தின் பரக்கத்தும் (அருட்கொடை), அறிஞர்களின் தலைவரும், நபிமார்களின் கல்வி வாரிசும், முஜ்தஹித்களின் இறுதிப் பிரதிநிதியும், மார்க்க அறிஞர்களுள் தனித்துவம் மிக்கவரும், ஷைகுல் இஸ்லாமும், தலைசிறந்த மார்க்க மேதைகளின் ஆதாரமும், மனித குலத்தின் முன்மாதிரியும், கல்வி கற்பவர்களின் சான்றும், பித்அத்வாதிகளை அடக்கி ஒடுக்கியவரும், மார்க்க விவாதக் களங்களின் கூர்வாளும், கல்வி ஞானத்தின் மகாசமுத்திரமும், பயன் பெறுவோரின் புதையலும், திருக்குர்ஆனின் உன்னத விரிவுரையாளரும், காலத்தின் மாபெரும் அதிசயமும், இக்காலத்தின் தனித்துவம் மிக்க பேரறிஞரும், தக்கியுத்தீனும், முஸ்லிம்களின் இமாமும், அகிலத்தார் அனைவர் மீதும் அல்லாஹ்வின் சான்றாகவும், நல்லடியார்களின் வழியைப் பின்பற்றுபவரும், முற்கால நன்மக்களுக்கு ஒப்பாகத் திகழ்பவரும், பல்வேறு மார்க்கப் பிரிவினருக்குத் தீர்ப்பு வழங்குபவரும், சத்தியத்தின் காவலரும், நேர்வழியின் வழிகாட்டியும், ஹதீஸ் காவலர்களின் தூணாகவும், சொற்கள் மற்றும் அர்த்தங்களின் பேராற்றல் மிக்க மாவீரரும், ஷரீஅத்தின் அடித்தளமும், அரிய பல கலைகளின் சொந்தக்காரருமாகிய அபுல்-அப்பாஸ் இப்னு தைமிய்யா ஆவார்!!'"

(ஆதாரம்: அல்-துரர் அல்-காமினா - பக்கங்கள்: 186 - 187).

நான்காவதாக:
ஹாஃபிழ் இப்னு ஹஜர் அல்-அஸ்கலானி (ரஹிமஹுல்லாஹ்) அவர்களின் நேரடி வார்த்தைகளிலிருந்தோ அல்லது அவர்கள் ஏனைய அறிஞர்களிடமிருந்து எடுத்துப் பதிவு செய்துள்ள சான்றுகளிலிருந்தோ நாம் மேலே தொகுத்து வழங்கிய இந்த உன்னதப் பதிவுகள் அனைத்தும், அவர் ஷைகுல் இஸ்லாம் இப்னு தைமிய்யா அவர்களின் கல்வி மற்றும் மார்க்க அந்தஸ்தை எவ்வளவு உயர்வாக மதித்துப் போற்றினார் என்பதை அப்பட்டமாகப் பறைசாற்றுகின்றன.

இருப்பினும், இதன் பொருள் ஹாஃபிழ் இப்னு ஹஜர் அவர்கள் எந்தவொரு மார்க்க விவகாரத்திலும் ஷைகுல் இஸ்லாத்துடன் எவ்விதக் கருத்து வேறுபாடும் கொள்ளவில்லை என்றோ, அல்லது அவரை எப்போதும் விமர்சித்ததே இல்லை என்றோ அர்த்தமாகாது. ஏனெனில், மார்க்க அறிஞர்கள் தங்களுக்குள் ஒருவருக்கொருவர் மார்க்க ரீதியாக மறுப்புரைகள் வழங்குவது என்பது காலம் காலமாக இருந்து வரும் ஒரு பொதுவான நெறிமுறையாகும். அத்தகைய மறுப்புரைகள் வழங்குவதனால், மறுப்புரை வழங்குபவர் மறுப்புரைக்குரியவரை மதிக்கவில்லை என்று அர்த்தமாகாது; அதையும் தாண்டி அவர் மீது பித்அத்வாதி என்றோ அல்லது வழிகெட்டவர் என்றோ முத்திரை குத்துவதற்கும் அது எவ்விதத்திலும் காரணமாக அமையாது. முற்காலத்தில் இமாம் மாலிக் (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் தங்களின் உலகப் புகழ்பெற்ற உன்னதப் பொன்மொழியை இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்கள்: "இந்தக் கப்ரின் சொந்தக்காரரைத் தவிர—அதாவது அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களைத் தவிர—மற்ற எவருடைய கூற்றும் ஏற்றுக்கொள்ளப்படவும் செய்யும், அல்லது நிராகரிக்கப்படவும் செய்யும்."

குறிப்பிட்ட ஒரு மார்க்கப் பிரச்சினையில் சத்தியம் ஷைகுல் இஸ்லாமிடம் இருக்கிறதா, அல்லது அவருக்கு மாறுபட்டு மறுப்புரை வழங்கும் ஹாஃபிழ் இப்னு ஹஜர் உள்ளிட்ட ஏனைய அறிஞர்களிடம் இருக்கிறதா என்ற ஆய்வுகளுக்கு அப்பாற்பட்டது இதுவாகும். நிலைமை இவ்வாறு இருக்க, அந்த அறிஞர்கள் இப்னு தைமிய்யா மீது தவறு என்று சுட்டிக்காட்டிய பெரும்பாலான அல்லது ஒட்டுமொத்த விவகாரங்களிலும் உண்மை நிலை என்பது ஷைகுல் இஸ்லாத்தின் பக்கமே மேலோங்கி நிற்கிறது என்னும் போது, அவரை அவதூறு பரப்புபவர்களின் வாதம் எவ்வளவு போலித்தனம் வாய்ந்தது! அல்லாஹ் அவர்கள் அனைவர் மீதும் தன் பேரருளைப் பொழிவானாக.

ஷைகுல் இஸ்லாம் இப்னு தைமிய்யா மீது முன்வைக்கப்பட்ட இத்தகைய விமர்சனங்கள்—குறிப்பாக மேலே சுட்டிக்காட்டப்பட்ட இப்னு ஹஜர் அல்-ஹைதமியின் கடுமையான குற்றச்சாட்டுகள்—குறித்த விரிவான மார்க்க ஆய்வுகளையும், நடுநிலையான தீர்ப்புகளையும் அறிந்துகொள்ள விரும்புவோர், ஷேக் நுஃமான் கைருத்தீன் இப்னு அல்-ஆலூஸி (ரஹிமஹُல்லாஹ்) அவர்கள் எழுதியுள்ள "ஜலாவுல் ஐனைன் ஃபீ முஹாகமதி அல்-அஹ்மதைன்" (அதாவது: அஹ்மத் இப்னு தைமிய்யா மற்றும் அஹ்மத் இப்னு ஹஜர் அல்-ஹைதமி ஆகிய இருவர் மீதான மார்க்க நிலைப்பாடு) என்ற பயனுள்ள உன்னத நூலைப் படித்துப் பயன்பெறலாம்.

அத்துடன், டாக்டர் அப்துல்லாஹ் பின் ஸாலிஹ் அல்-ஃகுஸ்ன் அவர்கள் தயாரித்துள்ள "தஆவா அல்-முனாயிஈன் லி ஷைகில் இஸ்லாம் இப்னு தைமிய்யா" (ஷைகுல் இஸ்லாமிற்கு எதிரானவர்களின் வாதங்களும் அதற்கான மறுப்புகளும்) என்ற மிக உயரிய கல்விசார் ஆய்வு நூலையும் (Academic Research) இதற்காகப் பார்வையிடலாம்.

ஐந்தாவதாக:
ஷைகுல் இஸ்லாம் அவர்கள் நேர்வழிக் கொள்கையிலிருந்து விலகிவிட்டார் என்றும், அல்லாஹ்வைப் படைப்பினங்களின் பண்புகளைக் கொண்டு (உருவகப்படுத்தி) வர்ணித்தார் என்றும் உங்களது கேள்வியில் நீங்கள் குறிப்பிட்டுள்ள விவகாரமானது, ஷைகுல் இஸ்லாம் அவர்களின் மீதும், அவரது தூய வழிமுறை மற்றும் அகீதா மீதும் இட்டுக்கட்டப்பட்ட மிகக் கொடூரமான அபாண்டமும், அப்பட்டமான பொய்யும் ஆகும். அவரது பெரிய அல்லது சிறிய நூல்கள் எதனையாவது சற்றே நடுநிலையோடு படிப்பவர் இந்த எதார்த்தத்தை மிகத் தெளிவாக உணர்ந்துகொள்வார்.

அவரது நூல்களில் விரவிக்கிடக்கும் கொள்கை விதிகளின் உன்னத வாசகங்கள் அனைத்தையும் இங்கு தொகுத்து வழங்குவது சாத்தியமற்றது என்றாலும், அவரது 'ஃபதாவா' தொகுப்பிலிருந்து மிக முக்கியமான சில சான்றுகள் வருமாறு:

அவர்கள் (ரஹிமஹுல்லாஹ்) கூறினார்கள்:

"அல்லாஹ்வைப் போன்றோ அல்லது அவனுக்கு நிகராகவோ அவனது சுயத்தன்மையிலோ, அவனது பண்புகளிலோ அல்லது அவனது செயல்பாடுகளிலோ அல்லாஹ்வுக்கு ஒப்பாக எதுவுமில்லை என்பதில் இந்த உம்மத்தின் முற்கால முன்னோர்களும் (ஸலஃபுகளும்) அதன் மார்க்க இமாம்களும் ஏகோபித்த முடிவில் உள்ளனர். மார்க்க இமாம்கள் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளனர்: எவர் அல்லாஹ்வைப் படைப்பினங்களோடு ஒப்பிடுகிறாரோ அவர் காஃபிர் (இறைமறுப்பாளர்) ஆகிவிட்டார்; மேலும், அல்லாஹ் தன் சுயத்தன்மைக்கு எவற்றை நிலைநிறுத்தி வர்ணித்துள்ளானோ அவற்றை எவர் மறுக்கிறாரோ அவரும் காஃபிர் ஆகிவிட்டார். அல்லாஹ் தன் சுயத்தன்மைக்கு சொல்லியுள்ள பண்புகளோ அல்லது அவனது தூதர் அவனுக்கு சொல்லியுள்ள பண்புகளோ ஒருபோதும் படைப்பினங்களோடு ஒப்பீடாகாது."
(ஆதாரம்: மஜ்மூஉல் ஃபதாவா - பாகம்: 2, பக்கம்: 126)

மேலும் அவர்கள் (ரஹிமஹுல்லாஹ்) கூறினார்கள்:

"இந்த அகீதா விவகாரத்தின் ஒட்டுமொத்தப் பொதுவான விதியாவது: அல்லாஹ் தன் சுயத்தன்மைக்கு எவற்றை வர்ணித்துள்ளானோ, அல்லது அவனது தூதர் அவனுக்கு எவற்றை வர்ணித்துள்ளாரோ மற்றும் முற்கால முஹாஜிரீன்களும் அன்ஸாரிகளுமான நேர்வழி பெற்ற முன்னோர்கள் எவற்றை வர்ணித்தார்களோ, அவற்றைக் கொண்டு மட்டுமே அல்லாஹ்வை வர்ணிக்க வேண்டும்; திருக்குர்ஆன் மற்றும் ஹதீஸின் வரம்புகளைத் தாண்டி இதில் எவரும் சுய விளக்கமளிக்கக் கூடாது.

இமாம் அஹ்மத் இப்னு ஹன்பல் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார்கள்: அல்லாஹ் தன் சுயத்தன்மைக்கு எவற்றை வர்ணித்துள்ளானோ, அல்லது அவனது தூதர் அவனுக்கு எவற்றை வர்ணித்துள்ளாரோ, அவற்றைக் கொண்டு மட்டுமே அல்லாஹ்வை வர்ணிக்க வேண்டும்; திருக்குர்ஆன் மற்றும் ஹதீஸின் வரம்புகளைத் தாண்டி இதில் அணுவளவும் கடந்து செல்லக் கூடாது."

"அல்லாஹ் தன் சுயத்தன்மைக்கு எவற்றை வர்ணித்துள்ளானோ, அவனது தூதர் அவனுக்கு எவற்றை வர்ணித்துள்ளாரோ, அவற்றைக் கொண்டு மட்டுமே அல்லாஹ்வை வர்ணிப்பதுதான் ஸலஃபுகளின் (முற்கால முன்னோர்களின்) தூய வழிமுறை ஆகும். அதில் அவர்கள் எவ்வித மாற்றியமைத்தலையும், மறுத்தலையும், வடிவ நிர்ணயத்தையும் மற்றும் ஒப்பிடுதலையும் கையாள்வதில்லை.

அல்லாஹ் தன் சுயத்தன்மைக்கு நிலைநிறுத்தியுள்ள அத்தகைய பண்புகள் யாவும் யதார்த்தமான சத்தியமாகும்; அவற்றில் எவ்விதப் புதிரோ அல்லது மறைமுகப் பொருளோ இல்லை என்பதை நாம் உறுதியாக அறிவோம். மாறாக, பேசக்கூடிய ஒருவரின் பேச்சிலிருந்து அவரது உன்னத நோக்கம் எவ்வாறு நேரடியாகப் புரிந்து கொள்ளப்படுமோ, அவ்வாறே இப்பண்புகளின் பொருளும் நேரடியாகப் புரிந்து கொள்ளப்படும். குறிப்பாக, பேசக்கூடிய அந்த உன்னதத் தூதர் படைப்பினங்களிலேயே தான் கூறுவதைக் குறித்து மிக ஆழமாக அறிந்தவராகவும், கல்வி ஞானத்தையும் மார்க்க விளக்கங்களையும் வழிகாட்டுதல்களையும் மக்களுக்குத் தெளிவுபடுத்துவதில் படைப்புகளிலேயே மிகச் சிறந்த மொழி ஆளுமையும் தெளிவும் கொண்டவராகவும் இருக்கும்போது, அதன் எதார்த்தப் பொருள் இன்னும் மிக வெளிப்படையானதாகும்.

இவையனைத்திற்கும் மத்தியில், அல்லாஹ் சுப்ஹானஹு வ தஆலாவைப் போன்றோ அவனுக்கு நிகராகவோ எவ்விதப் பொருளும் இல்லை; அவனது திருநாமங்கள் மற்றும் பண்புகளுடன் விவரிக்கப்படும் அவனது தூய சுயத்தன்மையிலும் சரி, அல்லது அவனது செயல்பாடுகளிலும் சரி (அவனுக்கு நிகர் யாருமில்லை). அல்லாஹ் சுப்ஹானஹு வ தஆலாவிற்கு எதார்த்தமானதொரு சுயத்தன்மை இருக்கிறது என்றும், அவனுக்கு எதார்த்தமான செயல்பாடுகள் இருக்கின்றன என்றும் நாம் எவ்வாறு உறுதியாக நம்புகிறோமோ, அவ்வாறே அவனுக்கு எதார்த்தமான பண்புகள் இருக்கின்றன என்றும் நாம் உறுதியாக நம்புகிறோம். எனினும், அவனது சுயத்தன்மையிலோ, பண்புகளிலோ அல்லது செயல்பாடுகளிலோ அவனுக்கு நிகராக எப்பொருளும் இல்லை.

குறைபாடுகளையோ அல்லது புதிதாகத் தோன்றுதலையோ ஏற்படுத்தக்கூடிய அனைத்துத் தன்மைகளை விட்டும் அல்லாஹ் எதார்த்தமாகத் தூய்மையானவன் ஆவான். ஏனெனில், அவன் எவ்வித எல்லையும் அற்ற முழுமையான உன்னதப் பெருமைகளுக்குரியவன்; அவன் என்றும் நிலைத்திருப்பவன் என்பதால் அவனுக்குப் புதிதாகத் தோன்றுதல் என்பது முற்றிலும் சாத்தியமற்றதாகும். புதிதாகத் தோன்றுதல் என்பது இல்லாமையிலிருந்து உருவாகுவதைக் குறிக்கும்; மேலும் புதிதாகத் தோன்றும் ஒவ்வொரு பொருளுக்கும் அதனைத் தோற்றுவிக்கக்கூடிய ஒரு தோற்றுவிப்பாளர் அவசியமாகிறார். ஆனால், அல்லாஹ்வோ தன்னிச்சையாகவே என்றும் சுயமாய் நிலைத்திருக்கக்கூடிய உன்னத இறைவன் ஆவான்.

எனவே, ஸலஃபுகளின் கொள்கையானது—பண்புகளை மறுக்கும் வழிகேட்டிற்கும், படைப்புகளோடு ஒப்பிடும் வழிகேட்டிற்கும்—இடையே அமைந்த உன்னதமான நடுநிலைக் கொள்கையாகும். அவர்கள் அல்லாஹ்வின் பண்புகளைப் படைப்புகளின் பண்புகளோடு ஒப்பிடுவதில்லை; அவனது சுயத்தன்மையைப் படைப்புகளின் சுயத்தன்மையோடு ஒப்பிடுவதில்லை. அதேநேரம், அல்லாஹ் தன் சுயத்தன்மைக்கு நிரூபித்துள்ள அல்லது அவனது தூதர் அவனுக்கு நிரூபித்துள்ள பண்புகளை அவர்கள் அடியோடு மறுப்பதும் இல்லை. அவ்வாறு மறுத்தால், அது அவனது அழகிய திருநாமங்களையும் உன்னதப் பண்புகளையும் பாழாக்குவதிலும், அவனது வார்த்தைகளை அதன் இடங்களை விட்டும் மாற்றுவதிலும், அல்லாஹ்வின் திருநாமங்கள் மற்றும் அவனது அத்தாட்சிகளில் வரம்பு மீறுவதிலும் கொண்டு போய் சேர்த்துவிடும்.

உண்மையில், பண்புகளை மறுக்கக்கூடியவர்கள் மற்றும் படைப்புகளோடு ஒப்பிடக்கக்கூடியவர்கள் ஆகிய இவ்விரு வழிகெட்ட பிரிவினருமே ஒரு புள்ளியில் தஃதீல் மற்றும் தம்ஸீல் ஆகிய இவ்விரண்டையும் தங்களுக்குள் ஒன்றாக இணைத்துக் கொண்டவர்கள் ஆவர். ஏனெனில், பண்புகளை மறுக்கக்கூடியவர்கள் அல்லாஹ்வின் திருநாமங்கள் மற்றும் பண்புகளைப் பற்றித் திருக்குர்ஆனில் படிக்கும்போது, படைப்பினங்களுக்குரிய குணங்களை மட்டுமே தங்களின் கற்பனையில் முதலில் கொண்டு வருகிறார்கள்; பின்னர் தாங்கள் கற்பனை செய்த அந்தப் படைப்புக்குரிய குணங்களை அல்லாஹ்விற்கு மறுக்க முற்படுகிறார்கள். இதன் மூலம் அவர்கள் ஒரே நேரத்தில் ஒப்பிடுதலையும் மறுத்தலையும் ஒன்றாகச் செய்கிறார்கள்; அதாவது: தொடக்கத்தில் அல்லாஹ்வைப் படைப்போடு ஒப்பிடுகிறார்கள் பின்னர் அதன் காரணமாக அவனது பண்புகளையே அடியோடு மறுக்கிறார்கள் இது அவர்களின் தரப்பிலிருந்து நிகழ்ந்த மிக மோசமான கற்பனை ஒப்பீடாகும்; இதன் விளைவாக, அல்லாஹ் சுப்ஹானஹு வ தஆலாவின் உன்னத அந்தஸ்திற்குத் தகுதியான அவனது தூய திருநாமங்களையும் பண்புகளையும் அவர்கள் அடியோடு மறுத்துப் பாழாக்கிவிடுகிறார்கள்..."

(நூல்: மஜ்மூஉல் ஃபதாவா - ஷைகுல் இஸ்லாம் இப்னு தைமிய்யா - பாகம்: 5, பக்கங்கள்: 26 - 27).

நாம் ஏற்கனவே சுட்டிக்காட்டியபடி, இந்த முக்கியமான விடயத்தில் ஷைகுல் இஸ்லாம் அவர்களின் தெளிவான மார்க்க விளக்கங்கள் மிக அதிகமாகக் கொட்டிக் கிடக்கின்றன; நேர்மையோடு சத்தியத்தை நாடுவோருக்கு நாம் மேலே குறிப்பிட்டுள்ள இந்தச் சான்றுகளே போதுமானதாகும், இன்ஷா அல்லாஹ்.

வெற்றியை அளிக்கக்கூடியவன் அல்லாஹ் ஒருவனே ஆவான்.

மூலநூட்கள்

சிறப்புகள்

மூலம்

இஸ்லாம் கேள்வி பதில் இணையதளம்

at email

செய்திமடல்

தள செய்திகள் மற்றும் அவ்வப்போது புதுப்பிப்புகளைப் பெற அஞ்சல் பட்டியலில் இணையவும்

phone

இஸ்லாம் கேள்வி பதில் செயலி

உள்ளடக்கத்தை விரைவாக அணுகவும் ஆஃப்லைன் உலாவலுக்கும்

download iosdownload android