மீலாதுன் நபி கொண்டாட்டத்திற்கான மார்க்கத் நிலைப்பாடு.

அல்லாஹுதஆலாவும் அவனுடைய தூதரும் கொண்டு வந்த மார்க்கத்தைப் பின்பற்றுவதற்கான கட்டளை.

அல்லாஹ் மற்றும் அவனுடைய தூதரின் மார்க்கத்தைப் பின்பற்றுமாறு ஏவக்கூடிய மற்றும் மார்க்கத்தில் நூதனமான விடயங்களை (பித்அத்) உருவாக்குவதை தடுக்கும் ஆதாரங்களும் குர்ஆனிலும் சுன்னாவிலும் ஏராளமாக உள்ளன என்பது அனைவரும் அறிந்த விடயமே.

அல்லாஹ் கூறுகிறான்: "(நபியே!) நீர் கூறுவீராக: நீங்கள் அல்லாஹ்வை நேசிப்பவர்களாக இருந்தால், என்னை பின்பற்றுங்கள்; அல்லாஹ் உங்களை நேசிப்பான்; உங்கள் பாவங்களையும் மன்னிப்பான்"(ஆலஇம்ரான்-31). இன்னொரு வசனத்தில், " (மனிதர்களே!) உங்களுக்காக உங்கள் இறைவனிடமிருந்து இறக்கப்பட்டதையே பின்பற்றுங்கள். அவனையன்றி (மற்றெவரையும் உங்களுக்குப்) பொறுப்பாளர்(களாக ஆக்கி, அவர்)களை நீங்கள் பின்பற்றாதீர்கள். (எனினும், இதைக் கொண்டு) உங்களில் மிகக் குறைவானவர்களே சிந்தனை செய்கிறார்கள்.(அல்அஃராஃப்-3). இன்னொரு வசனத்தில், நிச்சயமாக இதுவே என்னுடைய நேரான வழியாகும்; ஆகவே இதனையே பின்பற்றுங்கள் - இதர வழிகளை நீங்கள் பின்பற்ற வேண்டாம், அவை அல்லாஹ்வுடைய வழியிலிருந்து உங்களைப் பிரித்துவிடும், நீங்கள் இறையச்சமுடையவர்களாக ஆவதற்காக (உங்கள் இறைவன்) இவற்றை உங்களுக்கு உபதேசிக்கிறான்'' (அல்அன்ஆம்-153).

நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்: "நிச்சயமாக செய்திகளில் மிகவும் உண்மையானது அல்லாஹ்வின் வேதமாகும். வழிகாட்டல்களில் மிகச் சிறந்தது முஹம்மதின் வழிகாட்டலாகும். விடயங்களில் மிகக் கெட்டவை (மார்க்கத்தில்) நூதனமாக உண்டாக்கப்பட்டவைகளாகும்".

மேலும் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்: "நம்முடைய இந்த (மார்க்க) விவகாரத்தில் அதில் இல்லாத ஒன்றை யாராவது புதிதாக உண்டாக்கினால், அது நிராகரிக்கப்பட்டதாகவே கருதப்படும்" (புகாரி: 2697, முஸ்லிம்: 1718). முஸ்லிம் கிரந்தத்தில் மற்றொரு அறிவிப்பில்: "நம்முடைய கட்டளை இல்லாத ஒரு செயலை யாராவது செய்தால், அது நிராகரிக்கப்படும்" என்று வந்துள்ளது.

மீலாதுன் நபி (நபியவர்களின் பிறந்தநாள்) கொண்டாட்டத்தின் வகைகள்.

மக்கள் மார்க்கத்தில் புதிதாக உருவாக்கிய (பித்அத்) வெறுக்கத்தக்க காரியங்களில், ரபியுல் அவ்வல் மாதத்தில் நபியவர்களின் பிறந்தநாள் விழாவைக் கொண்டாடுவதும் ஒன்றாகும். இந்த கொண்டாட்ட விடயத்தில் மக்கள் பலதரப்பட்டவர்களாக காணப்படுகிறார்கள்;

  • சிலர் இதனை நபியவர்களின் பிறந்தநாள் வரலாற்றை (மவ்லித்) வாசித்தல் அல்லது அது சம்பந்தமான சொற்பொழிவுகளை நிகழ்த்துதல், கவிதைகள் பாடுதல் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெறக்கூடிய வெறும் ஒரு ஒன்றுகூடலாகவே அமைத்துக்கொள்கிறார்கள்.
  • இன்னும் சிலரோ, இதற்காக உணவுகளையும் இனிப்புகளையும் தயாரித்து, வருகை தருபவர்களுக்கு வழங்குகிறார்கள்.
  • இந்த நிகழ்வுகளை சிலர் வீடுகளிலும் இன்னும் சிலர் பள்ளிகளிலும் அரங்கேற்றுகினர்.
  • இன்னும் சிலர் மேற்குறிப்பிட்ட விடயங்களுடன் மாத்திரம் சுருக்கிக்கொள்ளாது, ஆண்-பெண் கலப்பு, ஆடல் பாடல் என ஹராமான மற்றும் வெறுக்கத்தக்க விடயங்களிலும் ஈடுபடுகிறார்கள். அதுமட்டுமல்லாது சில நேரங்களில் அல்லாஹ்வின் தூதரிடம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) உதவி தேடுதல் (இஸ்திகாஸா), அவர்களை அழைத்துப் பிரார்த்தித்தல், எதிரிகளுக்கு எதிராக அவர்களிடம் உதவி வேண்டுதல் போன்ற இணைவைப்பான காரியங்களிலும் ஈடுபடுகின்றனர்.

மீலாதுன் நபி கொண்டாட்டத்தின் வரலாறு

இந்த கொண்டாட்டமானது அதன் அனைத்து வகைகளும், அதன் வடிவங்களோ அதிலே ஈடுபடுபவர்களின் நோக்கங்களோ வேறுபட்டாலும் அனைத்துமே சிறப்பிக்கப்பட்ட மூன்று நூற்றாண்டு-அஸ்ஸல்புஸ்ஸாலிஹீன்- களுக்கு  பிறகு வந்த ஷீயாக்களைச் சார்ந்த ஃபாதிமியர்களால் முஸ்லிம்களின் மார்க்கத்தை மாசுபடுத்துவதற்காக புதிதாக உருவாக்கப்பட்ட மார்க்கத்தில் அனுமதிக்கப்படாத -ஹராமான- விடயங்கள் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. அவர்களுக்குப் பிறகு முதன்முதலில், ஹிஜ்ரி ஆறாம் நூற்றாண்டின் இறுதியில் அல்லது ஏழாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில், இர்பில் நாட்டின் – தற்போதைய ஈராக் நாட்டின் ஒரு குக்கிராமம்- அரசரான  “முளஃப்பர் அபூ ஸயீத் கவ்கபூரி' என்பவரே இதனை அறிமுகப்படுத்தினார். என்று இப்னு கல்லிகான் மற்றும் ஏனைய வரலாற்று ஆசிரியர்களும் குறிப்பிட்டுள்ளனர்.

அபூ ஷாமா அவர்கள் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்: "மவ்ஸிலில்-இர்பிலை அண்டிய ஒரு நகரம்- முதன்முதலில் இதனை நடைமுறைப்படுத்தியவர் புகழ்பெற்ற சான்றோருள் ஒருவரான 'உமர் பின் முஹம்மத் அல்-முல்லா' என்பவராவார். அவரைப் பின்பற்றியே இர்பில் நாட்டின் மன்னரும் ஏனையோரும் இதனைச் செய்யத் தொடங்கினர்."

இமாம் ஹாஃபிழ் இப்னு கஸீர் அவர்கள், தனது 'அல்-பிதாயா வந்-நிஹாயா' (13/137) எனும்  வரலாற்று நூலில், அபூ ஸயீத் கவ்கபூரியின் வாழ்க்கை வரலாற்றைக் குறிப்பிடும் போது பின்வருமாறு குறிப்பிடுகிறார்: "அவர் ரபியுல் அவ்வல் மாதத்தில் மீலாது விழாவை மிக பிரம்மாண்டமாகக் கொண்டாடுவார்.....மேலும் ஸிப்த் இப்னுல் ஜவ்ஸி  கூறியதாக பின்வருமாறு குறிப்பிடுகிறார் "முளஃப்பரின் மீலாது விழா விருந்தில் கலந்துகொண்ட சிலர் பின்வருமாறு விவரித்துள்ளனர்: 'அந்த விருந்தின் போது, ஐயாயிரம் சுடப்பட்ட ஆட்டுத் தலைகளும், பத்தாயிரம் கோழிகளும், ஒரு லட்சம் தயிர்க் கிண்ணங்களும், முப்பது தட்டு இனிப்புகளும் பரிமாறப்பட்டன'... (மேலும் கூறுகிறார்): அவர் ஸூஃபிக் கோட்பாட்டினருக்காக ழுஹர் தொழுகை முதல் ஃபஜ்ர் தொழுகை வரை ஆன்மீக இசை கச்சேரிகளை ஏற்பாடு

செய்வதுடன், தாமும் அவர்களுடன் இணைந்து நடனமாடுபவராகவும் இருந்தார்."

இப்னு கல்லிகான் அவர்கள் தனது ‘வஃபயாதுல் அஃயான்’(3:274) எனும் நூலில் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்: “ஸஃபர் மாதத்தின் முதல் நாள் வந்ததும், அவர்களின் மேடைகளை பலவகையான ஆடம்பரமான, அழகான அலங்காரப் பொருட்களால் அலங்கரிப்பார்கள். அவ்வாறு அலங்கரிக்கப்பட்ட ஒவ்வொரு மேடையிலும் பாடகர்கள் ஒரு குழுவும், நிழல் பாவைக் கூத்துக் கலைஞர்களின் ஒரு குழுவும், இசை மற்றும் விநோதக் கலைஞர்களின் ஒரு குழுவும் அமர்த்தப்பட்டனர். இவ்வாறு அனைத்து மேடைகளிலும் அவற்றின் ஒவ்வொரு அடுக்குகளிலும் ஒரு குழுவை முறைப்படி ஏற்பாடு செய்திருந்தனர்.”

இந்த கொண்டாட்ட காலங்களில் மக்கள் தமது வாழ்வாதாரத்தை விட்டுவிட்டு அங்கு அமைக்கப்பட்டிருக்கும் அலங்கார மேடைகளில் அரங்கேறும் இசைக் குழுவினர், கூத்துக் கலைஞர்களின் கலை நிகழ்ச்சிகள் மற்றும் வேடிக்கை விளையாட்டுகளைப் பொழுதுபோக்கிற்காகப் பார்த்துக் கொண்டிருப்பதைத் தவிற வேறு வேலையே இருக்காது. (மேலும் அவர் கூறுகிறார்): "விழா தொடங்க இரண்டு நாட்களுக்கு முன்னதாகவே, எண்ணிலடங்காத அளவு ஏராளமான ஒட்டகங்கள், மாடுகள் மற்றும் ஆடுகளை அவர் வெளியில் கொண்டு வருவார். பின்னர், தன்னிடம் உள்ள அனைத்து வகையான மேளதாளக்கருவிகள் மற்றும் கேளிக்கைக் கருவிகள் முழங்க, ஆடல் பாடல்களுடன் ஒரு பெரிய ஊர்வலமாக மைதானத்திற்கு அழைத்து வருவார்..."

(மேலும் கூறுகிறார்): "விழா அன்று இரவு வந்ததும், கோட்டையில் மஃக்ரிப் தொழுகையை முடித்துவிட்டு, அவர் ஆன்மீக இசை நிகழ்ச்சிகளை நடத்துவார்."

"இதுதான் இந்த மீலாது விழா கொண்டாட்டங்கள் தோற்றம் பெற்று நடைமுறைக்கு வந்ததன் ஆரம்பப் பின்னணியாகும். இஸ்லாமிய மார்க்கத்தின் ஆரம்பக் காலங்களுக்குப் பிறகு, மிகத் தாமதமாகவே இது தோற்றுவிக்கப்பட்டது. மேலும், அல்லாஹ் எந்தவொரு சான்றையும் இறக்காத இந்த மார்க்கப் புதுமையின் (பித்அத்) பின்னால், வீண் கேளிக்கைகளும், ஆடம்பரங்களும், மனிதர்களின் பொருளாதார மற்றும் நேர விரயங்களுமே கலந்திருந்தன."

இவ்வாறான கட்டங்களில் ஒரு உண்மையான முஸ்லிம் செய்ய வேண்டியதெல்லாம் நபியவர்களின் வழிகாட்டல்களை உயிர்ப்பித்து, மார்க்கத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட நூதனமான விடயங்களை  தகர்த்தெறிவது தான். அதேநேரம் எந்த ஒரு அமலாயினும் அதிலே அல்லாஹுதஆலாவின் தீர்ப்பை அறியாது அதனை செய்யக்கூடாது.

மீலாதுன் நபி கொண்டாட்டத்திற்கான மார்க்கத் தீர்ப்பு

மீலாது விழா கொண்டாடுவது மார்க்கத்தில் தடுக்கப்பட்டதும், நிராகரிக்கப்பட வேண்டியதுமாகும். இதற்குப் பல காரணங்கள் உள்ளன:

முதலாவது: இது நபியவர்களின் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) வழிமுறையிலோ (சுன்னத்) அல்லது அவர்களுக்குப் பின்வந்த நேர்வழி பெற்ற இஸ்லாமிய ஆட்சியாளர்(கலீஃபாக்)களின் வழிமுறையிலோ இருந்ததில்லை. அவ்வாறான அனைத்தும் மார்க்கத்தில் தடுக்கப்பட்ட புதுமை (பித்அத்) களாகும். ஏனெனில் நபியவர்கள் கூறினார்கள் “என்னுடைய மற்றும் நேர்வழி பெற்ற குலபாஉர்ராஷிதீன்களின் வழிமுறையை பற்றிப்பிடித்துக்கொள்ளுங்கள், அதனை உங்களுடைய கடைவாய் பற்களால் கவ்விப் பிடித்துக் கொள்ளுங்கள், மார்க்கத்தில் புதிதாக உருவாக்கப்படும் காரியங்களை விட்டும் நீங்கள் எச்சரிக்கையாக இருங்கள். ஏனெனில், புதிதாக உருவாக்கப்படும் ஒவ்வொரு காரியமும் பித்அத் ஆகும், ஒவ்வொரு பித்அத்தும் வழிகேடாகும்" (நூட்கள்: அஹ்மத் 4/126, திர்மிதி: 2676)

இந்த மீலாதுவிழா கொண்டாட்டமானது சிறப்பிக்கப்பட்ட மூன்று நூற்றாண்டு-அஸ்ஸல்புஸ்ஸாலிஹீன்- களுக்கு  பிறகு வந்த ஷீயாக்களைச் சார்ந்த ஃபாதிமியர்களால் முஸ்லிம்களின் மார்க்கத்தை மாசுபடுத்துவதற்காக புதிதாக உருவாக்கப்பட்ட ஒரு பித்அத்தாகும்.

எனவே, எவரொருவர் அல்லாஹ்வின் நெருக்கத்தைப் பெறும் நோக்கில், நபியவர்கள் சொல்லாத அல்லது நபியவர்களோ அவர்களுக்குப் பின்வந்த நேர்வழிபெற்ற கலீஃபாக்களோ செய்யாத ஒரு காரியத்தைச் செய்வதானது, நபியவர்கள் மார்க்கத்தை மக்களுக்கு முழுமையாக எத்திவைக்கவில்லை என நபியவர்களை குற்றம் சுமத்துவதாகவும்,“இன்று நாம் உங்களுக்கு உமது மார்க்கத்தை பூரணப்படுத்தி விட்டோம்” (அல்மாஇதா:3) என்ற அல்லாஹுதஆலாவின் கூற்றை பொய்ப்பிப்பதாகவும் அமைந்துவிடும். ஏனெனில் அவர் நபியவர்கள் காட்டித்தராத மேலதிகமான ஒரு விடயத்தை கொண்டுவந்து அதனை மார்க்கம் என நம்புகிறார்.

இரண்டாவது;  இந்த மீலாதுவிழா கொண்டாடுவதானது ஈஸா நபியின் பிறந்த நாளை கொண்டாடும் கிறிஸ்துவர்களுக்கு ஒப்பாவதாக அமைந்துவிடும். அவர்களுக்கு ஒப்பாவதாக மார்க்கத்தில் மிக்கடுமையாக தடைசெய்யப்பட்ட ஒரு விடயமாகும். இறைமறுப்பாளர்களுக்கு ஒப்பாவதை தடைசெய்தும், அவர்களுக்கு மாறுசெய்யுமாறு ஏவியும் பல நபிமொழிகள் வந்துள்ளன. நபியவர்கள் சொன்னார்கள்  “ஒருவர் எந்த கூட்டத்துக்கு ஒப்பாக நடக்கிறாரோ அவர் அந்த கூட்டத்தில் ஒருவராகவே கருதப்படுவார்” (நூட்கள்: முஸ்னத் அஹ்மத்- 2/50, ஸுனனு அபீதாவூத் – 4/314), “ இணைவைப்பாளர்களுக்கு மாற்றம் செய்யுங்கள்” (நூல்:ஸஹீஹ் முஸ்லிம்: 1/222-ஹதீஸ் 259) குறிப்பாக இந்த விடயம்(ஒப்பாகுதல்) மார்க்கம் சம்பந்தப்பட்டதாக இருந்தால் அதிகம் கவனம் செலுத்தப்பட வேண்டும்.

மூன்றாவது: மீலாது விழா கொண்டாடுவதானது ஒரு மார்க்கப் புதுமையாகவும் (பித்அத்), கிறிஸ்தவர்களுக்கு ஒப்பாக நடக்கும் செயலாகவும் இருப்பதோடு மாத்திரமல்லாது —இவை இரண்டுமே மார்க்கத்தில் விலக்கப்பட்டவை — நபியவர்களைப் புகழ்வதிலும் , கண்ணியப்படுத்துவதிலும் எல்லைமீறிச் செல்வதற்கு காரணமாக அமைந்துவிடுகிறது. அது கடைசியில், அல்லாஹ்வையன்றி நபியவர்களையே பிரார்த்தித்து அவர்களிடமே உதவி தேடும் நிலைக்கு இட்டுச் சென்றுவிடுகிறது. இன்று இதுதான் இந்த பித்அத்தான கொண்டாட்டத்தில் ஈடுபடுபவர்களில் அதிகமானவர்களின் நிலைமையாக இருக்கிறது. அல்லாஹ்வையன்றி நபியவர்களையே பிரார்த்தித்தல், அவரிடம் உதவி தேடுதல் மற்றும் “புர்தா” போன்ற இன்னோரன்ன இணைவைப்பான பாடல்களை பாடுதல் போன்ற பல விடயங்கள் இன்று நடைபெறுகின்றன. நபியவரகள் அவர்களை அளவுகடந்து புகழ்வதை தடுத்துள்ளார்கள்; “கிறிஸ்துவர்கள் மர்யமின் மகனை(ஈஸா நபி) எல்லை கடந்து புகழ்ந்ததை போன்று என்னை அளவு கடந்து புகழ வேண்டாம், நான் அல்லாஹ்வின் ஒரு அடிமை மாத்திரமே, எனவே அல்லாஹ்வின்  அடிமை மற்றும் தூதர் என்று மாத்திரமே சொல்லுங்கள்”  என கூறியிருக்கிறார்கள். (ஸஹீஹுல் புகாரி: 4:142- ஹதீஸ் எண்”3445, ஃபத்ஹுல் பாரி: 6/551) அதாவது, கிறிஸ்தவர்கள் ஈஸா (அலைஹிஸ்ஸலாம்) அவர்களை எல்லை மீறிப் புகழ்ந்து, அளவுக்கு அதிகமாகக் கண்ணியப்படுத்தி, இறுதியில் அல்லாஹ்வையன்றி அவரை வழிபடத் தொடங்கியதைப் போல, என்னை புகழ்வதிலும் கண்ணியப்படுத்துவதிலும் நீங்கள் எல்லை மீறிவிடாதீர்கள். அல்லாஹ் அவர்களை நோக்கிப் பின்வருமாறு கூறி இதனைத் தடுத்திருந்தான்: {வேதத்தையுடையவர்களே! உங்கள் மார்க்கத்தில், நீங்கள் அளவு கடந்து செல்லாதீர்கள், இன்னும், அல்லாஹ்வின் மீது உண்மையைத் தவிர (வேறெதையும்) கூறாதீர்கள், நிச்சயமாக அல்மஸீஹ் என்ற மர்யமுடைய மகன் ஈஸா, அல்லாஹ்வுடைய ஒரு தூதரும், அவன்  மர்யம் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு அறித்த வாக்கும் ஆவார், மேலும் (மற்ற ஆன்மாக்களைப் போன்று அவரும்,) அவனிடமிருந்து (படைக்கப்பட்ட) ஓர் ஆன்மாவே) அந்நிஸா:171}

கிறிஸ்தவர்களுக்கு ஏற்பட்ட அதே (வழிகேடான) நிலை நமக்கும் ஏற்பட்டுவிடக் கூடாது என்ற அச்சத்தினால், நமது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் எல்லை மீறுவதை விட்டும் நம்மை பின்வருமாறு தடுத்துள்ளார்கள்: [மார்க்கத்தில் எல்லை மீறுவதை விட்டும் உங்களை எச்சரிக்கிறேன். ஏனெனில், உங்களுக்கு முன் வாழ்ந்தவர்களை அழித்ததே மார்க்கத்தில் அவர்களின் எல்லை மீறலே] (நூல்: நஸாயீ 5/268, இமாம் அல்பானி அவர்களால் ஸஹீஹ் ஸுனன் அன்-நஸாயீல் ஸஹீஹ் என கூறப்பட்டுள்ளது, ஹதீஸ் எண்-2863).

நான்காவதாக: மீலாது விழா எனும் பித்அத்தை உயிர்ப்பிப்பது, ஏனைய பித்அத்கள் தோன்றுவதற்கும் . மக்களை நபிவழிகளில் (சுன்னத்துகளில்) ஈடுபட விடாமல் திசை திருப்பவும் வழிவகுக்கிறது. இதனால்தான், பித்அத்வாதிகள் அவற்றை உயிர்ப்பிப்பதில் முனைப்உடன் ஈடுபடக்கூடியவர்களாகவும் நபிவழிகளை (சுன்னத்துகள்) வெறுக்கக்கூடியவர்ளாகவும் அவற்றை செய்வதில் சோம்பேறித்தனமாகவும் இருக்கிறார்கள். அதுமட்டுமின்றி அவற்றை(நபிவழிகள்) பின்பற்றுபவர்களைப் பகைக்கவும் செய்கிறார்கள். இறுதியில் பிறந்தநாள் கொண்டாட்டங்களும் , நினைவஞ்சலிகளுமே அவர்களின் மார்க்கமாக ஆகி விடுகிறது. பிறகு அவர்களே பல பிரிவினர்களாக பிரிந்து ஒவ்வொருவரும் தத்தமது தலைவர்களின் பிறந்த நாட்களை கொண்டாடுவர். உதாரணமாக பதவி, இப்னு அரபி, துஸூகி மற்றும் ஷாதிலி ஆகியோரின் பிறந்த நாள் கொண்டாட்டங்கள். இவ்வாறை ஒன்று முடிந்து இன்னொன்று என கொண்டாடிக்கொண்டே இருப்பார்கள்.

இதன் விளைவாக, மரணித்த இந்த நபர்கள் மீதும் மற்றவர்கள் மீதும் எல்லை மீறிய பக்தி பிறந்து, அல்லாஹ்வையன்றி அவர்களிடமே பிரார்த்திக்கத் தொடங்குகிறார்கள். அவர்கள் நன்மையோ தீமையோ செய்யக்கூடிய ஆற்றல் படைத்தவர்கள் என்றும் நம்புகிறார்கள். இதனால், அவர்கள் அல்லாஹ்வின் தூய மார்க்கத்தை விட்டே வெளியேறி, அறியாமைக் கால (ஜாஹிலிய்யா) மக்களின் மார்க்கத்திற்கே மீண்டும் சென்றுவிடுகிறார்கள்; அவர்களைப் பற்றி அல்லாஹ் பின்வருமாறு கூறுகிறான்: {தங்களுக்கு (யாதொரு) நன்மையோ தீமையோ செய்ய இயலாத அல்லாஹ் அல்லாதவற்றை (முஷ்ரிக்குகள்) வணங்குகிறார்கள்; இன்னும் அவர்கள் ‘‘இவை அல்லாஹ்விடத்தில் எங்களுக்கு சிபாரிசு செய்பவை'' என்றும் கூறுகின்றனர்} (யூனுஸ்:18), {எவர்கள் அல்லாஹ் அல்லாதவற்றை, தங்களுக்குப் பாதுகாவலர்களாக எடுத்துக் கொண்டிருக்கிறார்களோ அவர்கள் ‘‘அத்தெய்வங்கள் எங்களை அல்லாஹ்வுடன் நெருக்கமாக்கி வைக்கும் என்பதற்காகவேயன்றி நாம் அவற்றை வணங்கவில்லை'' (என்று கூறுகின்றனர்)} (அஸ்ஸுமர்:03).

மீலாது விழா கொண்டாடுவோரின் வாதங்கள் குறித்த கலந்துரையாடல்.

இந்த பித்அத்தை உயிர்ப்பிப்பவர்கள் சிலந்தி வலையை விடவும் மிகவும் பலவீனமான வாதங்களை முன்வைக்கிறார்கள்; அந்த வாதங்களை பின்வருமாறு சுருக்கமாகக் குறிப்பிடலாம்:

அவர்களது வாதம்: இவ்வாறு செய்வது நபியவர்களை (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) கண்ணியப்படுத்துவதாக அமையும்.

பதில்: நபியவர்களின் ஏவல்களை எடுத்து நடந்தும், விலக்கல்களை தவிர்த்து நடந்தும் அவர்களுக்கு கீழ்ப்படிந்து நடப்பது தான் நபியவர்களை கண்ணியப்படுத்துவதாக அமையுமேயன்றி, மாரக்கத்தில் புதிதாக உருவாக்கப்பட்டவை(பித்அத்)கள் மற்றும் மூடநம்பிக்கைகள் போன்ற பாவகாரியங்களின் மூலமல்ல. மீலாதுந்நபி கொண்டாட்டமும் இந்த வகையை சார்ந்ததுதான் ஏனெனில் அது ஒரு பாவகாரியமாகும். மனிதர்களிலேயே நபியவர்களை அதிகம் நேசித்தவர்கள் நபித்தோழர்கள் தான். உர்வா இப்னு மஸ்ஊத் என்பவர் குரைஷிகளை நோக்கி கூறினார்: "என் சமூகத்தாரே! அல்லாஹ்வின் மீது ஆணையாக, கைஸர் (ரோம அரசர்), கிஸ்ரா (பாரசீக அரசர்), நஜாஷி (அபிசீனிய அரசர்) ஆகியோரிடமும் இன்னும் பல மன்னர்களிடமும்  தூதுவராகச் சென்றுள்ளேன். ஆனால், முஹம்மதின் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்)  தோழர்கள் அவரை கண்ணியப்படுத்துவதைப் போல, எந்தவொரு மன்னரையும் அவரது ஆட்கள் கண்ணியப்படுத்துவதை நான் கண்டதே இல்லை. அல்லாஹ்வின் மீது ஆணையாக, அவர் உமிழ்நீரை உமிழ்ந்தால் கூட, அது அவர்களின் ஒருவரது கையிலேயே விழுகிறது; உடனே அவர் அதைத் தனது முகத்திலும் உடலிலும் தேய்த்துக் கொள்கிறார். அவர் அவர்களுக்கு ஒரு கட்டளையிட்டால், அதை நிறைவேற்ற அவர்கள் முந்தியடிக்கிறார்கள். அவர் உளூச் செய்தால், அவரது உளூவின் தண்ணீரைப் பெறுவதற்காக அவர்கள் ஒருவரோடு ஒருவர் சண்டையிடும் நிலைக்குச் சென்றுவிடுகிறார்கள். அவர் பேசினால், தங்களின் சத்தங்களை அவருக்கு முன்னால் தாழ்த்திக் கொள்கிறார்கள். மேலும், அவர் மீதுள்ள அதீத கண்ணியத்தின் காரணமாக, அவரை நேருக்கு நேர் உற்றுப் பார்ப்பது கூட இல்லை" (நூல்: புகாரி 3/178, எண்: 2731, 2732, ஃபத்ஹுல் பாரி: 5/388).

நபியவர்களை இந்தளவு கண்ணியப்படுத்திய ஸஹாபாக்களே அவர்களது பிறந்தநாளை ஒரு பெருநாளாகவோ அல்லது விழாவாகவோ கொண்டாடவில்லை. இது மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்ட ஒரு காரியமாக இருந்திருந்தால், அவர்கள் கண்டிப்பாக இதனை விட்டிருக்க மாட்டார்கள்.

 அவர்களது வாதம்: இது பல நாடுகளைச் சேர்ந்த ஏராளமான மக்களின் நடைமுறையாக (வழக்கமாக) இருக்கிறது என்பதாகும்.

பதில்: அல்லாஹ்வின் தூதரிடமிருந்து (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டவை மட்டுமே மார்க்கத்தில் ஆதாரமாக கருதப்படும். நபியவர்களிடமிருந்து ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டது என்னவென்றால், அனைத்து மார்க்கப் புதுமைகளும் (பித்அத்களும்) தடுக்கப்பட்டவை என்பதாகும்; இந்த மீலாது விழாவும் அந்தப் புதுமைகளில் ஒன்றாகும். மக்களின் செயல்முறை மார்க்க ஆதாரத்திற்கு முரணாக அமையும் போது, அதைச் செய்பவர்களின் எண்ணிக்கை எவ்வளவு அதிகமாக இருந்தாலும் சரி, அது ஒருபோதும் மார்க்கத்தில் ஆதாரமாக கொள்ளப்படாது. அல்லாஹ் கூறுகிறான்: {பூமியில் உள்ளவர்களில் பெரும்பாலானோருக்கு நீர் கீழ்ப்படிந்தால், அவர்கள் உம்மை அல்லாஹ்வின் வழியை விட்டும் வழிகெடுத்துவிடுவார்கள்} (அல்-அன்ஆம்: 116).

இவ்வாறான கொண்டாட்டங்களை பல அறிஞர்கள் தங்களது நூல்களில் மறுத்துள்ளார்கள்: அவர்களில் சிலர்: ஷேஃ ஷேஃகுல் இஸ்லாம் தனது ‘இக்திழாஉஸ்ஸிராதில் முஸ்தகீம் எனும் நூலிலும், இமாம் ஷாதிபீ தனது ‘அல்இஃதிஸாம்’ எனும் நூலிலும், இப்னுல் ஹாஜ் தனது ‘அல்மத்ஃகல்’ எனும் நூலிலும், தாஜுத்தீன் அலி இப்னு உமர் அல்லஃகமி என்பவர் இதனை கண்டித்து அதற்காக ஒரு தனி நூலே எழுதியுள்ளார்கள். மேலும் இந்தியாவைச் சேர்ந்த முகம்மது பஷீர் அஸ்ஸஹ்ஸவானி தனது 'ஸியானத்துல் இன்ஸான்' எனும் நூலிலும் இதனை எச்சரித்து எழுதியுள்ளார்கள்.

ஸையித் முஹம்மத் ரஷீத் ரிளா மற்றும் ஷைக் முஹம்மத் பின் இப்ராஹீம் ஆலுஷ்-ஷைக்  போன்றோர் இதற்கென தனியான ஆய்வுக் கையேடுகளையும் தொகுத்துள்ளனர். மட்டுமல்லாது கண்ணியத்துக்குரிய ஷேஃக் அப்துல் அஸீஸ் பின் பாஸ் இன்னும்பலர் ஒவ்வொரு வருடமும் இந்த மீலாது கொண்டாட்ட பித்அத் நடக்கும் பொழுது அதற்கெதிராக நாளிதழ்களிலும் மாத சஞ்சிகைகளிலும் எழுதிக் கொண்டேதான் இருக்கிறார்கள்.

வாதம்:இவ்வாறு நபியவர்களின் பிறந்த தினத்தைக் கொண்டாடுவதன் மூலம் அவர்களைப் பற்றிய ஞாபகமூட்டல் உயிர்ப்பிக்கப்படும் என்று அவர்கள் வாதிடலாம்.

பதில்: நிச்சயமாக ஒரு முஸ்லிமின் வாழ்வில் நபியவர்களின் நினைவு என்பது தினசரி புதுப்பிக்கப்பட்டுக் கொண்டே இருக்கிறது. அதான், இகாமத் மற்றும் ஜுமுஆ பிரசங்கங்கள் போன்ற பல சந்தர்ப்பங்களில் நபியவர்களின் பெயர் கூறப்படும் பொழுதெல்லாம் ஒரு முஸ்லிம் அவர்களின் நினைவோடு பிணைக்கப்படுகிறான். அதேபோன்று, ஒவ்வொரு முறை உளூச் செய்த பிறகும், தொழுகைகளிலும் முஸ்லிம்கள் ஷஹாதத் கலிமாவை மொழியும் போதும், தொழுகையிலோ அல்லது அவர்கள் பெயர் கூறப்படும் போதோ அவர்கள் மீது ஸலவாத்துச் சொல்லும் போதும் நபியவர்களின் நினைவு தொடர்ந்து புதுப்பிக்கப்படுகிறது.

அதுமட்டுமின்றி, ஒரு முஸ்லிம் நபியவர்கள் நமக்குக் காட்டித் தந்த கடமையான அல்லது சுன்னத்தான ஒவ்வொரு நற்செயலை செய்யும் பொழுதும், அதன் மூலம் அவர் நபியவர்களை நினைவுகூறுகிறார். மேலும், அந்த நற்செயலைச் செய்பவருக்குக் கிடைக்கும் அதே அளவு நன்மை நபியவர்களுக்கும் போய்ச்சேருகிறது. இவ்வாறுதான், ஒவ்வொரு முஸ்லிமும் தனது வாழ்நாள் முழுவதும், இரவிலும் பகலிலும் அல்லாஹ் காட்டித் தந்த மார்க்க நெறிமுறைகளை நடைமுறைப்படுத்துவதன் மூலமாக நபியவர்களின் நினைவை எப்போதும் உயிர்ப்போடு வைத்திருப்பதுடன், அவர்களுடனான தனது தொடர்பையும் பேணி வருகிறான். மாறாக, நபியவர்கள் பிறந்தநாள் என கூறப்படும் குறித்த தினத்தில் மாத்திரமல்ல.

இந்த மீலாது கொண்டாட்டமானது மார்க்கத்தில் புதிதாக உண்டாக்கப்பட்ட, நபியவர்களது வழிமுறைக்கு முரணானதாக இருப்பதுடன்,  இத்தகைய புதுமைகள் (பித்அத்கள்) ஒருவரை நபியவர்களை விட்டும் தூரமாக்குவதுடன், அவர்கள் அந்தச் செயலை விட்டும் விலகிக் கொள்ளவும் காரணமாகிவிடுகிறது.

நபியவர்களை கண்ணியப்படுத்துவதற்கும் சங்கைப்படுத்துவதற்கும் அல்லாஹுதஆலா பல உன்னத வழிகளை காட்டித் தந்துள்ளதால், இவ்வாறான மார்க்கத்தில் புதிதாக உண்டாக்கப்பட்ட கொண்டாட்டங்களை விட்டும் நபியவர்கள் தேவையற்றவர்களாக இருக்கிறார்கள். இதனைத்தான் அல்லாஹுதஆலா தனது திருமறையில் பின்வருமாறு குறிப்பிடுகிறான்: {மேலும் நமக்காக நாமே உமது புகழை மேலோங்கச் செய்தோம்}(அஷ்ஷரஹ்:04). அதான்(பாங்கு), இகாமத் மற்றும் இஸ்லாமிய பிரச்சாரங்கள் என எங்கெல்லாம் அல்லாஹுதாலா நினைவு கூறப்படுகிறானோ அங்கெல்லாம் அவனுக்கு அடுத்ததாக நபியவர்களும் நினைவு கூறப்படுகிறார்கள். இதுவே நபியவர்களின் கண்ணியத்திற்கும், அவர்களை நினைவை புதுப்பிப்பதற்கும் மற்றும் அவர்களை பின்துயர ஆர்வமூட்டுவதற்கும் போதுமானதாகும்.

"மேலும், அல்லாஹுதஆலா தனது திருமறையில் எங்குமே நபியவர்களின் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) பிறப்பை ஒரு சிறப்பம்சமாக எடுத்துக் கூறவில்லை; மாறாக, அவர்கள் இறைத்தூதராக அனுப்பப்பட்டதையே சிறப்பித்துக் கூறியுள்ளான்." அல்லாஹு தஆலா கூறுகிறான் {நிச்சயமாக அல்லாஹுதஆலா இறை விசுவாசிகளுக்கு அவர்களிலிருந்தே அவர்களுக்கான ஒரு தூதரை அனுப்பி வைத்து பேரருள் புரிந்திருக்கிறான்}(ஆலஇம்ரான்:164), {அவனே எழுத படிக்கத் தெரியாத அந்த மக்களிடத்தில் அவர்களிலிருந்தே ஒருவரை தூதராக அனுப்பி வைத்தான்} (அல்ஜுமுஆ:02)

அவர்களின் வாதம்:நபியவர்களது பிறந்தநாள் கொண்டாட்டமானது அல்லாஹ்வின் நெருக்கத்தை நாடி ஒரு அறிஞரான நீதியான அரசனினால் உருவாக்கப்பட்டது.

பதில்: மார்க்கத்தில் புதிதாக உருவாக்கப்படும் எந்தோர் விடயமும் ஏற்றுக்கொள் போடமாட்டாது அதை உருவாக்கியவர் யாராக இருந்தாலும் சரி, அதே போன்றுதான் எண்ணம் அல்லது நோக்கம் நல்லது என்பதற்காக பிழையான ஒரு விடயம் சரியாகிவிடமாட்டாது. அவர்கள் சொன்ன அந்த அரசன் ஒரு அறிஞர் மற்றும் நீதியானவர் என்பதற்காக அவர் பிழை செய் செய்வதிலிருந்து பாதுகாக்கப்பட்டவராக கருதப்படமாட்டார்.

அவர்களின் வாதம்: இந்த மீலாது விழா கொண்டாட்டமானது மார்க்கத்தில் புதிதாக உண்டாக்கப்பட்ட ஒரு நல்ல விடயமாகும்(அல்பித்ஆ அல்ஹஸனா), ஏனெனில் அல்லாஹு தஆலா எங்களுக்கு நபியவர்களை அருளியதற்காக நன்றி செலுத்துவதை குறிக்கிறது.

பதில்: மார்க்கத்தில் புதிதாக உருவாக்கப்பட்டவைகளில் எந்த ஒன்றுமே நன்மை பயக்கக்கூடியதல்ல, அதனால் தான் நபி அவர்கள் [யார் தங்களுடைய விடயத்திலே (மார்க்கத்திலே) அதில் இல்லாத புதிதான ஒரு விடயத்தை உருவாக்குகிறாரோ அந்த விடயம் நிராகரிக்கப்படட்டதாகும்](நூல்: ஸஹீஹுல் புகாரி:3/167 ஹ/எண்:2697, அல்பத்ஹுல்பாரீ:5/355) இன்னொரு ஹதீஸில் [புதிதாக வார்க்கத்தில் உருவாக்கப்படும் ஒவ்வொன்றும் வழிகேடுதான்](நூல்:முஸ்னத் அஹ்மத் 4:126, அத்திர்மிதீ: 2676) என்று கூறியிருக்கிறார்கள். எனவே, நபியவர்கள் அனைத்து பித்அத்களும் வழிகேடு என தீர்ப்பளித்துவிட்டார்கள், ஆனால் இவர்களோ, அவ்வாறல்ல அனைத்து பித்அத்களும் வழிகேடல்ல மாறாக அவைகளில் நன்மை தரக்கூடியவைகளும் இருக்கின்றன என்கின்றனர்.

இமாம் அல்ஹாஃபிழ் இப்னு ரஜப் அவர்கள், தனது நாற்பது ஹதீஸ்களின் விளக்கவுரை ('ஷரஹ் அல்-அர்பயீன்’) எனும் நூலில் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்: “நபியவர்களின் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) [ஒவ்வொரு மார்க்கப் புதுமையும் (பித்அத்) வழிகேடாகும] என்ற இந்த வாசகம், நபியவர்களின் வார்த்தைகளுக்கே குறிப்பான சிறப்பம்சமான 'ஜவாமிஉல் கலிம்' (சுருக்கமான சொற்களில் ஆழமான பல கருத்துக்களை உள்ளடக்கியவை)  என்ற தனிச்சிறப்பைச் சார்ந்ததாகும். மார்க்கத்தில் புதிதாக உருவாக்கப்படும் எந்தவொரு காரியமும் இந்த விதியை விட்டு வெளியேற முடியாது. மேலும், இது இஸ்லாமிய மார்க்கத்தின் மிக முக்கியமான அடிப்படைக் கொள்கைகளில் ஒன்றாகும். இந்த வாசகம் நபியவர்களின் மற்றொரு பொன்மொழியான அவர்கள் [யார் தங்களுடைய விடயத்திலே (மார்க்கத்திலே) அதில் இல்லாத புதிதான ஒரு விடயத்தை உருவாக்குகிறாரோ அந்த விடயம் நிராகரிக்கப்படட்டதாகும்](நூல்: ஸஹீஹுல் புகாரி:3/167 ஹ/எண்:2697, அல்பத்ஹுல்பாரீ:5/355)  முற்றிலும் ஒத்ததாக அமைந்துள்ளது. யாரொருவர் மார்க்க ரீதியான எந்த அடிப்படை ஆதாரமுமற்ற ஒரு விடயத்தை புதிதாக உருவாக்கி அதனை மார்க்கமாக ஆக்க முனைகிறாரோ அது தெளிவான வழிகேடாகும்; தூய இஸ்லாமிய மார்க்கம் அத்தகைய காரியத்தை விட்டும் முற்றிலும் நீங்கியதாகும். இவ்விடயத்தில் நம்பிக்கைக் கோட்பாடு சம்பந்தமான விவகாரங்கள் மற்றும் மனிதனின் உள்ரங்கமான வெளிரங்கமான சொல் செயல் சம்பந்தப்பட்ட அனைத்து விவகாரங்களும் சமமே.(நூல்:ஜாமிஉல் உலூம் வல்ஹிகம்:233).

மார்க்கத்தில் 'அழகிய புதுமை' (பித்அத் ஹஸனா) என்று ஒன்று இருக்கிறது என்று வாதிடுபவர்களிடம், தராவீஹ் தொழுகை குறித்து உமர் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் கூறிய, “இந்த புதுமை எவ்வளவு அழகியது” (நூல்: ஸஹீஹ் அல்-புகாரி 2/252, எண்: 2010(முஅல்லக் ஆக), ஃபத்ஹுல் பாரி 4/294) என்ற கூற்றைத் தவிர வேறெந்த ஆதாரமும் இல்லை.

வாதம்: இன்னும் பல விடயங்கள் புதிதாக உருவாக்கப்பட்டன ஆனால் அதனை முழுசன்று அறிஞர்களான சலப்புகள் வெறுக்கவில்லை உதாரணமாக: அல்குர்ஆனை ஒன்று திரட்டியமை, நபியவர்களின் பொன்மொழிகளை எழுதியதும் அதனைத் தொகுத்ததும்.

பதில்: இந்தக் காரியங்களுக்கு (குர்ஆனைத் தொகுப்பது, ஹதீஸ்களைப் பதிவு செய்வது போன்றவற்றுக்கு) மார்க்கத்தில் ஒரு அடிப்படை உள்ளது; எனவே, இவை மார்க்கத்தில் புதிதாக உண்டாக்கப்பட்டவை அல்ல.

மேலும், உமர் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் 'இந்த புதுமை எவ்வளவு அழகியது!' என்று கூறியதன் மூலம், அவர்கள் 'மொழிநடை சார்ந்த புதுமை'யையே நாடினார்களேயன்றி, 'மார்க்க நெறி சார்ந்த புதுமை'யை அல்ல. இஸ்லாமிய மார்க்கத்தில் ஏற்கனவே ஒரு தெளிவான அடிப்படையைக் கொண்டுள்ள ஒரு காரியத்தைப் பார்த்து 'புதுமை' (பித்அத்) என்று கூறப்பட்டால், அது அரபு மொழி வழக்கின் அடிப்படையிலான புதுமையே தவிர, மார்க்கச் சட்டத்தின் அடிப்படையிலான புதுமை அல்ல. ஏனெனில், இஸ்லாமிய மார்க்கச் சட்டத்தின்படி 'பித்அத்' என்பது, மார்க்கத்தில் எவ்வித அடிப்படை ஆதாரமும் இல்லாத ஒரு காரியத்தைப் புதிதாக உருவாக்குவதையே குறிக்கும்.

"அதேபோன்றுதான், திருக்குர்ஆனை ஒரு நூலில் ஒன்று திரட்டியதற்கும் மார்க்க அடிப்படையில் ஆதாரம் உள்ளது. ஏனெனில், நபியவர்கள் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) திருக்குர்ஆனை எழுதி வைக்குமாறு ஏற்கனவே கட்டளையிட்டிருந்தார்கள்; ஆனால், அது வெவ்வேறு இடங்களில் தனித்தனியாக எழுதப்பட்டிருந்தது. அதனை தான் ஸஹாபாக்கள் திருக்குர்ஆனைப் பாதுகாக்கும் நோக்கில்  ஒரே புத்தகமாகத் தொகுத்தார்கள்.

 தராவீஹ் தொழுகையை பொருத்தமட்டில் நபியவர்கள் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) ஸஹாபாக்களோடு இணைந்து சில இரவுகள் தொழுவித்தார்கள். பின்னர், அது அவர்கள் மீது கடமையாக்கப்பட்டுவிடுமோ என்ற அச்சத்தினால் அதனைத்  தவிர்த்தார்கள். நபியவர்களின் வாழ்நாளிலும், அவர்களுக்குப் பின்னரும் ஸஹாபாக்கள் (ரலியல்லாஹு அன்ஹும்) தனித்தனி குழுக்களாகப் பிரிந்தே இத்தொழுகையைத் தொடர்ந்து தொழுது வந்தனர். பின்னர், உமர் பின் அல்-கத்தாப் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் தான், முன்பு நபியவர்களுக்குப் பின்னால் ஸஹாபாக்கள் அணிவகுத்து நின்றதைப் போலவே, அனைவரையும் ஒரே இமாமிற்குப் பின்னால் ஒன்றுதிரட்டினார்கள். எனவே, இது மார்க்கத்தில் புதிதாக உண்டாக்கப்பட்ட காரியம் (பித்அத்) அல்ல.

 "அதேபோன்று, நபியவர்களின் பொன்மொழிகளை (ஹதீஸ்களை) எழுதிப் பதிவு செய்யும் காரியத்திற்கும் இஸ்லாமிய மார்க்கத்தில் தெளிவான அடிப்படை ஆதாரம் உள்ளது. ஏனெனில், தன்னிடம் சில தோழர்கள் கேட்டுக்கொண்ட போது, அவர்களுக்குச் சில ஹதீஸ்களை எழுதி வழங்குமாறு நபியவர்கள் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) சிலருக்கு கட்டளையிட்டுள்ளார்கள். நபியவர்களின் காலத்தில் ஹதீஸ்களைப் பொதுவாக எழுதுவதற்குத் தடை விதிக்கப்பட்டிருந்ததற்குக் காரணம், திருக்குர்ஆனுடன் அதில் இல்லாத பிற விடயங்கள் கலந்துவிடுமோ என்ற அச்சத்தினால் மட்டுமே ஆகும். ஆனால் நபியவர்கள் மரணித்த பிறகு அந்தப் பிரச்சினை நீங்கிவிட்டது. ஏனெனில், நபியவர்களின் மரணத்திற்கு முன்னரே திருக்குர்ஆன் முழுமையடைந்து, முற்றிலும் பாதுகாக்கப்பட்டிருந்தது. எனவே அதன் பின்னர் முஸ்லிம்கள் நபியவர்களின் வழிமுறையான சுன்னாவைப் பாதுகாத்து, அது அழிந்துவிடாமல் தடுக்கும் நோக்கிலே அதனை முறைப்படி பதிவு செய்தனர். தங்களது இறைவனின் வேதத்தையும், தங்களது நபியின் சுன்னாவையும் அழிவிலிருந்தும், மோசடிக்காரர்களின் மோசடியிலிருந்தும் பாதுகாத்ததற்காக இஸ்லாத்தின் சார்பாகவும் முஸ்லிம்களின் சார்பாகவும் அல்லாஹ் அவர்களுக்கு மிகச் சிறந்த நற்கூலிகளை வழங்குவானாக!

உங்களுடைய கருத்துப்படி இது அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தக்கூடிய ஒரு விடயமாக இருந்தால் ஏன் (உங்களையும் எங்களையும் விட) நபியவர்களை மிகவும் நேசித்தவர்களும் நல்ல விடயங்களைச் செய்வதிலும் நன்றி செலுத்துவதிலும் மிகவும் தேற்றம் கொண்டவர்களான சிறந்த நூற்றாண்டில் வாழ்ந்த நபித்தோழர்களோ அவர்களை துயர்ந்து வந்த தாபிஊன்களோ அவர்களையும் சேர்ந்து வந்த தபஉத்தாபிஈன்களோ இதனைச் செய்யவில்லை?  அப்படியென்றால், இந்த மீலாது விழா எனும் மார்க்கப் புதுமையை (பித்அத்) உருவாக்கியவர்கள், அவர்களை விடவும் நேர்வழி பெற்றவர்களாகவும், அல்லாஹ்வுக்கு மிக அதிகமாக நன்றி செலுத்தக் கூடியவர்களாகவும் இருந்தார்களா? (அது எவ்வகையிலும் சாத்தியமற்றது.) என அவர்களிடம் கேட்கப்பட்டால்....

அவர்கள் சொல்வார்கள்: மீலாது விழா கொண்டாடுவது என்பது நபியவர்கள் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) மீதுள்ள அன்பை வெளிப்படுத்துவதாகும்; அது அந்த அன்பின் வெளிப்பாடுகளில் ஒன்றாகும், மேலும் நபியவர்கள் மீதுள்ள அன்பை வெளிப்படுத்துவது மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்ட  ஒரு காரியமாகும்.

அதற்கான பதில் "நிச்சயமாக, ஒவ்வொரு முஸ்லிமும் தனது உயிர், பிள்ளைகள், பெற்றோர் மற்றும் உலகில் உள்ள அனைத்து மனிதர்களை விடவும் நபியவர்களை (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) மிக அதிகமாக நேசிப்பது மார்க்கக் கடமையாகும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை —எனது தந்தையும் தாயும் அவர்களுக்கு அர்ப்பணமாகட்டும், அவர்கள் மீது அல்லாஹ்வின் ஸலவாத்தும் ஸலாமும் உண்டாகட்டும்! — ஆனால் அதற்காக மார்க்கத்தில் இல்லாத ஒன்றை புதிதாக உருவாக்கி அதனை வெளிப்படுத்த வேண்டிய அவசியமில்லை. மாறாக, அவர்களின் மீதான உண்மையான நேசம் என்பது அவர்களுக்குக் கீழ்ப்படிந்து, அவர்களின் வழிமுறையைப் பின்பற்றி நடப்பதேயாகும். ஏனெனில், அதுவே அவர்கள் மீதுள்ள அன்பை வெளிப்படுத்தும் மிக உன்னதமான அடையாளமாகும்."

ஒரு அரபிக் கவிதை பின்வருமாறு கூறுகிறது:

உன்னுடைய நேசம் உண்மையானதாக இருந்தால் நீ உன்னுடைய நேசனுக்கு வழிப்பட்டிருப்பாய்; ஏனெனில் உண்மையாக ஒருவரை நேசிப்பவர் அவருக்கு வழிப்பட்டு நடக்கக்கூடியவராக இருப்பார்.

எனவே, நபியவர்களை (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) நேசிப்பது என்பது, அவர்களின் வழிமுறையை உயிர்ப்பிப்பதையும், அதனை உங்களுடைய கடவாய்ப் பற்களால் கவ்விப் பிடித்துக் கொள்வதையும் மற்றும் அதற்கு முரணான அனைத்து சொல் மற்றும் செயல்களை விட்டும் முற்றிலும் விலகி நடப்பதையுமே வேண்டி நிற்கிறது. நபியவர்களின் வழிமுறைக்கு முரணான அனைத்துமே இகழத்தக்க மார்க்கப் புதுமையும் (பித்அத்), தெளிவான பாவகாரியமுமாகும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை.

மார்க்கத்தில் புதிதாக உண்டாக்கப்பட்ட இந்த மீலாது விழா கொண்டாட்டம் மற்றும் ஏனைய பித்அத்கள் என அனைத்தையும் இது உள்ளடக்கும். நல்லெண்ணம் மாத்திரமே மார்க்கத்தில் புதுமைகளை உண்டாக்குவதை ஆகுமாக்கிவிடமாட்டாது. இஸ்லாமிய மார்க்கமானது உளச்சுத்தி(இஃக்லாஸ்) மற்றும் நபியவர்களைப் பின்பற்றி நடத்தல் என்ற இரண்டு அடிப்படைகளின் மீது அமைந்துள்ளது. அல்லாஹுதஆலா கூறுகிறான் {(உண்மை) அவ்வாறல்ல! எவர் (அல்லாஹ்வுக்காக) நன்மை செய்து தன்னை (முற்றிலும்) அல்லாஹ்வுக்கு அர்ப்பணித்து விடுகிறாரோ, அவருக்கு அவர் செய்யும் நன்மையின் கூலி அவருடைய இறைவனிடம் உண்டு. மேலும், இவர்களுக்கு எத்தகைய பயமுமிருக்காது; இவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள்.} (அல்பகரா:112). இங்கு, 'அல்லாஹ்விற்குத் தன்னை முற்றிலும் அர்ப்பணிப்பது' என்பது அவனுக்காக மட்டுமே செய்யும் தூய எண்ணத்தைக் (இஹ்லாஸ்) குறிக்கும். மேலும், 'நன்மைகளைச் செய்வது' (இஹ்ஸான்) என்பது நபியவர்களைப் பின்பற்றி அவர்களின் சுன்னாவைச் சரியாகச் கண்டறிந்து செய்வதையும் குறிக்கும்."

அவர்களின் வாதங்களில் இன்னொன்று: மீலாது விழாவை கொண்டாடுவதும், இந்நிகழ்ச்சியின் போது நபியவர்களின் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) வாழ்க்கை வரலாற்றை வாசிப்பதும், அவர்களை பின்பற்றுவதற்கும் அவர்கள் வழி நடப்பதற்கும் துணை செய்யும்.

நிச்சயமாக நபியவர்களின் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) வாழ்க்கை வரலாற்றை வாசிப்பதும், அவர்களை முன்மாதிரியாகக் கொண்டு பின்பற்றுவதும் ஒரு முஸ்லிமிடம் வருடம் முழுவதும், அவனது வாழ்நாள் முழுவதும் எப்போதும் எதிர்பார்க்கப்படும் மார்க்கக் கடமையாகும். ஆனால், எவ்வித மார்க்க அடிப்படையும் இன்றி அதற்கென ஒரு குறிப்பிட்ட நாளை மட்டும் பிரத்தியேகமாக ஒதுக்குவது என்பது மார்க்கப் புதுமையாகும் (பித்அத்). நபியவர்கள் கூறியுள்ளார்கள்: [ஒவ்வொரு மார்க்கப் புதுமையும் வழிகேடாகும்] (நூட்கள்: அஹ்மத் 4/164, திர்மிதி: 2676). இத்தகைய புதுமைகள் தீமையையும், நபியவர்களை விட்டும் ஒருவரைத் தூரமாக்குவதையுமேயன்றி வேறெந்தப் பயனையும் தராது.

"நபியவர்கள் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) கூறினார்கள்:[நிச்சயமாக உங்களில் எனக்குப் பின்னால் வாழ்பவர்கள் ஏராளமான கருத்து வேறுபாடுகளையும் பிரிவினைகளையும் காண்பீர்கள். அச்சமயம் என்னுடைய மற்றும் எனக்குப்பின்னால் வரும் நேர்வழி பெற்ற குலபாஉர்ராஷிதீன்களின் வழிமுறையை பற்றிப்பிடித்துக்கொள்ளுங்கள், அதனை உங்களுடைய கடைவாய் பற்களால் கவ்விப் பிடித்துக் கொள்ளுங்கள், மார்க்கத்தில் புதிதாக உருவாக்கப்படும் காரியங்களை விட்டும் நீங்கள் எச்சரிக்கையாக இருங்கள். ஏனெனில், புதிதாக உருவாக்கப்படும் ஒவ்வொரு காரியமும் பித்அத் ஆகும், ஒவ்வொரு பித்அத்தும் வழிகேடாகும்" (நூட்கள்: அஹ்மத் 4/126, திர்மிதி: 2676). எனவே, இந்த உன்னதமான ஹதீஸின் மூலம், கருத்து வேறுபாடுகள் தோன்றும் போது நாம் யாரைப் பின்பற்றி நடக்க வேண்டும் என்பதை நபியவர்கள் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) நமக்குத் தெளிவாக விளக்கியுள்ளார்கள். அதேபோன்று, நபியவர்களின் வழிமுறைக்கு (சுன்னாவிற்கு) முரணான அனைத்துச் சொல் மற்றும் செயல்களும் மார்க்கப் புதுமையே (பித்அத்) ஆகும் என்றும், ஒவ்வொரு மார்க்கப் புதுமையும் வழிகேடாகும் என்றும் அவர்கள் தெளிவாக எடுத்துக் காட்டியுள்ளார்கள்.

எனவே, இந்த மீலாது விழா கொண்டாட்டத்தை பொருத்தவரையில், இதற்கு அல்லாஹ்வின் தூதருடைய (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) வழிமுறையிலோ அல்லது நேர்வழி பெற்ற அவர்களுடைய கலீஃபாக்களின் வழிமுறையிலோ எவ்வித அடிப்படையையும் நாம் காண முடியாது. ஆதலால், இது மார்க்கத்தில் புதிதாகத் தோற்றுவிக்கப்பட்ட ஒரு காரியமும், வழிகேடான மார்க்கப் புதுமையுமே (பித்அத்) ஆகும். இந்த ஹதீஸ் உள்ளடக்கியுள்ள இந்த உன்னதமான அடிப்படைக் கொள்கையை, பின்வரும் அல்லாஹ்வின் திருவசனமும் நமக்குத் தெளிவுபடுத்துகிறது: {உங்களுக்குள் ஒரு விஷயத்தில் முரண்பாடு ஏற்பட்டால், உண்மையாகவே நீங்கள் அல்லாஹ்வையும், இறுதிநாளையும் நம்பிக்கை கொண்டவர்களாயிருந்தால் அவ்விடயத்தை அல்லாஹ்விடமும் (அவனுடைய) தூதரிடமும் ஒப்படைத்துவிடுங்கள். (அவர்களுடைய தீர்ப்பை நீங்கள் மனதிருப்தியுடன் ஒப்புக் கொள்ளுங்கள்.) இதுதான் உங்களுக்கு நன்மையும், அழகான முடிவும் ஆகும்}.(அந்நிஸா:59).

அல்லாஹ்விடம் ஒப்படைப்பது என்பது அவனுடைய கண்ணியமிக்க திருக்குர்ஆனை நோக்கி மீள்வதாகும்; மேலும், நபியவர்களிடம் ஒப்படைப்பது என்பது அவர்கள் மரணித்த பிறகு அவர்களுடைய வழிமுறையான சுன்னாவை நோக்கி மீள்வதாகும். எனவே, கருத்து வேறுபாடுகள் தோன்றும் போது திருக்குர்ஆனும் சுன்னாவும் மட்டுமே இறுதி அளவுகோல்களாகும். அப்படியிருக்க, இந்த மீலாது விழா கொண்டாடுவது மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்ட ஒரு காரியம் என்பதற்கான ஆதாரம் திருக்குர்ஆனிலோ அல்லது சுன்னாவிலோ எங்கு இருக்கிறது?

ஆகவே, இதனைச் செய்பவர்கள் அல்லது இதனை ஒரு நல்ல காரியம் என்று கருதுபவர்கள், இத்தகைய மார்க்கப் புதுமைகளை (பித்அத்களை) விட்டும் விலகி, அல்லாஹ்விடம் பாவமன்னிப்புத் தேடி (தவ்பா செய்து) மீள்வது கட்டாயக் கடமையாகும். சத்தியத்தைத் தேடும் ஒரு உண்மையான முஃமினுடைய பண்பு இதுவேயாகும். மாறாக, மார்க்க ஆதாரம் நிலைநாட்டப்பட்ட பின்னரும் எவர் ஒருவர் உண்மையை ஏற்க மறுத்து பிடிவாதம் பிடிக்கிறாரோ, அவருடைய கணக்குத் தீர்ப்பு அவருடைய இறைவனிடமே உள்ளது.

மேற்கோள் நூல்: சவூதி அரேபியாவின் சிரேஷ்ட (மூத்த) உலமாக்கள் சபையின் உறுப்பினரான ஷைக் டாக்டர் ஸாலிஹ் பின் ஃபவ்ஸான் அல்-ஃபவ்ஸான் அவர்கள் எழுதிய, 'ஹுகூகுன் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் பைனல் இஜ்லாலி வல் இஃக்லால்' (நபியவர்களின் உரிமைகள்: கண்ணியப்படுத்துவதற்கும் எல்லை மீறுவதற்கும் இடையில்) என்ற புத்தகம், (பக்கம்: 139).

மூலநூட்கள்

at email

செய்திமடல்

தள செய்திகள் மற்றும் அவ்வப்போது புதுப்பிப்புகளைப் பெற அஞ்சல் பட்டியலில் இணையவும்

phone

இஸ்லாம் கேள்வி பதில் செயலி

உள்ளடக்கத்தை விரைவாக அணுகவும் ஆஃப்லைன் உலாவலுக்கும்

download iosdownload android