நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் பொருட்டால் பிரார்த்தனை செய்வதை அனுமதிப்பதில் அனைத்து அறிஞர்களும் ஏகோபித்த கருத்துடையவர்களாக இருக்கும்போது, ஸலஃபு கொள்கை சார்ந்த அறிஞர்கள் மாத்திரம் ஏன் ஹராம் என்கிறார்கள்? இதனை முதன்முதலில் ஹராம் என்று கூறியவர் இப்னு தைமிய்யா தானா? அனைத்து மத்ஹபுகளைச் சார்ந்த அறிஞர்களும் இவ்வகையான வேண்டுதலை அனுமதிக்கும் போது, இவர்கள் மட்டும் ஏன் இதனை ஹராம் என்று கூறுவதில் பிடிவாதமாக இருக்கிறார்கள்?
முதலாவதாக:
நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் பொருட்டால் பிரார்த்தனை செய்தல் என்பதன் பொருள்: ஒரு மனிதன் தனது இறைவனிடம் பிரார்த்திக்கிறான்; ஆனால், பிரார்த்தனையின் போது தனது துஆ ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் அல்லது தனது தேவை விரைவாக நிறைவேற வேண்டும் என்பதற்காக நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களை ஒரு பொருட்டாக முன்வைக்கிறான். உதாரணமாக: "நபியின் உரிமையைக் கொண்டு உன்னிடம் கேட்கிறேன்" அல்லது "நபியின் அந்தஸ்தைக் கொண்டு உன்னிடம் கேட்கிறேன்" என்று கூறுவதைப் போன்றதாகும்.
ஷைகுல் இஸ்லாம் இப்னு தைமிய்யா (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் தமது "மஜ்மூஉல் ஃபதாவா" என்ற நூலில் பின்வருமாறு கூறுகிறார்கள்:
"அல்லாஹ் அல்லாத மற்றொன்றைக் கொண்டு அல்லாஹ்விடம் வேண்டுபவர், ஒன்று அதன் மீது சத்தியம் செய்து கேட்பவராக இருப்பார்; அல்லது அதனை ஒரு காரணியாக முன்வைத்துத் தேடுபவராக இருப்பார். குகையில் அடைபட்ட அந்த மூன்று மனிதர்கள் தங்கள் நற்செயல்களின் பொருட்டால் பிரார்த்தனை செய்ததையும், நபிமார்கள் மற்றும் ஸாலிஹீன்களின் பிரார்த்தனையின் பொருட்டால் பிரார்த்தனை செய்வதையும் இதற்கு உதாரணமாகக் கூறலாம்.
எனவே, அது அல்லாஹ் அல்லாத மற்றொன்றைக் கொண்டு அல்லாஹ்விடம் சத்தியம் செய்து கேட்பதாக இருந்தால்: அனுமதிக்கப்பட மாட்டாது.
மாறாக, அது நாடப்பட்ட காரியத்தைப் பெற்றுத் தரக்கூடிய ஒரு காரணத்தை முன்வைத்துத் தேடுவதாக இருந்தால், உதாரணமாக அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் வழிப்பட்டு செய்யும் நற்செயல்களஇன் பொருட்டால் கேட்பது, நபியவர்கள் மீது கொண்ட ஈமான், அவர்மீதான நேசம், மற்றும் அவரைப் பின்பற்றுதல் போன்றவற்றை முன்வைத்து வேண்டுவது போல இருந்தால்: இது அனுமதிக்கப்பட்டதாகும்.
ஆனால், அது வெறும் நபிமார்கள் மற்றும் ஸாலிஹீன்களின் உடலை மட்டுமே முன்வைத்துத் தேடுவதாக இருந்தால்: இது மார்க்கத்தில் அங்கீகரிக்கப்படாத ஒன்றாகும். அறிஞர்களில் பலர் இதனைத் தடுத்துள்ளனர், மேலும் இது அனுமதிக்கப்பட மாட்டாது என்றும் கூறியுள்ளனர். ஆயினும் சில அறிஞர்கள் இதற்குச் சலுகை அளித்துள்ளனர். இருப்பினும், நாம் முன்னர் குறிப்பிட்டது போல முதலாவது கருத்தே (அதாவது தடைசெய்யப்பட்டது என்ற கருத்தே) மிக வலுவானதாகும். ஏனெனில், இது நாடப்பட்ட காரியத்தைப் பெற்றுத் தரக்கூடிய எந்தவொரு காரணத்தையும் கொண்டிராத ஒரு வேண்டுதலாகும்.
இதற்கு நேர்மாற்றமாக, நாடப்பட்ட காரியத்தைப் பெற்றுத் தரக்கூடிய தகுந்த காரணத்தை முன்வைத்து வேண்டுபவர் -உதாரணமாக அல்லாஹ்விடம் ஸாலிஹீன்களின் பிரார்த்தனையின் பொருட்டால் பிரார்த்திப்பதும், நற்செயல்களின் பொருட்டால் பிரார்த்தனை செய்வதும்போல இருந்தால்: இது அனுமதிக்கப்பட்டதாகும். ஏனெனில், ஸாலிஹீன்கள் நமக்காகச் செய்யும் பிரார்த்தனை, நாம் எதனை நாடினார்களோ அக்காரியம் நிறைவேறுவதற்கான ஒரு காரணமாக அமைகிறது.
அதேபோல, நற்செயல்களும் அல்லாஹ் நமக்கு வழங்கும் நற்கூலிக்குக் காரணமாக அமைகின்றன. நாம் அவர்களின் பிரார்த்தனையையும், நமது நற்செயல்களையும் முன்வைத்து பிரார்த்திக்கும் போது, அல்லாஹ்விடம் ஒரு தகுந்த ஊடகத்தைக் கொண்டே வஸீலா தேடுகிறோம். இது அல்லாஹ் கூறிய பின்வரும் இறைவசனங்களைப் போன்றதாகும்:
"முஃமின்களே! நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்; மேலும் அவனை நெருங்குவதற்குரிய 'வஸீலாவை'த் தேடிக் கொள்ளுங்கள்." (சூரா அல்-மாயிதா: 35) - இங்கு வஸீலா என்பது நற்செயல்களாகும்.
மேலும் அல்லாஹ் கூறுகிறான்:
"எவர்களை இவர்கள் (கடவுள்களாகப் பிரார்த்தித்து) அழைக்கிறார்களோ, அவர்களே தங்கள் இறைவன்பால் வஸீலாவைத் (நெருக்கத்தைத்) தேடுகிறார்கள்." (சூரா அல்-இஸ்ரா: 57)."
"ஆனால், நாம் அல்லாஹ்விடம் நல்லடியார்களின் பிரார்த்தனையைக் கொண்டோ அல்லது நமது நற்செயல்களைக் கொண்டோ பிரார்த்தனை செய்யாமல், வெறும் அவர்களை மட்டுமே முன்வைத்து பிரார்த்தனை செய்வோமேயானால்: அவர்களின் உடல் என்பது நமது பிரார்த்தனை ஏற்றுக்கொள்ளப்படுவதற்கான ஒரு காரணமாக அமையாது. அவ்வாறு செய்யும்போது நாம் அல்லாஹ்வை நெருங்குவதற்குரிய மார்க்க வரம்பிற்குட்பட்ட எந்தவொரு நற்செயலும் இல்லாத ஒன்றையே முன்வைத்தவர்களாக ஆவோம். இதன் காரணமாகவே, இத்தகைய வேண்டுதல் முறையானது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களிடமிருந்து ஆதாரப்பூர்வமான (ஸஹீஹான) எந்தவொரு அறிவிப்பின் மூலமும் நிருபிக்கப்படவில்லை; மேலும், முன்சென்ற நன்மக்கள் மத்தியிலும் இது அறியப்பட்ட ஒன்றாக இருக்கவில்லை."
(மஜ்மூஉல் ஃபதாவா" (1/337-338).
இரண்டாவதாக: இதனால், ஸலஃபிய்யாக்கள் மற்றும் ஷைகுல் இஸ்லாம் (இப்னு தைமிய்யா) மற்றும் அவர்களது கருத்தை ஏற்கும் ஏனைய அறிஞர்கள் மீது பழி சுமத்துவோர் கூறுவது போல ‘நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களுக்கு அல்லாஹ்விடத்தில் எவ்வித அந்தஸ்தோ (ஜாஹ்) அல்லது கண்ணியமான நிலையோ இல்லை என்பதோ, அல்லது அவர்கள் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் உன்னதமான நிலையைத் துச்சமாக மதிக்க முற்படுகிறார்கள் என்பதோ அர்த்தம் அல்ல! அவர்களிடம் அப்படி ஒரு எண்ணம் இருப்பதற்கு சாத்தியமே இல்லை. நிச்சயமாக நபியவர்கள் புகழத்தக்க உன்னத இடத்திற்குரியவர் , மிக உயர்ந்த தகுதியைப் பெற்றவர், மேலும் ஆதமுடைய சந்ததிகளின் தலைவர் ஆவர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்). இருப்பினும், அல்லாஹ்விடத்தில் அவர்களுக்கு இருக்கும் அந்த உன்னதமான தகுதியும் கண்ணியமும், நாம் அவர்களின் மூலம் அல்லாஹ்விடம் கையேந்துவதற்கோ அல்லது அவர்களை அல்லாஹ்வை நெருங்குவதற்குரிய வஸீலாவாக கருதவோ முடியாது.
ஷைகுல் இஸ்லாம் (இப்னு தைமிய்யா) ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறுகிறார்கள்:
"அல்லாஹ்வும் அவனது தூதரும் அடியார்களுக்கு அல்லாஹ்விடத்தில் ஒரு உரிமை உண்டு என்று எதனைத் தெளிவுபடுத்தியுள்ளார்களோ, அது உண்மையகவே அவர்களின் உரிமை தான். ஆனால், விவாதிக்கப்படுவது அந்த உரிமையின் பொருட்டால் பிரார்த்தனை செய்வதைப் பற்றியதாகும். எனவே நாம் கூறுவோம்: எதைக் கொண்டு கேட்கிறாரோ, அந்த உரிமை அவரது பிரார்த்தனை ஏற்றுக்கொள்ளப்படுவதற்கான ஒரு காரணமாக இருக்குமேயானால், அதைக் கொண்டு கேட்பது அழகிய (அனுமதிக்கப்பட்ட) செயலாகும். உதாரணமாக, அல்லாஹ்வை வணங்குபவர்களுக்கும் அவனிடம் கையேந்துபவர்களுக்கும் அவன்மீது கடமையாகியிருக்கக்கூடிய உரிமையைக் முன்வைத்து கேட்பதைப் போலாகும்.
ஆனால், பிரார்த்தனை செய்யக்கூடியவர்: 'இன்னாரின் உரிமைக்காக அல்லது இன்னாரின் உரிமைக்காக' என்று கூறும்போது; அந்த நல்ல மனிதர்களுக்கு அல்லாஹ்விடம் ஒரு உரிமை இருக்கலாம் - அதாவது அவர்களை வேதனை செய்யாமல் இருப்பது, தனது நற்கூலியைக் கொண்டு அவர்களைக் கண்ணியப்படுத்துவது, மற்றும் அவர்களுக்கு வாக்குறுதி அளித்தபடி அவர்களின் தகுதியை உயர்த்துவது போன்ற உரிமைகளை அல்லாஹ் தன்மீது கடமையாக்கிக் கொண்டுள்ளான். இருப்பினும், அவர்கள் அல்லாஹ்வின் அந்த உன்னதக் கண்ணியத்தைப் பெறுவதற்குத் தகுதியுடையவர்களாக இருப்பதில், இந்தத் தனிமனிதரின் பிரார்த்தனை நிறைவேறுவதற்கான எந்தவொரு காரணமும் அடங்கியிருக்கவில்லை. ஏனெனில், அந்த நல்ல மனிதர் தனக்குரிய தகுதியை அல்லாஹ் அவருக்கு எளிதாக்கிக் கொடுத்த ஈமான்மற்றும் வழிபடுதல் ஆகியவற்றின் மூலமாகவே பெற்றுக் கொண்டார். ஆனால், இந்தத் தனிமனிதரோ அந்த நல்ல மனிதர் பெற்றுக் கொண்ட தகுதியைப் பெறவில்லை. எனவே, அந்த நல்ல மனிதரை அல்லாஹ் கண்ணியப்படுத்துவதில், இந்த மனிதரின் பிரார்த்தனை ஏற்றுக்கொள்ளப்படுவதற்கான எந்தவொரு காரணமும் இல்லை.
ஒருவேளை அவர்: 'இதன் காரணம் என்னவென்றால், அவர்களின் பரிந்துரையும் அவர்களின் பிரார்த்தனையும்தான் ' என்று கூறினால்; அந்த நல்ல மனிதர் உண்மையில் இவருக்காகப் பரிந்துரை செய்து, பிரார்த்தனையும் செய்திருந்தால் மட்டுமே அது உண்மையான காரணமாக இருக்கும். ஆனால், அவர் இவருக்காகப் பரிந்துரையும் செய்யாமல், பிரார்த்தனையும் செய்யாதபோது அங்கு பிரார்த்தனை நிறைவேறுவதற்குரிய எந்தவொரு காரணமும் கிடையாது."
ஷைகுல் இஸ்லாம் (இப்னு தைமிய்யா) ரஹிமஹுல்லாஹ் அவர்கள் தமது "மஜ்மூஉல் ஃபதாவா" (1/278) என்ற நூலில் மேலும் பின்வருமாறு கூறுகிறார்கள்: "நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் மரணித்த பிறகு, ஒரு மனிதர் (அல்லாஹ்விடம்): 'அல்லாஹ்வே! எனக்காக அவர்களின் பரிந்துரையை ஏற்றுக்கொள்வாயாக, எனக்காக அவர்களின் விஷயத்தில் எனது பரிந்துரையையும் ஏற்றுக்கொள்வாயாக!' என்று கூறினால், அந்த மனிதருக்காக நபியவர்கள் எந்தவொரு பிரார்த்தனையும் செய்யாத நிலையில், இவருடைய இந்த வாசகம் முற்றிலும் பிழையான ஒன்றாகும் என்பது யாவரும் அறிந்ததே."
இந்த விவகாரத்தை புரிந்துகொள்வதில் முக்கியமான விடயம் என்னவென்றால், பிரார்த்தனை என்பது ஒரு வணக்கவழிபாடாகும்; இன்னும் சொல்லப்போனால், அது அல்லாஹ்வுக்குச் செலுத்தப்படும் மிக உன்னதமான வழிபாடுகளில் ஒன்றாகும் என்பதை நாம் விளங்கிக்கொள்ள வேண்டும். இதனை தான் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் பின்வருமாறு கூறினார்கள்: ‘"பிரார்த்தனை என்பதுதான் வழிபாடாகும். 'நீங்கள் என்னையே பிரார்த்தியுங்கள்; நான் உங்களின் பிரார்த்தனையை ஏற்றுக் கொள்கிறேன் என்ற உங்களின் இறைவன் கூறுகிறான்." (அறிவிப்பவர்: அபூதாவூத்: 1479 மற்றும் ஏனையோர், இதனை அல்பானி ஸஹீஹ் என கூறியுள்ளார்).
வணக்கவழிபாடுகள் அனைத்தும் மார்க்க ஆதாரங்களை மட்டுமே அடிப்படையாகக் கொண்டதே என்பதுதான் விதி. அதாவது, அவற்றிற்குரிய சான்றுகள் மார்க்கத்தில் -குர்ஆன் அல்லது சுன்னாவில்- வந்திருக்க வேண்டும். இதனை தான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் பின்வருமாறு கூறினார்கள்: [நம்முடைய இந்த (மார்க்க) விவகாரத்தில், அதில் இல்லாத ஒன்றை எவர் புதிதாக உண்டாக்குகிறாரோ, அது நிராகரிக்கப்பட்டதாகும்]. (ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் வாயிலாக புகாரி: 2697 மற்றும் முஸ்லிம்: 1718 ஆகிய நூல்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது).
முஸ்லிமின் மற்றொரு அறிவிப்பில்: [நம்முடைய கட்டளை இல்லாத ஒரு செயலை எவர் செய்கிறாரோ, அது நிராகரிக்கப்படும்]. என வந்துள்ளது.
இமாம் நவவி (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் (இந்த ஹதீஸிற்கு விளக்கமளிக்கும் போது) கூறுகிறார்கள்:
"அரபு மொழியியல் அறிஞர்கள் கூறுகிறார்கள்: இங்கு 'அர்-ரத்து' (الرد) என்பது 'நிராகரிக்கப்பட்டது' (மர்தூத்) என்ற பொருளைத் தரும். அதாவது, அது பிழையானதும், ஏற்றுக் கொள்ளப்பட முடியாததும் என்று அர்த்தம் கொள்ளப்படும். இந்த ஹதீஸ் இஸ்லாத்தின் மிக முக்கிய விதிகளில் ஒரு மாபெரும் விதியாகும். மேலும், இது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் ஆழமான கருத்தைக் கொண்ட சுருக்கமான வார்த்தைகளில் ஒன்றாகும். ஏனெனில், இது அனைத்து வகையான புதிதாக உருவாக்கப்பட்ட அனைத்து மார்க்கப் புதுமைகளையும் நிராகரிப்பதில் மிகத் தெளிவான சான்றாகும். இரண்டாவது அறிவிப்பில் ஒரு கூடுதல் அம்சம் உள்ளது: அதாவது, பித்அத்தான செயலைச் செய்யக்கூடிய சிலர், தமக்கு முன்பே யாரோ ஒருவரால் உருவாக்கப்பட்ட ஒரு பித்அத்தைச் செய்யும்போது பிடிவாதம் பிடிக்கலாம். அவரிடம் முதலாவது அறிவிப்பைக் கொண்டு சான்று காட்டப்படும் போது, 'நான் ஒன்றும் புதிதாக உண்டாக்கவில்லையே!' என்று அவர் கூறலாம். அப்போது அவருக்கு எதிராக இந்த இரண்டாவது அறிவிப்பை ஆதாரமாக காட்டலாம்.. ஏனெனில், அதில் புதிதாக உருவாக்கப்பட்டவை அனைத்தையும் - அதை அந்தச் செயலைச் செய்பவர் புதிதாக உண்டாக்கினாலும் சரி, அல்லது அவருக்கு முன்பே அது உண்டாக்கப்பட்டிருந்தாலும் சரி - நிராகரிக்கப்படும் என்று மிகத் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. இந்த நபி மொழியில் ‘மார்க்கத்தில் ஏதாவது விடயத்தில். தடை வந்தால் அந்த விடயம் மார்க்கக் கண்ணோட்டத்தில் பிழையானது’ என்று கூறக்கூடிய மார்க்கச் சட்டக் கலை அறிஞர்களுக்குப் பலமான ஆதாரம் உள்ளது. மேலும், அவ்வாறு மார்க்கத்தில் ஒரு தடை வருவது அந்த விடயம் பிழையானது என்பதை சுட்டிக்காட்டாது. என்று சொல்பவர்கள், இந்த நபி மொழியானது தனிநபர் மூலமாக வந்த ஒரு செய்தி இவ்வாறான முக்கியமான ஒரு விடயத்தை நிறுவுவதற்கு இந்த நபி மொழி போதுமாகாது என்று வாதாடுகிறார்கள். ஆனால், அவர்களின் இந்தப் பதில் தவறானதாகும். இந்த ஹதீஸ் மனனம் செய்யப்பட வேண்டியதும், மார்க்கத்திற்கு முரணான காரியங்களை முறியடிப்பதற்கும், இதற்குரிய சான்றுகளை மக்கள் மத்தியில் பரப்புவதற்கும் பயன்படுத்தப்பட வேண்டிய மிக முக்கியமான ஒன்றாகும்.
(இத்துடன் இமாம் நவவியின் கூற்று முற்றிற்று)
இந்த அடிப்படை விதியை நாம் விளங்கிக் கொள்ளும்போது, அல்லாஹ்வுக்காக செய்யப்படும் வணக்க வழிபாடுகள் விடயத்தில் மார்க்கம் நபியவர்களின் மூலமாக நமக்குக் காட்டியவற்றைத் தவிர எதனையும் செய்வது கூடாது என்ற விடயத்தை நாம் விளங்கிக் கொள்ள முடியும். அவ்விடயம். நாங்களே புதிதாக உண்டாக்கியதாக இருந்தாலும் சரி அல்லது எங்களுக்கு முன்னால் உள்ளவர்கள் காட்டித்தந்த விடயங்களாக இருந்தாலும் சரி.
ஷைகுல் இஸ்லாம் இப்னு தைமிய்யா ரஹிமஹுல்லாஹ் அவர்கள் தமது "மஜ்மூஉல் ஃபதாவா" என்ற நூலில் கூறுகிறார்கள்:
"ஒரு காரியம் மார்க்கத்தில் கடமையானது என்றோ அல்லது சுன்னத்தானது என்றோ கருதுவதற்கு, அதன் கடமையையோ அல்லது சுன்னத்தையோ அவசியமாக்கக்கூடிய ஒரு மார்க்கச் சான்று கண்டிப்பாக இருக்க வேண்டும். ஏனெனில், வணக்கவழிபாடுகள் என்பவை கடமையாகவோ அல்லது சுன்னத்தாகவோ மட்டுமே இருக்க முடியும். எனவே, எது கடமையாகவும் இல்லையோ, சுன்னத்தாகவும் இல்லையோ அது வணக்கமாக மாற முடியாது. (இருப்பினும்) அல்லாஹ்விடம் பிரார்த்திப்பது என்பது - அதில் நாடப்படும் காரியம் அனுமதிக்கப்பட்ட ஒன்றாக இருந்தாலும் கூட - ஒரு வழிபாடே ஆகும்." (மஜ்மூஉல் ஃபதாவா" (1/265)
அவர்கள் தமது ஃபதாவா நூலில் (1/278) மேலும் கூறுகிறார்கள்:
"(அவர்கள் ஆதாரமாகக் காட்டும்) அந்த பிரார்த்தனை நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களிடமிருந்து வந்த ஒன்றல்ல; இன்னும் சொல்லப்போனால், அவர்கள் செய்யுமாறு ஏவக்கூடிய அந்தத் வேண்டுதல் முறை நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களிடமிருந்து வந்த நற்செய்திகளில் இடம் பெறவுமில்லை. இத்தகைய ஆதாரமற்ற விடயங்களைக் கொண்டு ஒரு மார்க்கச் சட்டத்தை நிலைநாட்ட முடியாது.
இது, வணக்க வழிபாடுகள், அனுமதிக்கப்பட்டவை, கடமைகள் அல்லது விலக்கப்பட்டவை ஆகிய விவகாரங்களில் சில ஸஹாபாக்களிடமிருந்து அறிவிக்கப்படக்கூடிய செய்திகளைப் போன்றதாகும். அதாவது, அந்தச் தனிநபர் ஸஹாபியோடு மற்ற ஸஹாபாக்கள் உடன்படாதபோதும், மேலும் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களிடமிருந்து ஆதாரப்பூர்வமாக நிருபிக்கப்பட்ட செய்திகள் அதற்கு உடன்படாமல் மாறுபட்டு இருக்கும்போதும், அந்த ஸஹாபியின் செயல் முஸ்லிம்கள் கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டிய ஒரு வழிமுறையாக கருதப்படமாட்டாது.
மாறாக, அதன் ஆகக்கூடிய நிலை என்னவென்றால், அது அறிஞர்கள் மத்தியில் ஆய்வு செய்வதற்குச் சாத்தியமான மற்றும் நபியர்களின் நபி மொழி மற்றும் அல்லாஹ்வின் குர்ஆன் கண்ணோட்டத்தில் பார்க்கப்பட வேண்டிய உம்மத்தினர் மத்தியில் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்ட ஒரு விவகாரமாகவே கருதப்படும். இதற்கு ஏராளமான உதாரணங்கள் உள்ளன.
மார்க்கத் தீர்ப்புக்கான நிரந்தரக் குழுவிடம் (அல்-லஜ்னதுத் தாயிமா) பின்வரும் கேள்வி கேட்கப்பட்டது: "ஒரு முஸ்லிம் 'லா இலாஹ இல்லல்லாஹ் முஹம்மதுர் ரசூலுல்லாஹ்' என்று சாட்சி கூறுகிறார். ஆனால் அவர் தனது பிரார்த்தனையில்: 'அல்லாஹ்வே! நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் அந்தஸ்தைக் கொண்டோ, அல்லது இத்தூதரின் பரக்கத்தைக் கொண்டோ, அல்லது முஸ்தஃபாவின் கண்ணியத்தைக் கொண்டோ, அல்லது ஷேக் திஜானியின் அந்தஸ்தைக் கொண்டோ, அல்லது ஷேக் அப்துல் காதிரின் பரக்கத்தைக் கொண்டோ, அல்லது ஷேக் ஸனூஸியின் கண்ணியத்தைக் கொண்டோ எனக்கு இம்மை மற்றும் மறுமையின் இன்னின்ன நன்மைகளைத் தருவாயாக'
என்று கூறுகிறார். இதன் மார்க்கச் சட்டம் என்ன?"
அதற்கு அவர்கள் பின்வருமாறு பதிலளித்தனர்: "ஒருவர் தனது பிரார்த்தனையில் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் அந்தஸ்து, கண்ணியம், பரக்கத் அல்லது சான்றோர்களான (ஸாலிஹீன்கள்) மற்றவர்களின் அந்தஸ்து, கண்ணியம், பரக்கத் ஆகியவற்றைக் கொண்டு அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்து, உதாரணமாக: 'அல்லாஹ்வே! உன்னுடைய நபியின் அந்தஸ்தைக் கொண்டோ, கண்ணியத்தைக் கொண்டோ, அல்லது பரக்கத்தைக் கொண்டோ எனக்குச் செல்வத்தையும், சந்ததியையும் தருவாயாக அல்லது என்னை சொர்க்கத்தில் நுழைவித்து நரக வேதனையிலிருந்து பாதுகாப்பாயாக' என்று கூறினால், அவர் இஸ்லாத்தை விட்டும் வெளியேற்றக்கூடிய இணைவைப்பைச் செய்த இணைவைப்பாளர் ஆக மாட்டார். இருப்பினும், இணைவைப்பிற்கு இட்டுச்செல்லும் வாசல்களை அடைப்பதற்காகவும், ஒரு முஸ்லிம் இணைவைப்பிற்குள் விழுந்துவிடக் கூடிய செயல்களிலிருந்து அவரைத் தூரப்படுத்துவதற்காகவும் இத்தகைய வேண்டுதல் முறை தடுக்கப்பட்டு்ள்ளது.
அனுபவங்களும் யதார்த்தமான உண்மைகளும் நிரூபித்துக் காட்டியுள்ளபடி, நபிமார்கள் மற்றும் ஸாலிஹீன்களின் அந்தஸ்தைக் கொண்டு வேண்டுதல் செய்வதென்பது, காலப்போக்கில் மனிதனை இணைவைப்பின் பக்கம் இட்டுச்செல்லக்கூடிய வழிகளில் ஒன்றாகும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை. இணைவைப்பு மற்றும் மார்க்கத்தில் விலக்கப்பட்ட காரியங்களுக்கு இட்டுச்செல்லும் வழிகளை அடைப்பது என்பது இஸ்லாமிய ஷரீஅத்தின் மிக முக்கிய நோக்கங்களில் ஒன்றாகும் என்பதைத் திருக்குர்ஆனிலும் சுன்னாவிலும் வரக்கூடிய ஏராளமான சான்றுகள் திட்டவட்டமாக நிரூபிக்கின்றன. அதற்கு உதாரணமாக அல்லாஹ்வின் பின்வரும் கூற்றைக் குறிப்பிடலாம்: {அல்லாஹ்வையன்றி எவர்களை அவர்கள் பிரார்த்தித்து அழைக்கிறார்களோ, அவர்களை நீங்கள் ஏசாதீர்கள்; (அவ்வாறு ஏசினால்) அவர்கள் அறியாமையின் காரணமாக, வரம்பு மீறி அல்லாஹ்வை ஏசுவார்கள். இவ்வாறே ஒவ்வொரு சமுதாயத்திற்கும் அவர்தம் செயலை நாம் அழகாக்கிக் காட்டியுள்ளோம்; பின்னர் அவர்களின் மீளுதல் அவர்களின் இறைவன்பால்தான் உள்ளது, அப்போது அவர்கள் செய்து கொண்டிருந்தவை பற்றி அவன் அவர்களுக்கு அறிவிப்பான்.} (சூரா அல்-அன்ஆம்: 108).
இணைவைப்பாளர்கள் அல்லாஹ்வையன்றி வணங்கக்கூடிய அவர்களின் போலி தெய்வங்கள் அனைத்தும் முற்றிலும் பொய்யானவை என்ற போதிலும், இணைவைப்பாளர்கள் தங்களின் போலி தெய்வங்களுக்காகப் பரிந்துகொண்டு, அறியாமையினாலும் வரம்பு மீறலாலும் உண்மையான இறைவனான அல்லாஹ்வை ஏசிவிடக் கூடாது என்பதற்காக, அவர்களின் தெய்வங்களை ஏச வேண்டாம் என்று அல்லாஹ் முஸ்லிம்களைத் தடுத்துள்ளான். இதன் பிற உதாரணங்கள்: கப்ருகள் வணங்கப்பட்டு விடுமோ என்ற அச்சத்தின் காரணமாக அவற்றைப் பள்ளிவாசல்களாக எடுத்துக்கொள்வதை நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் தடுத்ததாகும். அதேபோலதான், ஒரு அந்நிய ஆடவன் ஒரு அந்நியப் பெண்ணுடன் தனித்திருப்பதும், ஒரு பெண் தன் அலங்காரங்களை அந்நிய ஆடவர்கள் முன்னிலையில் வெளிப்படுத்துவதும் ஹராம் ஆக்கப்பட்டதும ஆகும். மேலும், பிரார்த்தனையின் போது அந்தஸ்து, கண்ணியம் போன்றவற்றைக் கொண்டு பிரார்த்தனை செய்வது வணக்கவழிபாடாகும்; வணக்கவழிபாடுகள் அனைத்தும் மார்க்க சான்றுகளை அடிப்படையாகக் கொண்டு மாத்திரமே செய்யப்பட வேண்டும். திருக்குர்ஆனிலோ, அல்லாஹ்வின் தூதருடைய வழிமுறையிலோ அல்லது அவர்களின் தோழர்களிடமிருந்தோ இத்தகைய பிரார்த்தனை முறைக்குச் சான்றாக அமையக்கூடிய எவ்வித ஆதாரமும் வரவில்லை. எனவே, இது ஒரு பித்அத் (மார்க்கப் புதுமை) என்பது தெளிவாகப் புலனாகிறது.
(பார்க்க: ஃபதாவா அல்-லஜனதுத் தாயிமா: 1/501-502).
நான்காவதாக: கேள்வி கேட்டவர் தமது கேள்வியில், "இப்னு தைமிய்யா தான் முதன்முதலில் இதனை ஹராம் என்று கூறினார்" எனக் குறிப்பிட்டிருப்பது முற்றிலும் தவறானதாகும். அவர் ஷைகுல் இஸ்லாம் இப்னு தைமிய்யா ரஹிமஹுல்லாஹ் அவர்களின் எதிரிகளிடமிருந்துதான் இந்த அவதூறைப் பெற்றிருக்கிறார். ஷைகுல் இஸ்லாம் அவர்கள் மீது இந்த அவதூறைச் சுமத்திய அவரது எதிரிகளில் ஒருவரான 'அல்-அக்நாயீ' என்பவருக்கு எழுதிய மறுப்புரையில் இதனைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளார். அந்த நபர் ஷைகுல் இஸ்லாம் அவர்களைப் பற்றிக் குறிப்பிடும்போது: "இந்தக் கருத்தைக் கொண்டவர் (இப்னு தைமிய்யா) எத்தனையோ விவகாரங்களில் மார்க்க அறிஞர்களின் ஏகோபித்த கருத்தை தகர்த்துள்ளார்" என்று கூறினார். அதற்கு ஷைகுல் இஸ்லாம் அவர்கள் பல கோணங்களில் விரிவான மறுப்பை வழங்கினார்கள். அவ்வாறு வழங்கிய மறுப்புரையில் பின்வருமாறு கூறினார்கள்:
ஆறாவது: ஒருவர் அறிஞர்களின் ஏகோபித்த முடிவை மீறிவிட்டார் என்று வாதாடுபவரின் கூற்றானது, அவர் அறிஞர்களின் ஏகோபித்த முடிவுகளையும் கருத்து வேறுபாடுகளையும் ஆழமாக அறிந்தவராக இருந்தால் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும். அதற்கு மார்க்கக் கல்வியில் ஆழமான ஒரு அறிவு இருக்க வேண்டும். அது, தான் எந்த மத்ஹபைச் சார்ந்தவர் என்று கூறிக்கொள்கிறாரோ, அந்த மத்ஹபின் அடிப்படைகளையோ அல்லது அதன் அறிஞர்கள் கூறிய கருத்துகளையோ கூடத் தெரிந்து வைத்திருக்காத இந்த எதிர்ப்பாளரைப் போன்றவர்களிடம் இருக்காது. அவ்வாறிருக்க, மார்க்கச் சான்றுகளைத் தேடுவதிலும் அவற்றை எடுத்துரைப்பதிலும் இவ்வளவு குறைபாடுகளையும் அசமந்தப்போக்கையும் கொண்டுள்ள இவரைப் போன்ற ஒருவர், முஸ்லிம் அறிஞர்களின் ஏகோபித்த முடிவை எவ்வாறுதான் அறிந்துகொள்ள முடியும்?!.
ஏழாவது: (அரபியில்) 'கம்' (كم - எத்தனையோ/எவ்வளவு) என்ற சொல் எண்ணிக்கையின் மிகுதியைக் குறிக்கக்கூடியதாகும். இது, பதில் அளிப்பவர் (அதாவது ஷைகுல் இஸ்லாம் இப்னு தைமிய்யா ஆகிய நான்) அறிஞர்களின் ஏகோபித்த முடிவை மீறிய விவகாரங்கள் மிக அதிகம் என்பதை குறிக்கிறது.. ஆனால், இந்த எதிர்ப்பாளரை விட மார்க்கக் கல்வியில் மிகச் சிறந்தவர்களும், பரந்த ஞானம் உடையவர்களுமான அறிஞர்கள், நான் இஜ்மாஃவை மீறிய விவகாரங்களைக் கண்டுபிடிப்பதற்காகத் தங்களின் இறுதிவரை மிகக் கடுமையாக முயற்சி செய்தார்கள். இருப்பினும், அவர்களால் நான் இஜ்மாஃவை மீறிய ஒரேயொரு விவகாரத்தைக் கூடக் கண்டறிந்து வெற்றிபெற முடியாமல் போனது! மாறாக, அவர்களின் அதிகபட்ச நிலையே என்னவென்றால், ஒரு விவகாரத்தில் நான் இஜ்மாஃவை மீறிவிட்டேன் என்று அவர்களாகவே எண்ணிக் கொள்வதுதான். உதாரணமாக, விவாகரத்து மீது சத்தியம் செய்யும் விவகாரத்தில் அவர்களில் சிலர் அவ்வாறே எண்ணிக் கொண்டார்கள். ஆனால், அந்த விவகாரத்திலோ, மார்க்கச் சான்றுகளின் வழியாக வந்த ஏராளமான கருத்து வேறுபாடுகளும், ஃபிக்ஹ் மற்றும் ஹதீஸ் கலைகளின் அடிப்படையில் அமைந்த வலுவான சான்றுகளும் இருந்தன; அவற்றை அவர்கள் அறிந்திருக்கவில்லை.
எட்டாவது: எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே உரியது, நான் எந்தவொரு மார்க்க விவகாரத்திலும், எனக்கு முன்பே மார்க்க அறிஞர்கள் பலரால் கூறப்படாத எந்தவொரு புதிய கருத்தையும் ஒருபோதும் கூறவில்லை! ஒருவேளை, ஆய்வினடிப்படையில் ஏதேனும் ஒரு புதிய கருத்து என் சிந்தனையில் உதித்து, அது எனக்குச் சரியாகத் தோன்றினாலும் கூட, எனக்கு முன்பே மார்க்க அறிஞர்களில் எவரேனும் ஒருவர் அதனைப் பேசியுள்ளார் என்பதை நான் உறுதி செய்யும் வரை, நான் அந்தக் கருத்தைக் கூறுவதும் இல்லை; அதனை ஆதரித்து வாதிடுவதும் இல்லை. இது, இமாம் அஹ்மத் அவர்களின் “உங்களுக்கு முன்பே எந்தவொரு மார்க்க அறிஞரும் வழிகாட்டாத ஒரு விவகாரத்தைப் பற்றி நீர் பேசுவதைத் தவிர்த்துக் கொள்ளவும்” எனும் கூற்றைப் போன்றதாகும்: எனவே, மார்க்கத்தில் இத்தகைய உன்னதமான ஆய்வு நெறிமுறையைப் பின்பற்றக்கூடிய ஒருவர், எவ்வாறுதான் முஸ்லிம்களின் ஏகோபித்த முடிவை தகர்க்கும் ஒரு புதிய கருத்தைக் கூற முடியும்?! மேலும், அவர் தனக்கு முன்பே இஸ்லாமிய பேரறிஞர்கள் கூறிய கருத்துகளையே அன்றி வேறு எதனையும் கூறாதவராக இருக்கும்போது இது எப்படிச் சாத்தியமாகும்?!"
(இப்னு தைமிய்யாவின் “அர்-ரத்து அலல் அக்நாயீ” பக்கம் 457-458 இதனுடன் சுருக்கமாக நிறைவடைந்தது).
ஐந்தாவது: கேள்வி கேட்டவர் மற்றவர்களைப் பின்பற்றி எந்த விவகாரத்தில் ஷைகுல் இஸ்லாம் இப்னு தைமிய்யா அவர்கள் அறிஞர்களின் ஏகோபித்த கருத்தை மீறிவிட்டார் என்று அபாண்டமாக வாதாடுகிறாரோ, அதே விவகாரத்தில் அவருக்கு முன்பே வாழ்ந்த மார்க்கப் பேரறிஞர்கள் பலர் குறிப்பாக ஹனஃபி மத்ஹபைச் சார்ந்த இமாம்கள் இத்தகைய பிரார்த்தனை முறையைத் தடுத்து, அதனை விலக்கியுள்ளார்கள் என்பதற்கான மார்க்கப் பதிவுகள் தெளிவாக நிரூபிக்கப்பட்டுள்ளன.
அல்லாமா அல்-ஹஸ்கஃபீ(ரஹ்) அவர்கள் தமது புகழ்பெற்ற ஹனஃபி ஃபிக்ஹ் நூலான "அத்-துர்ருல் முக்தார்" (5/715) என்ற நூலில் பின்வருமாறு குறிப்பிடுகிறார்கள்:
"அல்-தாதர்கானிய்யா நூலில், 'அல்-முன்தகா' நூலை ஆதாரமாகக் கொண்டு, இமாம் அபூ யூஸுஃப் அவர்கள் இமாம் அபூ ஹனீஃபாவிடமிருந்து நிவேதனம் செய்கிறார்கள்: 'எந்தவொரு மனிதனும் அல்லாஹ்வை அவனது பெயர்களைக் கொண்டல்லாமல் வேறெதெனைக் கொண்டும் பிரார்த்திப்பது ஆகுமாகாது. மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்ட மற்றும் ஏவப்பட்ட பிரார்த்தனை என்பது அல்லாஹ்வின் பின்வரும் கூற்றிலிருந்து பெறப்பட்டதே ஆகும்: (அல்லாஹ்வுக்கு அழகிய திருநாமங்கள் உள்ளன; எனவே அவைகளைக் கொண்டே நீங்கள் அவனிடம் பிரார்த்தியுங்கள் (அல்-அஃராஃப்: 180)'."
இதே வாசகம் ஹனஃபி மத்ஹபின் மற்றொரு முக்கிய நூலான "அல்-முஹீதுல் புர்ஹானீ" (5/141) என்ற நூலிலும் இடம்பெற்றுள்ளது.
அல்லாமா அல்-காஸானீ (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் தமது "பதாஇஉஸ் ஸனாஇஃ" (5/126) என்ற நூலில் பின்வருமாறு கூறுகிறார்கள்:
"ஒரு மனிதன் தன் பிரார்த்தனையில்: 'உன்னுடைய நபிமார்கள் மற்றும் தூதர்களின் உரிமையைக் கொண்டும், இன்னாரின் உரிமையைக் கொண்டும் உன்னிடம் வேண்டுகிறேன்' என்று கூறுவது வெறுக்கத்தக்கதாகும். ஏனெனில், அல்லாஹ்வின் மீது படைப்புகளில் எவருக்கும் எவ்வித உரிமையும் கிடையாது."
இதே வாசகம் பின்வரும் உலகப் புகழ்பெற்ற ஹனஃபி மத்ஹபின் அனைத்து ஃபிக்ஹ் மற்றும் விரிவுரை நூல்களிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது: அவகளில் சில:
- தப்யீனுல் ஹகாயிக் ஷரஹ் கன்சுத் தகாயிக் - இமாம் அஸ்-ஸைலயீ (6/31): இவர் இந்தக் கருத்தை ஹனஃபி மத்ஹபின் மூன்று மாபெரும் இமாம்களான இமாம் அபூ ஹனீஃபா, மற்றும் அவரது இரு முக்கிய மாணவர்களான இமாம் அபூ யூஸுஃப், இமாம் முஹம்மத் பின் அல்-ஹஸன் ஆகிய மூவரும் சொன்னதாக சொல்கிறார்.
- அல்-இனாயா ஷரஹ் அல்-ஹிதாயா - இமாம் அல்-பாபர்தீ (10/64)
- ஃபத்ஹுல் கதீர் - இமாம் இப்னுல் ஹம்மாம் (10/64)
- துரருல் ஹுக்காம் (1/321)
- மஜ்மஉல் அன்ஹுர் ஷரஹ் முல்தகல் அபஹுர் (2/554)
ஹனஃபி மத்ஹபைச் சார்ந்த பேரறிஞர் ஸய்யித் நுஃமான் கைருத்தீன் அல்-ஆலூஸீ (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் தமது "ஜலாஉல் ஐனைன்" (516-517) என்ற நூலில் கூறுகிறார்கள்:
"ஹனஃபி மத்ஹபின் அனைத்து முக்கிய சட்டப் பாடப் புத்தகங்களிலும் பின்வருமாறு தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது: பிரார்த்தனை செய்யும்போது: 'நபிமார்கள் மற்றும் அவலியாக்களின் உரிமையைக் கொண்டும், பைத்துல்லாஹ் (கஃபா) மற்றும் மஷ்அருல் ஹராம் ஆகியவற்றின் உரிமையைக் கொண்டும் வேண்டுகிறேன்' என்று கூறுவது ஹராமுக்கு நெருக்கமான மிகக் கடுமையான வெறுப்பு ஆகும். இமாம் முஹம்மத் அவர்களின் கூற்றுப்படி, இதற்கான தண்டனை நரக நெருப்பாகும் என்பதால் இது ஹராமைப் போன்றதே ஆகும். இதற்கான காரணமாக அவர்கள் கூறுவது: 'படைத்தவன் மீது படைப்புக்கு எவ்வித உரிமையும் கிடையாது' என்பதாகும்." (முற்றிற்று).
மேலும், ஷாஃபி மத்ஹபைச் சார்ந்த அல்லாமா அஸ்-ஸுவைதீ அவர்களின் கூற்றை ஸய்யித் நுஃமான் அவர்கள் தமது "ஜலாஉல் ஐனைன்" (505) மற்றும் அதற்குப் பிந்தைய பக்கங்களில் மேற்கோள் காட்டியுள்ளதையும் நீங்கள் பார்க்கலாம்.
"மேற்கூறப்பட்ட ஏராளமான, பரவலான மார்க்க ஆதாரங்களின் மூலமும், பேரறிஞர்களின் கூற்றுகளின் மூலமும்: ஏன் ஸலபு அறிஞர்கள் இத்தகைய மார்க்க வரம்பிற்குட்பட்ட நற்செயல் அல்லாத வேண்டுதல் முறையைத் தடுக்கிறார்கள் என்பதும், மேலும் ஷைகுல் இஸ்லாம் இப்னு தைமிய்யா அவர்கள் இத்தகைய செயலை முதன்முதலில் தடுத்தவர் அல்ல என்பதும், அதேபோல அவர் இதனைத் தடுத்த இறுதி அறிஞரும் அல்லர் என்பதும் பின்வரும் விடயங்கள் உங்களுக்குத் தெளிவாகப் புலப்பட்டிருக்கும் என நம்புகிறோம்.
(கூடுதல் விபரங்களுக்கு இஸ்லாம் கேள்வி-பதில் இணையதளத்தின் ஃபத்வா எண்கள்: 979, 60041, மற்றும் 23265 ஆகியவற்றைப் பார்க்கவும்).