முதலாவதாக: அல்லாஹ்வினால் பனூஇஸ்ரவேலர்களுக்கு தூதராகவும் நபியாகவும் அனுப்பப்பட்ட ஈஸா (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் மீது ஈமான் (இறைநம்பிக்கை) கொள்வது என்பது, அல்லாஹ்வின் மீதும் அவனுடைய தூதர்கள் மீதுமான ஈமானின் ஒரு பகுதியாகும். அல்லாஹ்வின் தூதர்கள் அனைவரையும் ஈமான் கொள்ளாதவரை எவருடைய ஈமானும் செல்லுபடியாகாது. அல்லாஹ் தன் திருக்குர்ஆனில் பின்வருமாறு கூறுகிறான்: {இறை தூதர்(முஹம்மது நபி), தம் இறைவனிடமிருந்து தமக்கு இறக்கப்பட்டதை நம்புகிறார்; (அவ்வாறே) முஃமின்களும் (நம்புகின்றனர்; இவர்கள்) அனைவருமே அல்லாஹ்வையும், அவனுடைய மலக்குகளையும், அவனுடைய வேதங்களையும், அவனுடைய தூதர்களையும் நம்புகிறார்கள்: “நாம் இறை தூதர்களில் எவர் ஒருவரையும் பிரித்து வேற்றுமை பாராட்டுவதில்லை} (அல்பகரா: 285).
இமாம் இப்னு கஸீர் (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்கள்:
"நிச்சயமாக முஃமின்கள் (உண்மையான இறைநம்பிக்கையாளர்கள்), அல்லாஹ் ஒருவன், அவன் தனித்தவன், எவ்விதத் தேவையுமற்ற அதிபதி, அவனையன்றி வணக்கத்திற்கு தகுதியானவன் வேறு யாருமில்லை, அவனையன்றி படைத்துப் பரிபாலிக்கும் இறைவன் வேறு யாருமில்லை என்று விசுவாசம் கொள்கிறார்கள். மேலும், அவர்கள் இறைவனின் தூதர்களாகவும் நபிகளாகவும் அனுப்பப்பட்டவர்களையும் அவர்கள் மீது வானத்திலிருந்து இறக்கப்பட்ட அனைத்து வேதங்களையும் உண்மைப்படுத்துகிறார்கள். அவர்கள் அத்தூதர்களில் சிலரை நம்பி சிலரை நிராகரித்து அவர்களுக்கு மத்தியில் வித்தியாசம் காட்டவில்லை. மாறாக, அவர்கள் அனைவருமே உண்மையானவர்கள், நேர்மையானவர்கள், நேர்வழி பெற்றவர்கள் மற்றும் நன்மையின் பாதையை நோக்கி வழிகாட்டக் கூடியவர்கள் என்றே முஃமின்கள் கருதுகிறார்கள்” (நூல்: தப்ஸீர் இப்னு கஸீர் (1/736).
இமாம் ஸஃதி கூறுகிறார்கள்: “அல்லாஹ்வின் தூதர்களில் சிலரை மறுப்பது அனைவரையும் மறுப்பதற்கு சமம், மட்டுமல்ல அல்லாஹ்வையே மறுத்ததாக ஆகிவிடும்” (நூல்: தப்ஸீருஸ்ஸஃதி:120).
இரண்டாவதாக: மீலாது விழா (நபியவர்களின் பிறந்தநாள்) கொண்டாடுவது என்பது ஒரு மார்க்கப் புதுமையாகும் (பித்அத்). நபியவர்களோ அல்லது அவர்களுக்குப் பின்வந்த அவர்களது தோழர்களோ ஒருபோதும் இதனைச் செய்யவில்லை. மேலும், இஸ்லாமிய அறிஞர்களுள் எவரும் இந்த விழாவிற்கு அனுமதி அளித்ததாகவோ அல்லது இதனை ஒரு விரும்பத்தக்க நற்செயலாகக் கருதினார்களென்றோ எவ்வித ஆதாரமும் அறியப்படவில்லை; அப்படியிருக்க, அவர்கள் இதில் பங்கேற்பதைப் பற்றிப் பேசவே வேண்டியதில்லை. எனவே, இவை அனைத்தும் முற்றிலும் விலக்கப்பட்ட காரியமும், வெறுக்கத்தக்க மார்க்கப் புதுமையுமே (பித்அத்) ஆகும்.
‘ஃபதாவா அல்-லஜ்னா அத்து-தாயிமா’வைச் சார்ந்த அறிஞர்கள் பின்வருமாறு கூறினார்கள்:
மீலாது விழா கொண்டாடுவது என்பது மார்க்கத்தில் தடுக்கப்பட்ட ஒரு புதுமையாகும் (பித்அத்). ஏனெனில், இதற்கு அல்லாஹ்வின் வேதத்திலிருந்தோ அல்லது அவனுடைய தூதரின் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) சுன்னாவிலிருந்தோ எவ்வித ஆதாரமும் இல்லை. மேலும், நேர்வழி பெற்ற இஸ்லாமிய ஆட்சியாளர்களோ அல்லது சிறந்த நூற்றாண்டுகளைச் சேர்ந்தவர்களோ எவரும் இத்தகையதொரு செயலைச் செய்யவில்லை" (நூல்: ஃபதாவா அல்-லஜ்னா அத்து-தாயிமா, பாகம்: 2, பக்கம்: 244).
எனவே, பாமர மற்றும் அறியாமையிலுள்ள முஸ்லிம்கள் மீலாது விழா என்ற பெயரில் செய்யும் இக்கொண்டாட்டங்கள் யாவும், மார்க்கத்தில் புதிதாகத் தோற்றுவிக்கப்பட்ட—கண்டிக்கப்பட வேண்டிய மற்றும் தடுத்து நிறுத்தப்பட வேண்டிய—காரியங்களாகும். ஆகவே, மீலாது விழா கொண்டாடப்படுவதை ஆதாரமாகக் கொண்டு, கிறிஸ்துமஸ் பண்டிகையைக் கொண்டாடுவது அனுமதிக்கப்பட்டது என வாதிடுவது அடிப்படையிலேயே முற்றிலும் பிழையான வாதமாகும். ஏனெனில், மீலாது விழா கொண்டாடுவதே மார்க்கத்தில் புதிதாக உண்டாக்கப்பட்ட ஒரு புதுமையாக இருப்பதால் மார்க்கத்தில் அனுமதிக்கப்படாத ஒரு காரியமாகும்;.எனவே ஒரு மார்க்கப் புதுமையை அடிப்படையாகக் கொண்டு செய்யப்படும் மற்றொரு காரியமும், அதைப் போன்ற ஒரு புதுமையே (பித்அத்) ஆகும்.
மூன்றாவதாக: கிறிஸ்தவர்கள் 'கிறிஸ்துமஸ்' என்று கொண்டாடும் இப் பண்டிகை, மார்க்கத்தில் எவ்வித ஆதாரமும் இல்லாத ஒரு புதுமையாகவும், இணைவைப்புக் காரியமாகவும் (ஷிர்க்) உள்ளது. முஸ்லிம்கள் இதில் அவர்களுக்கு ஒப்பாக நடப்பது முற்றிலும் அனுமதிக்கப்படாத ஒன்றாகும்; மேலும், ஈஸா (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் இக் கொண்டாட்டத்தை விட்டும், இதனைச் செய்பவர்களை விட்டும் முற்றிலும் நீங்கியவர்கள் ஆவார்கள்.
இந்தக் கொண்டாட்டம் முஸ்லிம்களைப் பொறுத்தவரை—அது ஒரு மார்க்கப் புதுமையாக (பித்அத்) இருப்பதையும் ஒருபடிமேல் —மாற்று மதத்தினருக்குரிய பிரத்தியேக மார்க்க விவகாரங்களில் அவர்களுக்கு ஒப்பாக நடக்கும் ஒரு பெரும் தவறான செயலாகவும் அமைகிறது. நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) கூறினார்கள் [ஒருவர் எந்த சமூகத்திற்கு ஒப்பாகிறாரோ அவர் அந்தச் சமூகத்தைச் சார்ந்தவராகவே கருதப்படுவார்] (நூல்: அபுதாவூத்(3512), இமாம் அல்பானி அவர்கள் ஸஹிஹூ சுனனி அபிதாவூத் எனும் நூலிலே இந்த ஹதீஸ் ஸஹீஹானதென்று கூறியிருக்கிறார்,
ஷேய்ஃகுல்இஸ்லாம் இப்னுதைமியா இமாம் அவர்களும் இதன் அறிவிப்பாளர் தொடர் சிறந்தது என்று பின்வருமாறு கூறியிருக்கிறார்கள்:
“இந்த ஹதீஸின் மிகக் குறைந்தபட்ச நிலை என்னவென்றால், மாற்று மதத்தினருக்கு ஒப்பாக நடப்பது முற்றிலும் ஹராம் (விலக்கப்பட்டது) என்பதை வலியுறுத்துவதாக இருக்கிறது. அதன் வெளிப்படையான பொருள் அவர்களுக்கு ஒப்பாக நடப்பவர்களை இறைமறுப்பாளர்களாகவே (காஃபிர்களாகவே) சித்தரித்த போதிலும் சரியே! இதனை அல்லாஹ் தன் திருமறையில் பின்வருமாறு கூறியிருக்கிறான், {உங்களில் எவரேனும் அவர்களைப்(யூத, கிறிஸ்துவர்கள்) நேசர்களாக எடுத்துக் கொண்டால் நிச்சயமாக அவரும் அவர்களைச் சேர்ந்தவர் தான்} (அல்-மாயிதா: 51) (நூல்: இக்திழாஉஸ் ஸிராதில் முஸ்தகீம், பக்கம்: 82-83).
ஷேய்ஃகுல்இஸ்லாம் இப்னுதைமியா இமாம் அவர்கள் பின்வருமாறும் கூறுகிறார்கள்:
“அல்லாஹ்வின் தூய மார்க்கமும் அதன் சட்டங்களும் அழிந்துபோவதற்கும்-இறைமறுப்பு கொள்கை மற்றும் பாவங்களும் வெளிப்படுவதற்கும்- அடிப்படைக் காரணம் மாற்று மதத்தினருக்கு ஒப்பாக நடப்பதே ஆகும் என்பது உங்களுக்கு இப்போது தெளிவாகியிருக்கும். அதேபோன்று, அனைத்து நன்மைகளுக்கும் அடிப்படையாக அமைவது நபிமார்களின் வழிமுறைகளையும், அவர்கள் கொண்டு வந்த மார்க்கங்ளையும் உறுதியாகப் பேணிப் பாதுகாப்பதே ஆகும். இதனால்தான், மாற்று மதத்தினருக்கு ஒப்பாக நடக்கும் செயல் அதில் இல்லை என்றாலும் கூட, மார்க்கத்தில் புதுமைகளைப் புகுத்துவது (பித்அத் செய்வது) மிகப் பெரும் குற்றமாகக் கருதப்படுகிறது. அப்படியிருக்க, இவ்விரண்டு தீமைகளும் (பித்அத் மற்றும் மாற்று மதத்தினருக்கு ஒப்பாக நடப்பது ஆகிய இரண்டும்) ஒரு செயலில் ஒன்றாக இணைந்திருந்தால் அதன் நிலை எவ்வளவு பயங்கரமானதாக இருக்கும்?!” (நூல்: இக்திழாஉஸ் ஸிராதில் முஸ்தகீம், பக்கம்: 116).
அஷ்ஷேஃக் இப்னு உஸைமீன் கூறுகிறார்கள்:
“கிறிஸ்துமஸ் பண்டிகைக்கோ அல்லது மாற்று மதத்தினரின் வேறு எந்தவொரு மத ரீதியான பெருநாட்களுக்கோ அவர்களுக்கு வாழ்த்துத் தெரிவிப்பது என்பது, இஸ்லாமிய அறிஞர்களின் ஒருமித்த கருத்துப்படி முற்றிலும் விலக்கப்பட்டதாகும்(ஹராம்). ஏனெனில் அவ்வாறு வாழ்த்து தெரிவிப்பது அவர்கள் செய்யக்கூடிய அந்த இறை மறுப்பு செயல்களை நாம் ஏற்றுக் கொள்வதாகவும், அந்த செயல்களை தான் செய்வதை அந்த முஸ்லிம் விரும்பாவிட்டாலும், அவர்கள் அந்த செயலை செய்வதை நாங்கள் பொருந்திக் கொள்வதாகவும் அமைந்துவிடும். எனினும் இறை நிராகரிப்பின் அடையாளங்களை பொருந்தி கொள்வதும் அதற்காக பிறருக்கு வாழ்த்து தெரிவிப்பதும் முஸ்லிம்களின் மீது தடை செய்யப்பட்ட ஒன்றாகும். அதே போன்றுதான் இந்நிகழ்வுகளை முன்னிட்டு விழாக்களை ஏற்பாடு செய்தல், பரிசுகளை பரிமாறிக் கொள்ளல், உணவுத்தட்டுகள் அல்லது இனிப்பு பண்டங்கள் போன்றவற்றை பரிமாறுதல் அல்லது வேலைகளுக்கு விடுமுறை கொடுத்தல் போன்ற விடயங்களின் மூலம் அந்த இறை நிராகரிப்பாளர்களுக்கு ஒப்பாகுவதும் முஸ்லிம்கள் மீது முற்றாக தடை செய்யப்பட்ட ஒன்றாகும். நபியவர்கள் கூறினார்கள்: [ஒருவர் எந்த சமூகத்திற்கு ஒப்பாகிறாரோ அவர் அந்த சமூகத்தைச் சார்ந்தவராகவே கருதப்படுவார்].(நூல்: அபூதாவூத்)
இதுதான் அஷ்ஷேஃக் இப்னு உஸைமீன் ரஹிமகுல்லா அவர்களின் ஆய்வுக் கட்டுரைகள் மற்றும் மார்க்கத்தி தீர்ப்புகளின் தொகுப்பில் இருந்து எடுக்கப்பட்ட சுருக்கம்(3/45-46).
சுருக்கம்: ஆகவே, முஸ்லிம்கள் கிறிஸ்துமஸ் பண்டிகையைக் கொண்டாடுவதன் மூலம், அவர்களுக்குப் பல வழிகளில் மார்க்க ரீதியான தீமைகளும் கேடுகளும் ஏற்படுகின்றன என்பது திண்ணம். அவை பின்வருமாறு:
- இதில் மாற்று மத இறைமறுப்பாளர்களுக்கு ஒப்பாக நடத்தல் எனும் பெரும் தவறை உள்ளடக்கியுள்ளது. அவர்கள் அல்லாஹ்விற்கு இணைவைக்கும் (ஷிர்க்கான) மற்றும் அவனை நிராகரிக்கும் (குஃப்ருடைய) கொள்கைகளின் தூண்டுதலினாலேயே இத்தகைய விழாக்களை நடத்துகிறார்கள்; மாறாக, அல்லாஹ்வின் தூதர் ஈஸா (அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் தூய மார்க்க போதனைகளின் அடிப்படையில் அவர்கள் இதனைச் செய்யவில்லை. ஏனெனில், நாமும் அவர்களும் இந்த கொண்டாட்டங்களை அல்லாஹ்வின் தூதர் ஈஸா (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் காட்டித் தரவில்லை என்பதில் ஒருமித்த கருத்தில்தான் இருக்கிறோம். எனவே, இந்தக் கொண்டாட்டம் என்பது இணைவைப்பு (ஷிர்க்) மற்றும் மார்க்கப் புதுமை (பித்அத்) ஆகியவற்றின் ஒரு கலவையாகும். அதுமட்டுமன்றி, அனைவரும் அறிந்தபடி, இந்த விழாக்களின் போது அவர்கள் அரங்கேற்றக்கூடிய பல்வேறு வகையான ஒழுக்கக்கேடுகளும் பாவச் செயல்களும் இத்தோடு கலந்திருக்கின்றன. அப்படியிருக்க, இத்தகைய விவகாரங்களில் நாம் எவ்வாறு அவர்களுக்கு ஒப்பாக நடக்க முடியும்?.
- ஏற்கனவே சுட்டிக்காட்டப்பட்டபடி, மீலாது விழா கொண்டாடுவது என்பது மார்க்கத்தில் புதிதாகத் தோற்றுவிக்கப்பட்ட ஒரு புதுமையாகும் (பித்அத்); எனவே, அது அனுமதிக்கப்பட்ட ஒன்றல்ல. அதன் காரணமாக, இதனை மற்ற விவகாரங்களுக்கு ஆதாரமாகவோ அல்லது அளவுகோலாகவோ (கியாஸ் செய்ய) எடுத்துக்கொள்ள முடியாது. ஏனெனில், ஒப்பீட்டு ஆய்வின் விதிகளின்படி, எதன் மீது ஒப்பிடுகிறோமோ அந்த அடிப்படையே தவறானதாகிவிடும் போது, அதன் மூலம் பெறப்படும் ஒட்டுமொத்த ஒப்பீட்டு முடிவும் தவறானதாக இருக்கும்.
- கிறிஸ்துமஸ் பண்டிகையைக் கொண்டாடுவது என்பது முற்றிலும் மார்க்கத்தால் வெறுக்கப்பட்ட ஒரு பெரும் பாவச் செயலாகும்; எனவே, அது அனுமதிக்கப்பட்டது என்று ஒருபோதும் கூற முடியாது. ஏனெனில், அதன் அடிப்படையே முற்றிலும் தவறானதாகும். ஏனெனில் அங்கு இறைமறுப்பு (குஃப்ரு), ஒழுக்கக்கேடுகள் மற்றும் மார்க்க வரம்புகளை மீறும் பாவச் செயல்கள் நிறைந்துள்ளன. இத்தகைய தீமைகள் மலிந்துள்ள ஒரு விவகாரத்தை, வேறெந்தவொரு நல்ல காரியத்தோடும் ஒப்பிட்டுப் பார்ப்பது (கியாஸ் செய்வது) எவ்விதத்திலும் செல்லுபடியாகாது. மேலும், இதனை அனுமதிக்கலாம் என்று சொல்வது எந்தச் சூழ்நிலையிலும் எத்தகையதொரு மார்க்க ஆய்வுக் கோட்பாட்டிற்குள்ளும் அடங்காது.
- இந்தத் தவறான ஒப்பீட்டை (கியாஸ்) சரி என்று ஏற்றுக்கொண்டால், அதை நாம் மற்றவற்றிற்கும் பொதுவாக்க வேண்டும். அதன் அடிப்படையில் நாம் ஏன் ஒவ்வொரு இறைத்தூதருடைய பிறந்தநாளையும் கொண்டாடக் கூடாது? அவர்களும் அல்லாஹ்வினால் அனுப்பப்பட்ட நபிகள் தானே?! ஆனால் யாருமே அவ்வாறு சொல்வதோ செய்வதோ இல்லை.
- நிச்சயமாக, நபிமார்களில் எவருடைய பிறந்த தேதியையும் மிகத் துல்லியமாகக் கண்டறிவது என்பது முற்றிலும் சாத்தியமற்ற ஒன்றாகும். ஏன், நமது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் பிறந்த நாள் கூட ஆதாரப்பூர்வமாகத் தெளிவாக அறியப்படவில்லை. அவர்கள் பிறந்த தேதியைக் குறிப்பதில் வரலாற்று ஆசிரியர்களுக்கு இடையே ஒன்பது அல்லது அதற்கும் மேற்பட்ட பல்வேறு கருத்து வேறுபாடுகள் நிலவுகின்றன. எனவே, இந்த மீலாது விழா கொண்டாட்டத்தின் பின்னணி என்பது வரலாற்று ரீதியாகவும், மார்க்கச் சட்ட ரீதியாகவும் முற்றிலும் செல்லாததாகிவிடுகிறது. ஒட்டுமொத்தமாகப் பார்க்கும் போது, நமது நபியவர்களின் பிறப்பாக இருக்கட்டும் அல்லது அல்லாஹ்வின் தூதர் ஈஸா (அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் பிறப்பாக இருக்கட்டும், எதற்குமே மார்க்கத்தில் எவ்வித அடிப்படை ஆதாரமும் இல்லை.
ஷேஃக் இப்னு உஸைமீன் (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்கள்:
“நபியவர்களின் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) பிறந்தநாள் இரவைக் கொண்டாடுவது என்பது, வரலாற்று ரீதியாகவும் சரி, அல்லது மார்க்கச் சட்ட ரீதியாகவும் சரி, எவ்விதத்திலும் செல்லுபடியாகக் கூடியது அல்ல” (நூல்: ஃபதாவா நூருன் அலத்-தர்ப், பாகம்: 19, பக்கம்: 45).