ஒருவர் தன் தோழரை அஹ்லுஸ் சுன்னா வல் ஜமாஅத்தின் நேர்வழிப் பாதையின் பால் எவ்வாறு அழைக்க வேண்டும்?

கேள்வி 75099

"எனக்கு நெருக்கமான ஒரு முஸ்லிம் சகோதரரை நான் எவ்வாறு சுன்னாவின் பால் அழைக்க வேண்டும்? அவர் ஸூஃபி சிந்தனை உடையவராக இருந்தாலும், எனக்குப் பல்வேறு உதவிகள் மற்றும் நன்மைகளை செய்துள்ளார். அவர் தொடர்ந்து ஸூஃபித்துவ அறிஞர்களின் மார்க்க வகுப்புகளில் கலந்துகொள்பவராகவும் இருக்கிறார்.

மேலும், இந்த விவகாரத்தில் எனக்கு ஆதரவாக நின்று வழிகாட்டக்கூடிய அஹ்லுஸ் சுன்னா அறிஞர்கள் எவரும் எனது பகுதியில் இல்லை. ஸூஃபித்துவக் கொள்கையில் இருப்பவர்களை, குறிப்பாக அவர்கள் வாழும் அதே சூழலில் வைத்து அவர்களின் கொள்கையை மாற்றுவது எவ்வளவு கடினமானது என்பதை நீங்கள் அறிவீர்கள். அதுமட்டுமன்றி, அவர் ஸலஃப் கொள்கையில் இருப்பவர்களை ‘பிறரை காஃபிர் என்று முத்திரை குத்துபவர்கள்’ என்றும், இன்னும் பலவாறாகவும் குற்றம்சாட்டுகிறார். இத்தகைய சூழலில் நான் அவருக்கு எவ்வாறு தஃவா செய்ய வேண்டும்?"

பதில்

அல்லாஹ்வுக்கே புகழும், இறைவனின் தூதர் மீது பிரார்த்தனையும் சாந்தியும் உண்டாகட்டும்,

"மார்க்க விவகாரங்களில் உங்களது சகோதரர் மீது நீங்கள் கொண்டுள்ள அக்கறைக்காகவும், அவரைத் தொடர்ந்து கண்காணித்து வழிகாட்டுவதற்காகவும் அல்லாஹ் உங்களுக்கு மிகச் சிறந்த நற்கூலியை வழங்க வேண்டுமெனப் பிரார்த்திக்கிறோம். மெய்யாகவே, ஓர் அடியானின் உள்ளத்தை அவனது பாதையின் பால் அழைப்பதிலும், நன்மையை ஏவித் தீமையைத் தடுப்பதிலும் எப்போதும் துடிப்புடன் வாழ வைப்பது என்பது அல்லாஹ் தன் அடியானுக்கு வழங்கக்கூடிய மாபெரும் அருட்கொடைகளில் ஒன்றாகும்.

மேலும், அல்லாஹ்வின் பாதையின் பால் அழைக்கக்கூடிய ஒரு மார்க்க அழைப்பாளருக்கு, அவரது அழைப்புப் பணியில் தெளிவான மார்க்க அறிவும் ஞானமும் மிக அவசியமானவையாகும்.

இமாம் இப்னு உஸைமீன் (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் குறிப்பிட்டுள்ளதாவது:

'விழிப்புணர்வும் மார்க்க வைராக்கியமும் கொண்டு அல்லாஹ்வின் பாதையின் பால் அழைக்கக்கூடிய இஸ்லாமிய இளைஞனே! அல்லாஹ் தஆலாவின் பின்வரும் வசனத்தை ஆழமாகச் சிந்தித்துப் பாருங்கள்: { (நபியே!) கூறுவீராக: ‘‘இதுவே எனது (நேரான) வழி. நான் (உங்களை) அல்லாஹ்வின் பக்கம் அழைக்கிறேன், தெளிவான ஆதாரத்தின் மீதே நானும் என்னைப் பின்பற்றியவர்களும் இருக்கிறோம். (இணை துணைகளை விட்டு) அல்லாஹ் மிகப் பரிசுத்தமானவன். ஆகவே, நான் (அவனுக்கு) இணைவைப்பவர்களில் உள்ளவன் இல்லை } (சூரா யூஸுஃப்: 108).

இதன் பொருள்: நீங்கள் எதன் பக்கம் அழைக்கிறீர்களோ அது குறித்த தெளிவான அறிவைப் பெற்றிருத்தல், நீங்கள் அழைக்கக்கூடிய நபரின் நிலை என்ன என்பதைப் பற்றிய தெளிவான அறிவைப் பெற்றிருத்தல் மற்றும் அழைப்புப் பணியை மேற்கொள்ளும் விதம் குறித்த தெளிவான அறிவைப் பெற்றிருத்தல் என்பதாகும். ஆகவே, அங்கு கண்டிப்பாகப் பேணப்பட வேண்டிய நிபந்தனைகள் சில உள்ளன; அவற்றுள் சில:

முதலாவதாக: தான் அழைக்கக்கூடிய விவகாரத்தில் தெளிவான மார்க்க அறிவைப் பெற்றிருத்தல்; அதாவது, ஒருவர் எதனை ஏவுகிறாரோ அதன் மார்க்கச் சட்டத்தை அவர் துல்லியமாக அறிந்திருக்க வேண்டும். ஏனெனில், மார்க்கத்தில் கடமையல்லாத ஒரு விஷயத்தைத் தன் எண்ணப்படி கடமை என்று எண்ணி, அதன் பக்கம் அவர் மக்களை அழைக்கக்கூடும்; இதன் மூலம் அல்லாஹ்வின் அடியார்கள் மீது அல்லாஹ் கடமையாக்காத ஒன்றை அவர் கட்டாயமாக்கிய குற்றத்திற்கு ஆளாவார். அதேபோல, அல்லாஹ்வின் மார்க்கத்தில் விலக்கப்பட்டதல்லாத ஒரு விஷயத்தைத் தன் எண்ணப்படி ஹராம் என்று எண்ணி, அதைத் தவிர்க்குமாறு அவர் மக்களை அழைக்கக்கூடும்; இதன் மூலம் அல்லாஹ் தன் அடியார்களுக்கு அனுமதித்த ஒன்றை அவர் ஹராமாக்கிய குற்றத்திற்கு ஆளாவார்.

இரண்டாவதாக: நீங்கள் அழைக்கக்கூடிய நபரின் நிலை குறித்துத் தெளிவாக அறிந்திருத்தல்: உங்களால் அழைக்கப்படுபவரின் நிலை என்ன என்பதை நீங்கள் கண்டிப்பாக அறிந்திருக்க வேண்டும். அவரது மார்க்க அறிவுத்திறன் எந்த அளவில் உள்ளது? விவாதிப்பதில் அவரது ஆளுமை எந்த அளவில் உள்ளது? இவற்றை முன்கூட்டியே நீங்கள் அறிந்து ஆயத்தமானால் மட்டுமே அவருடன் கலந்துரையாடவும் விவாதிக்கவும் முடியும். ஏனெனில், விவாதத் திறமை மிக்க ஒருவருடன் எவ்விதத் தயாரிப்பும் இன்றி நீங்கள் விவாதத்தில் ஈடுபட்டு, அவரது வலுவான தர்க்க திறமையின் காரணமாகச் சத்தியம் தோற்றுப்போவது போன்றதொரு தோற்றம் ஏற்பட்டால், அது சத்தியத்திற்கு ஏற்படும் மாபெரும் பின்னடைவாக அமைந்துவிடும்; அதற்கு நீங்களே காரணியாகவும் ஆகிவிடுவீர்கள். அசத்தியத்தைக் கொண்டிருப்பவன் எல்லாச் சூழலிலும் தோற்றுப்போவான் என்று நீங்கள் எண்ணிவிடக் கூடாது.

மூன்றாவதாக: அழைப்புப் பணியை மேற்கொள்ளும் விதம் குறித்த தெளிவான அறிவைப் பெற்றிருத்தல்: எனது அழைப்பாளர் சகோதரர்கள் அனைவரும் மார்க்கப் பணியில் ஞானத்தையும், பொறுமையையும் கையாளுமாறு நான் பெரிதும் வலியுறுத்துகிறேன். அல்லாஹுதஆலா திருக்குர்ஆனில் இவ்வாறு குறிப்பிடுவதை அவர்கள் நன்கறிவார்கள்: {அவன் தான் நாடியவர்களுக்கு ஞானத்தை வழங்குகிறான்; மேலும் எவருக்கு ஞானம் வழங்கப்படுகிறதோ, நிச்சயமாக அவர் மிக அதிகமான நன்மைகளைப் பெற்றுக் கொண்டவராவார்; எனினும் அறிவுடையோரைத் தவிர வேறு எவரும் (இதனைச் சிந்தித்து) நல்லறிவு பெறுவதில்லை.} (சூரா அல்-பகரா: 269).' (முற்றிற்று.)

(நூல்: ஃபதாவா அல்-ஹரமுல் மக்கி - பக்கங்கள்: 1063-1066 சுருக்கமாக).

இங்கு நீங்கள் சில மிக முக்கிய விவகாரங்களைக் குறித்துக் கண்டிப்பாக விழிப்புடன் இருக்க வேண்டும்:

முதலாவதாக:

ஒட்டுமொத்தமாக பொதுப்படையாகப் பேசும் முறையைக் கையாளுவதைத் தவிர்த்துக்கொள்ளுங்கள். அதாவது, ஸூஃபித்துவத்தின் அடிப்படைக் கோட்பாடே பித்அத் மற்றும் வழிகேடு என்றோ, அல்லது ஸூஃபிகள் அனைவரும் வழிகெட்டவர்கள் என்றோ ஒட்டுமொத்தமாகத் தீர்ப்பு வழங்கக் கூடாது. மாறாக, உங்களது வார்த்தைகளில் மிகுந்த பேணுதல்தன்மையைக் கடைபிடிக்க வேண்டும். உதாரணமாக அவரிடம் பேசும்போது: "ஸூஃபிகளிலோ அல்லது பிறரிலோ எவர் இப்படிச் செய்தாரோ அல்லது இப்படிக் கூறினாரோ அவர் பித்அத்தில் வீழ்ந்துவிட்டார்" என்பது போன்ற நுனுக்கமான வாசகங்களைப் பயன்படுத்த வேண்டும்.

மார்க்க அறிஞர்கள் ஒட்டுமொத்த ஸூஃபித்துவத்தையும் வழிகேடு என்று தீர்ப்பளிக்கவில்லை; மாறாக, அவர்கள் ஸூஃபித்துவத்தைப் பல பிரிவுகளாகப் பிரித்து, அவற்றுள் சுன்னாவிற்கு உடன்படுபவை எவை, சுன்னாவிற்கு முரண்படுபவை எவை என்பதைத் தெளிவுபடுத்தியுள்ளனர்.

பேரறிஞர் ஷேக் முஹம்மத் பின் இப்ராஹீம் (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் குறிப்பிட்டுள்ளதாவது:

"ஸூஃபிகள் இரண்டு பிரிவுகளாக உள்ளனர்: சுன்னாவைப் பின்பற்றும் ஸூஃபிகள், மற்றும் பித்அத் வாதிகளான ஸூஃபிகள். இவர்களுள் நடுநிலைமையான போக்கைக் கொண்டவர்களிடம் மிகச் சிறிய அளவிலான பித்அத்துகளே காணப்படுகின்றன. ஆனால், சிலரிடம் மிக மோசமான பித்அத்துகள் இருக்கின்றன; அவர்கள் இந்த ஸூஃபித்துவத்தை 'வஹ்ததுல் வுஜூத்' (அனைத்தும் இறைவனே என்ற வழிகேட்டுக் கொள்கை) எனும் பாதாளத்திற்குள் நுழைவதற்கான ஒரு வாசலாக ஆக்கிக் கொண்டனர்."
(நூல்: மஜ்மூஉல் ஃபதாவா இப்னு இப்ராஹீம் - பாகம்: 1, எண்: 192).

எனினும், தற்கால சூழலில் வாழும் பெரும்பாலான ஸூஃபிகள் பித்அத்துகளிலும் வழிகேடுகளிலும் வீழ்ந்து கிடக்கிறார்கள் என்பதுதான் யதார்த்தம்.

நீங்கள் உங்களது தோழரிடம் உரையாடத் தொடங்கும்போது இந்த நடுநிலையான அணுகுமுறையைக் கையாள்வதே உகந்ததாகும். இதன் மூலம், உங்களது தோழர் பின்பற்றும் ஸூஃபித்துவ கருத்துக்களைத் திருக்குர்ஆன் மற்றும் சுன்னாவின் வரம்புகளுக்குக் கொண்டு வந்து அளவிட முடியும்; அதில் சத்தியம் இருந்தால் அல்ஹம்துலில்லாஹ் (ஏற்றுக்கொள்ளலாம்), அசத்தியம் இருந்தால் அல்லாஹ்வின் நாட்டம் இருந்தால் அவர் அதிலிருந்து விலகித் திரும்பிவிடுவார்.

இரண்டாவதாக:

அவர் அவர் ஸலஃப் கொள்கையில் இருப்பவர்களை ‘பிறரை காஃபிர் என்று முத்திரை குத்துபவர்கள்’ என்று குற்றம்சாட்டுவதைப் பொறுத்தவரை, இது நாம் மிக அதிகமாகச் செவியுற்ற ஒரு பொதுவான அவதூறாகும். மெய்யாகவே, ஒருவரை காஃபிர் என்று நிரூபிப்பதற்கான திட்டவட்டமான மார்க்க சான்றுகள் இருக்கும்போது அவரை அவ்வாறு தீர்ப்பளிப்பது மார்க்கத்தில் எவ்விதக் குறையோ அல்லது தவறோ அல்ல. மாறாக, ஒருவரை காஃபிர் என்று நிரூபிப்பதற்கான திட்டவட்டமான சான்றுகள் இருந்தும் அவரை காஃபிர் என்று ஏற்க மறுப்பதுதான் உண்மையான குறையும் தவறுமாகும்.

ஸலஃபி கொள்கையோடு தங்களை இணைத்துக் கொண்ட சிலர், அவசரப்பட்டுப் பிறரை காஃபிர் என்று வர்ணிக்கும் போக்கில் சற்றே மெத்தனமாக நடந்துகொண்டனர் என்பதை நாம் மறுக்கவில்லை. ஆனால், இது ஒருபோதும் அஹ்லுஸ் சுன்னா வல் ஜமாஅத்தின் தூய வழிமுறை ஆகாது. அஹ்லுஸ் சுன்னா அறிஞர்கள் ஒரு முஸ்லிம் செய்த பாவத்தின் காரணமாக மட்டுமே—அப்பாவம் எவ்வளவு பெரிய பெரும்பாவமாக இருந்தாலும் சரி—அவரை மார்க்கத்தை விட்டும் வெளியேறிய காஃபிர் என்று தீர்ப்பளிப்பதில்லை. மாறாக, அந்தச் செயல் மார்க்கத்தை அடியோடு முறிக்கக்கூடிய குஃப்ர் என்பதற்கான திட்டவட்டமான சான்றுகள் இருக்க வேண்டும்; அதன் பின்னர் அவரிடம் அதற்கான நிபந்தனைகள் அனைத்தும் முழுமையாகப் பூர்த்தியாகி, அவரைப் பாதுகாக்கும் மார்க்கச் சந்தேகங்கள் அனைத்தும் நீக்கப்பட்ட பிறகே அவர் காஃபிர் என்று தனிப்பட்ட ஒருவரின் விடயத்தில் தீர்ப்பளிக்க முடியும்.

ஷைகுல் இஸ்லாம் இப்னு தைமிய்யா (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார்கள்:

"அஹ்லுஸ் சுன்னா வல் ஜமாஅத்தின் தூய கொள்கையாவது: அவர்கள் கிப்லாவை நோக்கித் தொழக்கூடிய (முஸ்லிம்களான) எவரையும் அவர்கள் செய்த பாவங்களின் காரணமாகவோ அல்லது அவர்கள் செய்த தவறான மாற்று விளக்கங்களின் காரணமாகவோ காஃபிர் என்று தீர்ப்பளிப்பதில்லை. மாறாக, ஒரு குறிப்பிட்ட தனிமனிதரிடம் நன்மைகளும் தீமைகளும் கலந்து காணப்பட்டால், அவரது விவகாரம் அல்லாஹ்விடமே ஒப்படைக்கப்படும்."
(நூல்: மஜ்மூஉல் ஃபதாவா - பாகம்: 27, பக்கம்: 478).

மேலும் அவர்கள் (ரஹிமஹுல்லாஹ்) குறிப்பிட்டுள்ளதாவது:

"முஸ்லிம்களில் எவரேனும் தவறே செய்திருந்தாலும், அவர் மீது (மார்க்கத்தின் தெளிவான) சான்றுகள் நிரூபிக்கப்பட்டு, நேர்வழி அப்பட்டமாகத் தெளிவுபடுத்தப்படும் வரை அவர் மீது ‘இறை மறுப்பு’ முத்திரை குத்த எவருக்கும் எவ்வித உரிமையும் இல்லை. ஒருவரது இஸ்லாம் உறுதியான ஆதாரத்தின் அடிப்படையில் நிலைபெற்றுவிட்டால், அது வெறும் சந்தேகங்களின் அடிப்படையில் அவரை விட்டும் நீங்கிவிடாது. மாறாக, சான்றுகள் நிரூபிக்கப்பட்டு, அவரிடமுள்ள ஐயங்கள் அனைத்தும் அடியோடு களையப்பட்ட பிறகே அது நீங்கும்."
(பார்க்க: மஜ்மூஉல் ஃபதாவா - பாகம்: 12, பக்கம்: 466).

சுன்னாவின் இமாம்கள் தங்களுக்கு மாறுபட்ட கொள்கையைக் கொண்ட எதிர்த்தரப்பினர் தங்களைக் காஃபிர் என்று தீர்ப்பளித்த போதிலும், தாங்கள் அவர்களைக் காஃபிர் என்று தீர்ப்பளிப்பதில்லை என்ற உன்னத நடுநிலையை விளக்கி ஷைகுல் இஸ்லாம் அவர்கள் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது:

"சுன்னா வல் ஜமாஅத்தின் இமாம்களிடமும், கல்வி மற்றும் ஈமான் கொண்ட நல்லடியார்களிடமும் எப்போதும் மார்க்க அறிவு, நீதி மற்றும் அளவற்ற கருணை ஆகியவை குடிகொண்டிருக்கும். அவர்கள் சுன்னாவிற்கு உடன்பட்டு பித்அத்துகளிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ளக்கூடிய சத்தியத்தை நன்கு அறிந்திருப்பர்; அதேநேரம் தனக்கு மாறுபட்டவர்கள் தங்களுக்கு அநீதி இழைத்தாலும், அவர்கள் மீதும் நீதியுடனேயே நடப்பர். அல்லாஹுதஆலா கூறுவதைப் போல: {இறைநம்பிக்கை கொண்டவர்களே! நீதியை நிலைநாட்டுவதற்காக அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டு நேர்மையாகச் சாட்சியம் கூறுபவர்களாக இருங்கள்; ஒரு சமூகத்தார் மீது உங்களுக்குள்ள பகைமை, நீங்கள் நீதியாக நடப்பதைத் தடுத்துவிட வேண்டாம். நீங்கள் நீதியாகவே செயற்படவும்; அதுவே இறையச்சத்திற்கு மிக நெருக்கமானதாகும்.' (சூரா அல்-மாயிதா: 8).

அவர்கள் ஒட்டுமொத்தப் படைப்பினங்கள் மீதும் பெருங்கருணை கொண்டு, அவர்களுக்கு நன்மையையும், நேர்வழியையும், மார்க்கக் கல்வியையுமே நாடுவார்களே தவிர, அவர்களுக்கு எவ்விதத் தீமையையும் நாட மாட்டார்கள்... இதனால்தான், கல்வி மற்றும் சுன்னாவின் காவலர்கள் தங்களுக்கு மாறுபட்டவர்கள் தங்களைக் காஃபிர் என்று தீர்ப்பளித்த போதிலும், தாங்கள் அவர்களைக் காஃபிர் என்று தீர்ப்பளிப்பதில்லை. ஏனெனில், குஃப்ர் என்பது (மனோ இச்சையின்படி தீர்மானிப்பதல்ல, மாறாக அது முற்றிலும் அல்லாஹ்வினால் தீர்மானிக்கப்படும்) ஒரு மார்க்கத் தீர்ப்பாகும்.
(பார்க்க: அர்-ரத்து அலல் பக்ரி - பக்கங்கள்: 256-258).

மூன்றாவதாக:
உங்களது தோழரை நேர்வழியின் பால் ஈர்ப்பதற்கும், அவரின் ஐயங்களுக்கு உரிய மார்க்கப் பதில்களை வழங்குவதற்கும் தேவையான அளவு போதுமான மார்க்க அறிவு உங்களிடம் இல்லை என்று நீங்கள் கருதினால், பயனுள்ள நல்ல மார்க்க நூட்கள் மற்றும் அவசியமான ஆதாரப்பூர்வமான உரைப்பதிவுகள் ஆகியவற்றின் வாயிலாக அவரிடம் நீங்கள் சத்தியத்தைக் கொண்டு சேர்க்கலாம். அல்லது உங்களுடைய நாட்டிலோ அல்லது பிற நாடுகளிலோ வாழக்கூடிய (அஹ்லுஸ் சுன்னா) மார்க்க அறிஞர்களிடம் அவரை நேரடியாக அழைத்துச் சென்று, அவர்களின் வாயிலாக மார்க்க விளக்கங்களைப் பெறவும், அவரிடம் இருக்கும் கேள்விகளைக் கேட்டுத் தெளிவுபெறவும் நீங்கள் முயற்சிக்கலாம். அல்ஹம்துலில்லாஹ், தற்காலத்தில் இத்தகைய நன்மையான வழிகள் அனைத்தும் அனைத்து மக்களுக்குமே மிக எளிதாகக் கிடைக்கக்கூடியதாக அமைந்துள்ளன. எனவே, இந்த முயற்சிகளுள் எதனையும் நீங்கள் ஒருபோதும் குறைத்து மதிப்பிட்டுவிட வேண்டாம்; ஏனெனில் நீங்கள் அவருக்கு அன்பளிப்பாக வழங்கக்கூடிய ஒரேயொரு உரைப்பதிவு கூட அவரது நேர்வழிக்குக் காரணமாக அமையக்கூடும்.

நான்காவதாக:

 உங்களது பிரச்சாரப் பணி எவ்வளவு நீண்ட காலத்திற்கு நீடித்தாலும் சரி, அவரது நேர்வழிக்காகவும் அவரை அழைப்பதிலும் முயற்சி செய்வதில் நீங்கள் ஒருபோதும் விரக்தி அடைந்துவிடக் கூடாது. ஏனெனில், மனிதர்களில் எத்தனையோ நபர்கள் பல வருடத் தொடர் அழைப்புப் பணி மற்றும் அறிவுரைகளுக்குப் பின்னரே தங்களின் தவறுகளை உணர்ந்து, தவ்பா செய்து சத்தியத்தின் பக்கம் திரும்பியுள்ளனர்.

அல்லாஹ்வே மிக அறிந்தவன்.

மூலநூட்கள்

பித்ஆ
முஸ்லிம்களுக்கான அழைப்புப் பணி

மூலம்

இஸ்லாம் கேள்வி பதில் இணையதளம்

at email

செய்திமடல்

தள செய்திகள் மற்றும் அவ்வப்போது புதுப்பிப்புகளைப் பெற அஞ்சல் பட்டியலில் இணையவும்

phone

இஸ்லாம் கேள்வி பதில் செயலி

உள்ளடக்கத்தை விரைவாக அணுகவும் ஆஃப்லைன் உலாவலுக்கும்

download iosdownload android