அவர்கள் பள்ளவாசலில் நபியவர்களைப் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) பற்றிப் பேசுவதற்கென ஒரு குறிப்பிட்ட நாளைத் தேர்ந்தெடுத்து, அதற்கு 'மவ்லித்' என்று பெயரிடுகிறார்கள்.

கேள்வி 117651

நபியவர்களின் பிறந்தநாளைக் கொண்டாடுவது ஒரு மார்க்கப் புதுமை (பித்அத்) என்பது பரவலாக அறியப்பட்ட ஒன்றாகும். இருப்பினும், பலர் நபியவர்களின் பிறந்தநாளைக் கொண்டாடும் நோக்கத்தில் அல்லாமல், மாறாக அவர்களைப் பற்றியும் அவர்களின் வாழ்க்கை வரலாற்றைப் பற்றியும் மக்களுக்கு அறிமுகப்படுத்துவதற்காக மீலாதுவிழா நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்கிறார்கள். இத்தகையதொரு நிகழ்ச்சி நபியவர்கள் பிறந்த குறிப்பிட்ட நாளில் அல்லாமல் வேறு நாளில் நடத்தப்பட்டால், அதுவும் மார்க்கத்தில் (ஹராம்) விலக்கப்பட்டதாகுமா? மேலும், 'மவ்லித்' என்ற வார்த்தையைப் பயன்படுத்துவது மட்டுமே இந்த நிகழ்ச்சியை ஹராமாக மாற்றுகிறதா? உதாரணத்திற்கு, நான் நபியவர்களின் வாழ்க்கை வரலாறு போன்றவற்றை மக்களிடம் அறிமுகப்படுத்தும் போது, அதனுடன் 'மவ்லித்' என்ற வார்த்தையை இணைக்காமல் இருந்தால், அதுவும் ஹராமாகிவிடுமா? அதேபோன்று, இந்நிகழ்ச்சியின் போது மக்களுக்கு உணவளிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. நான் இந்தக் கேள்வியைக் கேட்பதற்குக் காரணம்: அடுத்த வார இறுதியில் சனிக்கிழமையன்று ஒரு புதுமணத் தம்பதியின் திருமண வரவேற்பு விருந்து (வலீமா) நடைபெற உள்ளது. அங்கு மக்கள் ஒன்று கூடுவதால், இரவு உணவிற்குப் பிறகு பள்ளவாசலில் நபியவர்களைப் பற்றி மக்களுக்கு அறிமுகப்படுத்த வீட்டு உரிமையாளர்கள் (மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் முகமாக) முடிவு செய்துள்ளனர். இதற்கு அவர்கள் 'மவ்லித்' என்று பெயரிட்டுள்ளனர். ஆனால், இந்த நாள் நபியவர்கள் பிறந்த நாளுடன் ஒத்துப் போகவில்லை, மேலும் நபியவர்களின் பிறந்தநாளைக் கொண்டாடும் நோக்கமும் இதில் இல்லை. மாறாக, (திருமண வீடுகளில் வழக்கமாக நடக்கும்) ஆடல் பாடல்களுக்குப் பகரமாக, மக்கள் நபியவர்களின் வாழ்க்கை வரலாற்றை அறிந்து அதன் மூலம் அதிகப் பயன் பெற வேண்டும் என்பதற்காகவே இதைச் செய்கிறார்கள். எனவே, இது குறித்த மார்க்கத் தெளிவை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இரண்டாவதாக: நான் பள்ளவாசலில் ஒரு கூட்டத்தைக் கூட்டி, அதில் நபியவர்களின் வாழ்க்கை வரலாற்றை மக்களுக்கு அறிமுகப்படுத்துவதையும், வந்திருப்பவர்களுக்கு உணவளிப்பதையும் மட்டுமே நோக்கமாகக் கொண்டிருந்தால், அதுவும் ஹராமாகுமா?.

பதில்

அல்லாஹ்வுக்கே புகழும், இறைவனின் தூதர் மீது பிரார்த்தனையும் சாந்தியும் உண்டாகட்டும்,

மார்க்கச் சட்டங்களில் இதற்கான எவ்வித அனுமதியும் வராததன் காரணமாக, நபிமார்களாக இருந்தாலும் சரி அல்லது அவர்கள் அல்லாத வேறு மனிதர்களாக இருந்தாலும் சரி, எவருடைய பிறந்தநாளைக் கொண்டாடுவதும் இஸ்லாமிய மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்ட காரியம் அல்ல. மாறாக, இந்த வழக்கமானது முஸ்லிமல்லாத யூதர்கள், கிறிஸ்தவர்கள் மற்றும் இதர மாற்று மதத்தினரிடமிருந்தே எடுக்கப்பட்ட ஒரு காரியமாகும்.

இது குறித்த கூடுதல் விபரங்களுக்குக் கேள்வி எண்கள்: (10070) மற்றும் (13810) ஆகியவற்றின் பதில்களைப் பார்வையிடவும்."

"மேலும், ‘பிறந்தநாள் கொண்டாட்டம்’ என்பதன் உண்மையான அர்த்தம் என்னவென்றால்: ஒரு குறிப்பிட்ட மனிதர் பிறந்த அதே நாளில் விழா எடுப்பதாகும். உதாரணத்திற்கு, ரபியுல் அவ்வல் மாதம் 12 ஆம் நாளை நபியவர்களின் பிறந்த நாளாகச் சிலர் கருதுவதால், அதே நாளில் விழாக்கொண்டாட்டங்களை நடத்துவதைப் போன்றதாகும்.

ஆனால், நபியவர்களைப் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) பற்றிப் பேசுவது, அவர்களை மக்களுக்கு அறிமுகப்படுத்துவது, அவர்களுடைய நற்பண்புகள் , அழகிய ஒழுக்கங்கள் மற்றும் வழிமுறைகளை நினைவு கூறுவது என்பது, எல்லா காலங்களிலும் செய்யப்பட வேண்டிய மிக உன்னதமான மார்க்க ரீதியான காரியமாகும். எப்படி ஒரு திருமணக் கொண்டாட்டத்தை 'மவ்லித்' என்று அழைக்க மாட்டோமோ, அதே போன்று இத்தகைய நற்போதனை உரைகளையும் 'மவ்லித்' என்று அழைக்கக் கூடாது. இருப்பினும், சில முஸ்லிம் நாடுகளில், ஆடல், பாடல் மற்றும் ஆண், பெண் கலப்பு போன்ற மார்க்கத் தவறுகள் இல்லாத, அனுமதிக்கப்பட்ட முறையில் நடத்தப்படும் அனைத்துக் கொண்டாட்டங்களையும் 'மவ்லித்' என்று அழைக்கும் வழக்கம் பரவலாகக் காணப்படுகிறது. உதாரணத்திற்கு, அவர்கள் ஒரு திருமண நிகழ்வையோ அல்லது ஒரு குழந்தைக்கு விருத்தசேதனம் (கத்னா) செய்யும் நிகழ்வையோ , 'நாங்கள் ஒரு மவ்லித் நடத்துகிறோம்' என்று கூறிவிட்டு, அங்கு மக்களுக்கு அறிவுரை  கூறுபவர் ஒருவரோ அல்லது குர்ஆன் ஓதுபவர் ஒருவரோ வந்து தமது உரைகளை நிகழ்த்துவர். இத்தகைய நிகழ்வுகளுக்கு (மவ்லித் என்று) பெயரிடுவதற்கு எவ்வித அடிப்படையும் இல்லை; எனினும், அவர்கள் இந்நிகழ்வுகளுக்கு இந்தப் பெயரைச் சூட்டியதற்காக அதன் சட்டம் மாறிவிடாது. எனவே, மக்கள் ஒரு திருமண விழாவைக் கொண்டாடுவதிலோ, அதில் மக்களுக்கு நற்போதனை வழங்கி நன்மையை நினைவூட்டும் உரைகளை நிகழ்த்துவதிலோ, அல்லது நபியவர்களைப் பற்றிப் பேசி அவர்களுடைய வாழ்க்கை வரலாறு (ஸீரா) மற்றும் நற்பண்புகளை விவரிப்பதிலோ மார்க்க ரீதியாக எவ்விதத் தவறும் இல்லை. நிச்சயமாக இது மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்ட ஒரு நல்ல காரியமாகும்; இது புதிதாக உண்டாக்கப்பட்ட மீலாது விழா (மவ்லித்) கொண்டாட்டத்திற்குள் ஒருபோதும் அடங்காது.

அதேபோன்று, ஒரு குறிப்பிட்ட நாளுக்கு மார்க்க ரீதியான சிறப்பு இருப்பதாக நம்பி, அதற்கென ஒரு நாளைப் பிரத்தியேகமாக ஒதுக்காமல்—உதாரணத்திற்கு, மீலாது விழா நாள், ஷஃபான் மாதத்தின் நடுப்பகுதி அல்லது இஸ்ராஃ மற்றும் மிஃராஜ் போன்ற நாட்களைத் தேர்ந்தெடுக்காமல்—சாதாரண நாட்களில் ஏதேனும் ஒரு நாளில் நபியவர்களைப் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) பற்றி மக்களுக்கு அறிமுகப்படுத்துவதற்கான கூட்டங்களையோ அல்லது நிகழ்ச்சிகளையோ பள்ளவாசலில் ஏற்பாடு செய்வதில் மார்க்க ரீதியாக எவ்விதத் தவறும் இல்லை. மேலும், அந்நிகழ்ச்சியில் கலந்து கொள்பவர்களுக்கு உணவளிப்பதிலும் எவ்விதத் தவறும் இல்லை. இருப்பினும், இத்தகைய நிகழ்ச்சிகளை 'மவ்லித்' என்று அழைக்கக் கூடாது என்றும், இது மீலாது விழா கொண்டாட்டத்தின் மார்க்கச் சட்டத்திற்குள் அடங்காது என்றும் மக்கள் மத்தியில் பரவலாக விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். அவ்வாறு செய்தால்தான், மீலாது விழா கொண்டாடுவது மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்ட ஒரு காரியம் என்று பாமர மக்கள் தவறாக எண்ணுவதைத் தடுக்க முடியும்.

நபியவர்களின் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) சுன்னாவின் (வழிமுறையின்) படி அமல் செய்வதற்கும், அதனை மக்கள் மத்தியில் பரப்புவதற்கும் அல்லாஹ் உங்களுக்குத் தவ்ஃபீக் (நற்பேறு) வழங்குவானாக! என நாம் உங்களுக்காக அல்லாஹ்விடம் பிரார்த்திக்கிறோம்.

அல்லாஹ்வே மிக அறிந்தவன்.

மூலநூட்கள்

பித்ஆ

மூலம்

இஸ்லாம் கேள்வி பதில் இணையதளம்

answer

சம்பந்தப்பட்ட தலைப்புகள்

at email

செய்திமடல்

தள செய்திகள் மற்றும் அவ்வப்போது புதுப்பிப்புகளைப் பெற அஞ்சல் பட்டியலில் இணையவும்

phone

இஸ்லாம் கேள்வி பதில் செயலி

உள்ளடக்கத்தை விரைவாக அணுகவும் ஆஃப்லைன் உலாவலுக்கும்

download iosdownload android