கணிதக் கணக்கீடுகளைக் கொண்டல்லாமல் பிறையைக் காண்பதற்குத் தொலைநோக்கிக் கருவிகளைப் பயன்படுத்துதல் ஆகுமானதே.

கேள்வி 1245

புதிய பிறை தோன்றி 30 மணி நேரம் கடப்பதற்கு முன்பு அதனை வெறும் கண்களால் பார்ப்பது சாத்தியமற்றது என்றும், அதுமட்டுமன்றி சில நேரங்களில் நிலவும் வானிலை சூழல் காரணமாகவும் பிறையைப் பார்க்க முடியாமல் போகிறது என்றும் கூறப்படுகிறது. இதனடிப்படையில், புதிய பிறை தென்படக்கூடிய சாத்தியமான நேரத்தைக் கணக்கிடுவதற்கும், ரமழான் மாதத்தின் தொடக்க நாளைத் தீர்மானிப்பதற்கும் வானியல் தகவல்களை நாடலாமா? அல்லது புனிதமிக்க ரமழான் மாத நோன்பைத் தொடங்குவதற்கு முன்பு நாம் கண்டிப்பாக புதிய பிறையைக் கண்ணால் பார்த்தே ஆக வேண்டுமா?

பதில்

அல்லாஹ்வுக்கே புகழும், இறைவனின் தூதர் மீது பிரார்த்தனையும் சாந்தியும் உண்டாகட்டும்,

பிறை பார்ப்பதற்குத் தொலைநோக்கி மற்றும் கண்காணிப்பு உபகரணங்களின் உதவியைப் பெறுவது அனுமதிக்கப்பட்ட ஒன்றாகும். ஆனால், ரமழான் மாதத்தின் தொடக்கத்தையோ அல்லது பெருநாளையோ உறுதி செய்வதில் வானியல் அறிவியலின் கணக்கீடுகளைச் சார்ந்திருப்பது அனுமதிக்கப்பட்டதல்ல. ஏனெனில், அல்லாஹ் நமக்கோ அவனது வேதத்திலோ அல்லது அவனது நபியின் சுன்னாவிலோ அவ்வாறு விதியாக்கவில்லை. மாறாக, நோன்பைத் தொடங்குவதற்கு ரமழான் மாதத்தின் பிறையைப் பார்ப்பதையும், நோன்பை விடுவதற்கும் ஈதுல் ஃபித்ர் பெருநாள் தொழுகைக்காக ஒன்று கூடுவதற்கும் ஷவ்வால் மாதத்தின் பிறையைப் பார்ப்பதையுமே ரமழான் மாதத்தின் தொடக்கத்திற்கும் அதன் முடிவிற்கும் அத்தாட்சியாக அல்லாஹ் நமக்கு விதியாக்கியுள்ளான். மேலும், பிறைகளை மனிதர்களுக்கும் ஹ்ஜ்ஜுக்கும் உரிய காலக் காட்டிகளாக ஆக்கியுள்ளான்.

எனவே, ரமழான் நோன்பு, பெருநாட்கள், அல்லாஹுத ஆலாவின் வீட்டை தரிசித்தல் (ஹஜ் யாத்திரை), தவறுதலாகக் கொலை செய்ததற்கான பரிகார நோன்பு, மனைவியைத் தாயோடு ஒப்பீடு(லிஹார்) செய்ததற்கான பரிகார நோன்பு போன்ற வழிபாடுகளில் எதனையும் இப்பிறைகளைக் கொண்டல்லாமல் வேறு எதனைக் கொண்டும் கால நிர்ணயம் செய்ய எந்தவொரு முஸ்லிமுக்கும் அனுமதி இல்லை.

அல்லாஹ் தஆலா கூறுகிறான்: {எனவே, உங்களில் யார் அந்த மாதத்தை அடைகிறாரோ, அவர் அதில் நோன்பு நோற்கட்டும்} (சூரா அல்-பகரா: 185). மேலும் அல்லாஹ் கூறுகிறான்: {(நபியே!) அவர்கள் உங்களிடம் பிறைகளைப் பற்றிக் கேட்கிறார்கள்; நீர் கூறுவீராக: அவை மனிதர்களுக்கும் ஹஜ்ஜுக்கும் உரிய காலக் காட்டிகளாகும்} (சூரா அல்-பகரா: 189). நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்: [நீங்கள் பிறையைப் பார்த்து நோன்பு நோற்பீர்களாக; மேலும் பிறையைப் பார்த்து நோன்பை விடுப்பீர்களாக. உங்களுக்கு மேகமூட்டம் ஏற்பட்டுவிட்டால், எண்ணிக்கையை முப்பதாக முழுமைப்படுத்துங்கள்.]

இதனடிப்படையில், வானம் தெளிவாக இருக்கும் போதோ அல்லது மேகமூட்டமாக இருக்கும் போதோ தங்களது பகுதியில் பிறையைக் காணாதவர்கள், ஷஃபான் மாதத்தின் எண்ணிக்கையை முப்பது நாட்களாக முழுமைப்படுத்துவது கடமையாகும். இது, வேறொரு நாட்டில் பிறை தென்படுவது மார்க்க ரீதியாக நிரூபிக்கப்படாத வரை உள்ள சட்டமாகும். ஒருவேளை, வேறொரு நாட்டில் பிறை தென்பட்டது மார்க்க வரம்புகளுக்குட்பட்டு நிரூபிக்கப்பட்டுவிட்டால், அவர்கள் நோன்பு நோற்பது கடமையாகும் என்பது பெரும்பான்மையான மார்க்க அறிஞர்களின் கூற்றாகும்.

அல்லாஹ்வே மிக அறிந்தவன்."

மூலநூட்கள்

பிறை பார்த்தல்

மூலம்

அஷ்ஷெய்க் முஹம்மத் ஸாலிஹ் அல்முனஜ்ஜித்

at email

செய்திமடல்

தள செய்திகள் மற்றும் அவ்வப்போது புதுப்பிப்புகளைப் பெற அஞ்சல் பட்டியலில் இணையவும்

phone

இஸ்லாம் கேள்வி பதில் செயலி

உள்ளடக்கத்தை விரைவாக அணுகவும் ஆஃப்லைன் உலாவலுக்கும்

download iosdownload android