குர்ஆன், மலக்குகள், நபிமார்கள், மற்றும் ஸஹாபாக்கள் பொருட்டால் வேண்டுதல் செய்வதன் மார்க்கச் சட்டம்.

கேள்வி 220340

பின்வரும் பிரார்த்தனையில் (துஆவில்) அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் பொருத்தம் இல்லாத அல்லது மார்க்கத்தில் ஹராமாக்கப்பட்ட ஏதேனும் வாசகங்கள் உள்ளனவா? அவ்வாறு ஹராமாக்கப்பட்டவை இருந்தால் அவை யாவை? குர்ஆன் மற்றும் சுன்னாவிலிருந்து அதற்குரிய சான்றுகள் என்ன? "யா அல்லாஹ்! குர்ஆனைக் கொண்டும் அதன் எழுத்துக்களைக் கொண்டும் உன்னிடம் வேண்டுகிறேன். ஜிப்ரீலைக் கொண்டும் அவரது தூதுத்துவத்தைக் கொண்டும், மீகாயீலைக் கொண்டும் அவரது நம்பகத்தன்மையைக் கொண்டும், இஸ்ராஃபீலைக் கொண்டும் அவரது சூர் ஊதுதலைக் கொண்டும் உன்னிடம் வேண்டுகிறேன். எங்கள் தலைவர் நூஹ் மற்றும் அவரது சந்ததிகளைக் கொண்டும், எங்கள் தலைவர் இப்ராஹீம் மற்றும் அவரது தூய நட்பைக் கொண்டும், எங்கள் தலைவர் மூஸா மற்றும் அவரது உன்னுடனான உரையாடலைக் கொண்டும் வேண்டுகிறேன். எங்கள் தலைவர் முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) மற்றும் அவரது பரிந்துரையைக் கொண்டும் உன்னிடம் வேண்டுகிறேன். அபூபக்ர் சித்தீக் (ரழியல்லாஹு அன்ஹு) மற்றும் அவரது கிலாஃபத்தைக் கொண்டும், உமர் (ரழியல்லாஹு அன்ஹு) மற்றும் அவரது சத்தியத்தின் அசத்தியத்திற்கும் இடையிலான வேறுபாடு எனும் தன்மையைக் கொண்டும், உஸ்மான் (ரழியல்லாஹு அன்ஹு) மற்றும் அவரது வெட்கத்தைக் கொண்டும், அலி(ரழியல்லாஹு அன்ஹு)  மற்றும் அவரது வீரத்தைக் கொண்டும் உன்னிடம் வேண்டுகிறேன்." என்பதுதான் அந்த பிரார்த்தனை.

பதில்

அல்லாஹ்வுக்கே புகழும், இறைவனின் தூதர் மீது பிரார்த்தனையும் சாந்தியும் உண்டாகட்டும்,

கேள்வி கேட்டவர்  தனது துஆவில் பல வகையான வேண்டுதல்களை குறிப்பிட்டுள்ளார், அவற்றை நான்கு வகைகளாகப் பிரிக்கலாம்: முதலாவது, குர்ஆனின் பொருட்டால் கேட்டல்.; இரண்டாவது, நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) பொருட்டால் கேட்டல்; மூன்றாவது, மலக்குகள், நபிமார்கள் மற்றும் ஏனைய நல்லடியார்களின் பொருட்டால் கேட்டல்; நாங்களாவது, அதன் அர்த்தமே விளங்காத ஒரு வேண்டுதல் முறையாக இருக்கிறது.

முதலாவது வகையைப் பொறுத்தவரை:
பிரார்த்தனை செய்யக்கூடியவர் குர்ஆனைக் கொண்டு தனது இறைவனிடம் வேண்டுவது அனுமதிக்கப்பட்டதாகும். ஏனெனில், இது அல்லாஹ்வின் பண்புகளில் ஒன்றைக் கொண்டு அல்லாஹ்விடம் வேண்டுதல் செய்வதாக இருக்கிறது. அல்லாஹ்வின் பண்புகளை முன்வைத்து அவனிடம் வேண்டுதல் மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்ட ஒரு நற்செயலாகும்.

இதற்கான சான்றுகளில் ஒன்று, இமாம் முஸ்லிம் (2202) மற்றும் திர்மிதி (2080) ஆகிய நூல்களில் உஸ்மான் பின் அபில் ஆஸ் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் மூலமாக அறிவிக்கப்படும் ஒரு ஹதீஸ் ஆகும்:

நபி (ஸல்லல்லாஹு أலைஹி வஸல்லம்) அவர்கள், தமக்கு ஏதேனும் நோய் அல்லது வலி ஏற்படும் போது ஓதுமாறு பின்வரும் துஆவை அவருக்குக் கற்றுக்கொடுத்தார்கள்: [நான் உணர்கின்ற மற்றும் அஞ்சுகின்ற தீங்கிலிருந்து அல்லாஹ்வின் கண்ணியத்தையும் அவனது ஆற்றலையும் கொண்டு பாதுகாப்புத் தேடுகிறேன்]

அதேபோல நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் இந்த துஆவும் அதற்கான ஒரு சான்றாகும்:

[அல்லாஹ்வே! உன்னுடைய மறைவான ஞானத்தைக் கொண்டும், படைப்புகளின் மீது உனக்குள்ள ஆற்றலைக் கொண்டும் உன்னிடம் வேண்டுகிறேன்; உயிரோடு இருப்பது எனக்குச் சிறந்தது என நீ அறிந்திருக்கும் வரை என்னை உயிரோடு வாழ வைப்பாயாக, மரணிப்பது எனக்குச் சிறந்தது என நீ அறிந்தால் என்னை மரணிக்கச் செய்வாயாக] (இமாம் அஹ்மதின் "முஸ்னத்" 30/265 நூல், முஅஸ்ஸஸதுர் ரிஸாலா பதிப்பின் ஆய்வாளர்களால் இது ஸஹீஹ் என உறுதி செய்யப்பட்டுள்ளது).

அல்லாஹ்வின் பண்புகளை முன்வைத்து அவனிடம் வேண்டுவது மார்க்க வரம்பிற்குட்பட்ட அனுமதிக்கப்பட்ட நற்செயல் என்பதை நிரூபிக்கும் சான்றுகள் மார்க்கத்தில் ஏராளமானவை உள்ளன.

அல்லாஹ் தஆலாவின் வார்த்தையும் அவனது பண்புகளில் ஒன்றாகும். புனிதமிக்க அல்-குர்ஆன் என்பது அல்லாஹ்வின் வார்த்தை ஆகும்; எனவே அதன் பொருட்டால் வேண்டுவது அனுமதிக்கப்பட்டதாகும். இதனால்தான் இமாம் அஹ்மத் மற்றும் ஏனைய ஸலஃபுகள், அல்லாஹ்வின் வார்த்தை  படைக்கப்பட்ட ஒன்றல்ல என்பதற்கு ஆதாரமாக முன்வைத்த சான்றுகளில், நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் பின்வரும் கூற்றும் ஒன்றாகும்: "அல்லாஹ்வின் முழுமையான வார்த்தைகளைக் கொண்டு நான் பாதுகாப்புத் தேடுகிறேன்." ஸலஃபுகள் அதற்கு விளக்கமளிக்கும் போது  கூறினார்கள்: "நிச்சயமாக நபியவர்கள் அவற்றைக் கொண்டு பாதுகாப்புத் தேடியுள்ளார்கள்; படைக்கப்பட்ட ஒன்றைக் கொண்டு பாதுகாப்புத் தேடப்பட மாட்டாது." (நூல்: 'காயிதா ஜலீலா ஃபித் தவஸ்ஸுல் வல் வஸீலா' நூல் 1/297).

ஷேக் இப்னு உஸைமீன் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: "புனிதமிக்க அல்-குர்ஆனைக் கொண்டு பிரார்த்திப்பது என்பது, ஒரு மனிதன் தனது இறைவனின் வார்த்தையைக் கொண்டு அவனிடம் வேண்டுவதைக் குறிக்கும்... அல்-குர்ஆன் என்பது அல்லாஹ்வின் பண்புகளில் ஒன்றாகும். ஏனெனில், அது அல்லாஹ்வின் வார்த்தையாகும்; அவன் அதன் வார்த்தைகளை உண்மையாகவே மொழிந்தான், மேலும் அதன் அர்த்தங்களை நாடினான். எனவே அது அவனது வார்த்தையாகும். அது அவனது பண்புகளில் ஒரு பண்பாக இருக்கும் பட்சத்தில், அதைக் கொண்டு வேண்டுவது அனுமதிக்கப்பட்டதாகும்." (நூல்:ஃபதாவா நூருன் அலத் தர்ப்).

இரண்டாவது: நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் உடலைக் கொண்டு வேண்டுதல். இது பிற்காலத்தைச் சேர்ந்த பலரின் வழக்கத்தில் அறியப்பட்ட வேண்டுதல் முறையாகும். அதாவது, "அல்லாஹ்வே! முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களைக் கொண்டு உன்னிடம் வேண்டுகிறேன்" அல்லது "முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் அந்தஸ்தைக் கொண்டு உன்னிடம் வேண்டுகிறேன்" என்று கூறுவதாகும். இந்த அர்த்தத்தில் எந்தவொரு நபிவழியும் வரவில்லை. இமாம் அபூ ஹனீஃபாவும் அவரது தோழர்களும் இத்தகைய செயல் அனுமதிக்கப்பட மாட்டாது என்று கூறியுள்ளதுடன், அதனை விலக்கியும் உள்ளனர். அவர்கள் கூறும்போது: "படைக்கப்பட்ட ஒன்றைக் கொண்டு அல்லாஹ்விடம் உதவி கேட்கப்பட மாட்டாது; மேலும் 'உன்னுடைய நபிமார்களின் உரிமையைக் கொண்டு உன்னிடம் கேட்கிறேன்' என்று எவரும் கூறக் கூடாது" என்றனர். ஹனஃபி மத்ஹபைச் சார்ந்த இமாம் அஸ்-ஸைலயீ அவர்களின் "தப்யீனுல் ஹகாயிக்" (6/31) என்ற நூலில்: "இமாம் அபூ யூஸுஃப் அவர்கள் கூறினார்கள்: இன்னாரின் உரிமையைக் கொண்டும், உன்னுடைய நபிமார்கள் மற்றும் தூதர்களின் உரிமையைக் கொண்டும் கேட்பதை நான் வெறுக்கிறேன் (மக்ரூஹ் எனக் கருதுகிறேன்)" என்று பதிவு செய்யப்பட்டுள்ளது. ஏனெனில், அல்லாமா அல்-காஸானீ அவர்கள் தமது "பதாயியுஸ் ஸனாயியஃ" (5/126) என்ற நூலில் குறிப்பிட்டது போல: "அல்லாஹ்வின் மீது படைப்புகளில் எவருக்கும் எவ்வித உரிமையும் கிடையாது" என்பதால் ஆகும்.

ஷேக் இப்னு உஸைமீன் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: "மார்க்க அறிஞர்களின் கருத்துகளில் “நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் அந்தஸ்தைக் கொண்டு வேண்டுதல் செய்வது ஹராம் என்பதே மிக வலுவானதாகும் . எனவே ஒரு மனிதன்: 'அல்லாஹ்வே! உன்னுடைய நபியின் அந்தஸ்தைக் கொண்டு எனக்கு இன்னின்னவற்றைத் தருவாயாக' என்று கூறுவது அனுமதிக்கப்பட மாட்டாது. ஏனெனில், நாடப்பட்ட காரியம் நிறைவேறுவதில் எந்தவொரு தாக்கம் அல்லது காரணி இருக்கிறதோ, அது மட்டுமே நெருங்குவதற்குரிய வழிமுறையாக ஆக முடியும். பிரார்த்தனை செய்யக்கூடிய தனிமனிதரைப் பொறுத்தவரை, நபியவர்களின் அந்தஸ்து என்பது அவரது பிரார்த்தனை நிறைவேறுவதில் எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தாது. அதில் எவ்வித தாக்கமும் இல்லாதபோது, அது ஒரு சரியான காரணமாக அமைய முடியாது. மேலும், நாடப்பட்ட காரியம் நிறைவேறுவதில் தாக்கம் செலுத்தக்கூடிய ஒரு சரியான காரணத்தைக் கொண்டல்லாமல் அல்லாஹ்விடம் பிரார்த்திக்கக் கூடாது. நபியவர்களின் அந்தஸ்து என்பது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களுக்கு மட்டுமே உரிய தனித்துவமான சிறப்பும், அவர்களுக்கு மட்டுமே உரிய பெருமையுமாகும். ஆனால் நாமோ, அதன் மூலம் எவ்விதப் பயனும் பெறப்போவதில்லை; மாறாக நாம்  நம் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் மீது கொள்ளும் ஈமானைக் கொண்டு மட்டுமே பயன் பெறுகிறோம்." (ஃபதாவா நூருன்அலத் தர்ப்).

ஷைகுல் இஸ்லாம் இப்னு தைமிய்யா (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

"ஒருவர், 'உன்னுடைய நபி முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களைக் கொண்டு உன்னிடம் வேண்டுகிறேன்' என்று கூறுவதானது, அவர்: 'அவர் மீது நான் கொண்ட நம்பிக்கையை கொண்டும், அவர் மீதான என் அன்பைக் கொண்டும் உன்னிடம் வேண்டுகிறேன்; அவர் மீது நான் கொண்ட ஈமான் மற்றும் அன்பை காரணியாக முன்வைத்து உன்னிடம் நெருக்கத்தைத் தேடுகிறேன்' என்ற அர்த்தத்தையே குறிக்கிறது, இந்த வேண்டுதல் எவ்வித கருத்து வேறுபாடும் இன்றி முற்றிலும் அனுமதிக்கப்பட்ட ஒன்று நீங்கள் சொல்லியிருக்கிறீர்கள் தானே, என்ன கேட்கப்பட்டால்;

அதற்கு பின்வருமாறு. பதிலளிக்கப்படும்: இந்த அர்த்தத்தை எவர் நாடுகிறாரோ, அவர் இந்த விவகாரத்தில் எவ்வித கருத்து வேறுபாடும் இன்றி மிகச் சரியாகவே செய்துள்ளார். மேலும், நபியவர்களின் மரணத்திற்குப் பின்னால்  நபியின் பொருட்டால் பிரார்த்தனை செய்தார்கள் என்று முன்சென்ற நன்மக்களில் ஸஹாபாக்கள், தாபியீன்கள், மற்றும் இமாம் அஹ்மத் போன்றவர்களிடமிருந்து அறியப்பட்ட விடயங்களும் இந்த அர்த்தத்திலேயே சுமத்தப்படுமேயானால், மிகவும் நல்லது. நிலைமை இவ்வாறு இருந்தால் இந்த விவகாரத்தில் எவ்வித கருத்து வேறுபாடும் இருக்காது.

இருப்பினும், பொது மக்களில் பெரும்பாலானோர் இந்த வாசகத்தை வெறுமனே உச்சரிக்கிறார்களே தவிர, இந்த உன்னதமான அர்த்தத்தை அவர்கள் நாடுவது கிடையாது. எனவே, இத்தகையோரின் செயலைத்தான் அறிஞர்கள் மிகக் கடுமையாக மறுத்துள்ளார்கள்.

இது எதனைப் போன்றது என்றால், ஸஹாபாக்கள் நபியவர்களைக் கொண்டு வேண்டுதல் செய்வதாகக் கூறும்போது, அவர்கள்: 'நபியவர்களின் பிரார்த்தனையையும்  அவர்களின் பரிந்துரையையு' முன்வைப்பதையே நாடினார்கள். இது எவ்வித கருத்து வேறுபாடும் இன்றி அனுமதிக்கப்பட்டதாகும். ஆனால், நம்முடைய காலத்தில் வாழும் பெரும்பாலான மக்கள், இந்த வாசகத்தின் மூலம் அந்த உயிருடன் இருப்பவரிடம் துஆ செய்யக் கோரும் அர்த்தத்தை நாடுவது கிடையாது." (முற்றிற்று - 'காயிதா ஜலீலா' நூல் பக்கம் 119).

மூன்றாவதாக: படைப்புகளின் உடலைக்  கொண்டு வேண்டுதல்.

இது மார்க்க ரீதியாக முற்றிலும் நிராகரிக்கப்பட வேண்டிய ஒரு மார்க்கப் புதுமை ஆகும்; மேலும், இது வழக்கத்திலும் மொழிப் பிரயோகத்திலும் கூட நிராகரிக்கப்பட வேண்டிய ஒன்றாகும். இதில் அல்லாஹ்வின் கட்டளைக்கு முந்திச் செல்லுதலும், அவன் அனுமதிக்காத ஒரு வழிமுறையைக் கையாளுதலும் அடங்கியுள்ளன. அத்துடன், பிரார்த்தனை செய்யக்கூடியவர், வேண்டுதல் செய்யக்கூடியவர் மற்றும் பரிந்துரை தேடக்கூடியவர் ஆகியோரின் உண்மையான நோக்கங்களுக்கு இது முரணாக அமைந்திருப்பதுடன், பிரார்த்தனையின் போது பேணப்பட வேண்டிய ஒழுக்க வரம்புகளையும் பாலாக்கக்கூடியதாக உள்ளது.

ஷைகுல் இஸ்லாம் இப்னு தைமிய்யா அவர்கள் கூறுகிறார்கள்: "ஆனால், பிரார்த்தனை செய்யக்கூடிய இவருக்காக எந்தவொரு பரிந்துரையும் செய்யாத, இவருடைய தேவைக்காக இறைவனிடம் கையேந்தாத, இன்னும் சொல்லப்போனால் இவருடைய பிரார்த்தனையைப் பற்றியே எவ்வித விபரமும் அறியாத ஒருவரிடம் பரிந்துரை தேடுவது என்பது அரபு மொழியியல் அடிப்படையிலும் சரி, தான் என்ன பேசுகிறோம் என்று உணர்ந்து பேசக்கூடியவர்களின் வழக்கிலும் சரி எவ்விதத்திலும் 'பரிந்துரை ' என்பதாகாது..." (அல்-ஃபதாவா' நூல் 1/242).

அவர்கள் மேலும் கூறுகிறார்கள்: "ஒரு மனிதன், மக்கள் கட்டுப்படக்கூடிய ஒரு பெரும் தலைவரிடம் சென்று: 'உமக்குக் கட்டுப்பட்டு நடக்கக்கூடிய இன்னாரின் கீழ்ப்படிதலைக் கொண்டும், உமக்கு அவர் கட்டுப்பட்டதற்காக அவர் மீது நீர் கொண்டுள்ள அன்பைக் கொண்டும், அவரது கீழ்ப்படிதலினால் உம்மிடம் உள்ள அவரது அந்தஸ்தைக் கொண்டும் உங்களிடம் வேண்டுகிறேன்' என்று கூறினால், அவர் அத்தலைவரிடம் அவருக்கு எவ்விதத் தொடர்பும் இல்லாத ஒரு அந்நியமான விடயத்தை முன்வைத்தே கேட்டுள்ளார். அதேபோலத்தான், தனக்கு நெருக்கமான அந்த நல்ல மனிதர்களுக்கு அல்லாஹ் செய்யும் நன்மைகளும், அவர்கள் அவனை வணங்கி அவனுக்குக் கட்டுப்பட்டு நடந்ததற்காக அவர்கள் மீது அவன் கொண்டுள்ள அன்பும் இருக்கின்றன; அவற்றில் இவர்களை முன்வைத்து வேண்டக்கூடிய இந்த மனிதரின் பிரார்த்தனை ஏற்றுக்கொள்ளப்படுவதற்கான எந்தவொரு கட்டாயக் காரணமும் இல்லை.

"மாறாக, இவரது பிரார்த்தனை ஏற்றுக்கொள்ளப்படுவதற்கு இரண்டு காரணங்களே இருக்க முடியும்: ஒன்று, இவர் அந்த நல்ல மனிதர்களைப் பின்பற்றி அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டு நடந்திருக்க வேண்டும்; அல்லது அந்த நல்ல மனிதர்கள் இவருக்காகப் பரிந்துரை செய்திருக்க வேண்டும். எனவே, இங்கும் அங்கும் இவ்விரு காரணங்களும் இல்லாதபோது, அங்கு பிரார்த்தனை நிறைவேறுவதற்குரிய எந்தவொரு காரணமும் கிடையாது.

இமாமவர்கள் கூறுகிறார்கள்: "பிரார்த்தனை செய்யக்கூடியவர்: 'அல்லாஹ்வே! மலக்குகள், நபிமார்கள், நன்மக்கள் மற்றும் ஏனையோரில் இன்னாரின் உரிமையைக் கொண்டும், இன்னாரின் அந்தஸ்தைக் கொண்டும், இன்னாரின் கண்ணியத்தைக் கொண்டும் உன்னிடம் வேண்டுகிறேன்' என்று கூறுவது, அந்த நல்ல மனிதர்களுக்கு அல்லாஹ்விடம் அந்தஸ்து இருக்கிறது என்பதை குறிக்கிறது. இது உண்மைதான்; ஏனெனில், அவர்களுக்கு அல்லாஹ்விடம் உன்னதமான நிலையும், அந்தஸ்தும், கண்ணியமும் நிச்சயமாக உண்டு. அது, அல்லாஹ் அவர்களின் தகுதிகளை உயர்த்துவதையும், அவர்களின் மதிப்பை மகத்துவப்படுத்துவதையும், அவர்கள் பரிந்துரை செய்யும் போது அவர்களின் பரிந்துரையை ஏற்றுக்கொள்வதையும் அவசியமாக்குகிறது... ஆனால், அவர்கள் இவருக்காக எந்தவொரு பிரார்த்தனையோ அல்லது பரிந்துரையோ செய்யாதபோது, இவர் தமக்கு எவ்விதத் தொடர்பும் இல்லாத, தமக்கு எவ்விதப் பயனும் அளிக்காத ஒரு அந்நியமான விஷயத்தைக் கொண்டே அல்லாஹ்விடம் கேட்டுள்ளார்."

இமாமவர்கள் மற்றொரு இடத்தில் கூறுகிறார்கள்: "அந்த நல்ல மனிதரை அல்லாஹ் கண்ணியப்படுத்துவதில், இந்த மனிதரின் பிரார்த்தனை ஏற்றுக்கொள்ளப்படுவதற்கான எந்தவொரு காரணமும் இல்லை. ஒருவேளை அவர்: 'இதன் காரணம் என்னவென்றால், அவர்களின் பரிந்துரையும் அவர்களின் பிரார்த்தனையும்தான்' என்று கூறினால்; அந்த நல்ல மனிதர் உண்மையில் இவருக்காகப் பரிந்துரை செய்து, பிரார்த்தனையும் செய்திருந்தால் மட்டுமே அது உண்மையான காரணமாக இருக்கும். ஆனால், அவர் இவருக்காகப் பரிந்துரையும் செய்யாமல், பிரார்த்தனையும் செய்யாதபோது அங்கு எந்தவொரு காரணமும் கிடையாது."

மார்க்கப் பேரறிஞரான ஷைகுல் இஸ்லாம் இப்னு தைமிய்யா (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள், இந்த விவகாரத்தை தங்களின் பரக்கத் பொருந்திய "காயிதா ஜலீலா ஃபித் தவஸ்ஸுல் வல் வஸீலா" (தவஸ்ஸுல் மற்றும் வஸீலா குறித்த முக்கியமான அடிப்படை விதி) என்ற நூலில் மிக விரிவாகவும், தெளிவாகவும் விளக்கியுள்ளார்கள்.

நான்காவதாக: கேள்வி கேட்டவர் தனது துஆவில் ஸூர் ஊதுதல், நூஹ் நபியின் சந்ததிகள், சித்தீக்கின் கிலாஃபத், அலியின் வீரம் போன்றவற்றை முன்வைத்து குறிப்பிட்டுள்ள வேண்டுதல் வகைகள் யாவும், பிரார்த்தனை செய்யக்கூடியவர் அதன் அர்த்தத்தை சிந்தித்துப் பார்க்காமல், வெறும் அடுக்கு மொழிக்காக அமைத்தவையாகும். எனவே, இது அர்த்தமற்ற ஒரு பேச்சாகும்; தான் என்ன பிரார்த்திக்கிறோம் என்பதில் தன் சிந்தனையை ஒருமுகப்படுத்திய எந்தவொரு மனிதரிடமிருந்தும் இத்தகைய ஒரு பிரார்த்தனை வெளிப்படாது. நூஹ் நபியின் சந்ததிகளில் முஸ்லிம்களும், காஃபிர்களும், நல்லவர்களும், பாவிகளும் இருக்கும்போது, அவர்களின் சந்ததி என்பது இந்த மனிதரின் பிரார்த்தனை ஏற்றுக்கொள்ளப்படுவதற்கு எவ்வாறுதான் ஒரு காரணமாக அமைய முடியும்?! அதேபோல, சித்தீக்கின் கிலாஃபத், அல்லது அலியின் வீரம், அல்லது உமரின் நீதி, அல்லது உஸ்மானின் வெட்கம், அல்லது இப்ராஹீம் நபியை அல்லாஹ் தனது தூய நண்பராக ஏற்றுக் கொண்ட சிறப்பு ஆகியவை இந்த மனிதரின் பிரார்த்தனை நிறைவேறுவதற்கு எவ்வாறுதான் காரணமாக முடியும்?!

இப்ராஹீம் நபியின் அந்தத் தூய நட்போடு இந்த மார்க்க வரம்பை மீறிய பிரார்த்தனையாளருக்கு என்ன தொடர்பு இருக்கிறது? இந்த உன்னதமான, மிக உயர்ந்த தகுதியிலிருந்து இவருக்குக் கிடைக்கக்கூடிய பங்குதான் என்ன?!

இவை யாவும் நபிவழிக்கு முரண்படுவதாலும், மனிதர்களால் செயற்கையாகப் புனையப்பட்ட புதிய துஆக்களின் வகையைச் சார்ந்தது என்பதாலும், பிரார்த்தனையின் போது கட்டாயப்படுத்தி அடுக்கு மொழிகளை அமைத்துக் கொள்வதாலும் ஏற்படக்கூடிய விளைவுகளேயன்றி வேறில்லை. இதனால்தான், பிரார்த்தனையின் போது இத்தகைய அடுக்கு மொழிகளைக் கையாளுவதை மார்க்கம் ஏன் தடை செய்திருக்கிறது என்ற காரணம் தெளிவாகின்றது.

இமாம் இப்னு பத்தால் (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் தமது "ஷரஹ் ஸஹீஹுல் புகாரி (புகாரி கிரந்தத்திற்கான விரிவுரை)", பிரார்த்தனைகளில் அடுக்கு மொழிகளை கொண்டு வருவதற்கு கஷ்டப்படுவது, உள்ளத்தில் ஏற்பட வேண்டிய அச்சபக்தியையும் பணிவையும் தடுக்கக் கூடியதாகும். பராமுகமாகவும் வீணான சிந்தனையிலும் மூழ்கியுள்ள உள்ளத்துடன் செய்யப்படும் துஆவை அல்லாஹ் ஏற்றுக்கொள்ள மாட்டான். "நிச்சயமாக, பராமுகமான மற்றும் அலட்சியமான சிந்தனையுடன் செய்யப்படும் பிரார்த்தனையை அல்லாஹ் ஏற்றுக்கொள்ள மாட்டான்] என ஹதீஸில் வந்துள்ளது. "மேலும், தமது பிரார்த்தனையில் அடுக்கு மொழிகளைத் தேடுபவரின் முழு முழுசிரத்தையும் வாக்கியங்களை அழகாக இணைப்பதிலும், அவற்றை அடுக்கு மொழியாக மாற்றுவதிலும் மட்டுமே இருக்கும்." எவர் இத்தகைய சிரத்தையின் காரணமாக தனது சிந்தனையை ஆழ்த்தி, தனது சிந்தனையை சிரமத்திற்குள்ளாக்குகிறாரோ, அவரது உள்ளம் அச்சபக்தியை விட்டும் பராமுகமாகவும் அலட்சியமான நிலையிலுமே இருக்கும். (ஷரஹு ஸஹீஹில் புகாரி (புகாரி கிரந்தத்திற்கான விரிவுரை) (10/97).

மூலநூட்கள்

துஆ
பித்ஆ
வணக்கத்திற்குரிய தகுதி

மூலம்

இஸ்லாம் கேள்வி-பதில் இணையதளம்

at email

செய்திமடல்

தள செய்திகள் மற்றும் அவ்வப்போது புதுப்பிப்புகளைப் பெற அஞ்சல் பட்டியலில் இணையவும்

phone

இஸ்லாம் கேள்வி பதில் செயலி

உள்ளடக்கத்தை விரைவாக அணுகவும் ஆஃப்லைன் உலாவலுக்கும்

download iosdownload android